பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

குறிப்பிட்ட பணியில் திறமையானவர்கள் மற்றும் நிபுணர்களைச் சேர்க்க பக்கவாட்டுப் பணிச்சேர்ப்பு நியமனங்களை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒழுங்குமுறைப்படுத்தியுள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 22 MAR 2022 7:18PM by PIB Chennai

குறிப்பிட்ட பணியில் திறமையானவர்கள் மற்றும் நிபுணர்களை சேர்க்க பக்கவாட்டுப் பணிச்சேர்ப்பு  நியமனங்களைப்  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒழுங்குமுறைப்படுத்தியுள்ளது என்று  மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

21 அமைச்சகங்கள் மற்றும் மத்திய அரசின் துறைகளுக்கு 3 இணைச்  செயலாளர்கள், 18 இயக்குனர்கள் மற்றும் 9 துணைச்  செயலாளர்கள் புதிதாகச்  சேர்க்கப்பட்டனர்.

இவர்களுடன், புதுதில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாக மையத்தில் (ஐஐபிஏ)  நடந்த 15 நாள் பயிற்சி நிகழச்சியில் மத்திய அமைச்சர் கலந்துரையாடினார்.

பக்கவாட்டுப் பணிச்சேர்ப்பு நியமனங்களை முந்தை அரசுகளும் செய்துள்ளன எனவும், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தலைமைப்  பொருளாதார ஆலோசகராக கடந்த 1972ம் ஆண்டு சேர்க்கப்பட்டார் எனவும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நினைவு கூர்ந்தார்.  

ஆனால், இந்த பக்கவாட்டுப் பணிச்சேர்ப்பு நியமனங்களை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு யுபிஎஸ்சி மூலம் மெரிட் மற்றும் அனுபவம் அடிப்படையில் வெளிப்படையான முறையில் தேர்வு செய்கிறது என அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய பல முன்னணித்  திட்டங்களுக்கு புதிய திறமையான நிபுணர்கள் தேர்வு செய்வதுதான், இந்த பக்கவாட்டுப் பணிச்சேர்ப்பு நியமனத்தின் இறுதியான இலக்கு என மத்திய அமைச்சர் கூறினார்.

உலகளவில் இந்தியா முன்னணியில் சென்று கொண்டிருக்கும் வேளையில், இந்த நியமனங்கள்  நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

பெருநிறுவனங்கள் மற்றும் அரசுத்துறைக்கும் இடையே உள்ள இடைவெளி குறைந்து வருவதாகவும், இன்றைய புதிய வேலைகளுக்கான அணுகுமுறையில் அதிகளவிலான திறமை தேவைப்படுகிறது என்றும் மத்திய அமைச்சர் கருத்து தெரிவித்தார்.

உலகளவில் இந்தியாவின் நிலை உயர்ந்து வருவதால், புதிதாக சேர்ந்த உயர் அதிகாரிகள்  தங்களுக்குக்  கிடைந்த சிறந்த வாய்ப்பைப்  பயன்படுத்தி, நாட்டின் மேம்பாட்டுக்கு பங்களிக்க முடியும் எனவும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

இன்றைய முயற்சிகள், அடுத்த 25 ஆண்டுகளில், 100வது சுதந்திரத்தை கொண்டாடும்போது, இந்தியாவை  உலகின் முன்னணி நாடாக மாற்ற முடியும் எனவும் அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஐஐபிஏ தலைமை இயக்குனர் திரு எஸ்.என். திரிபாதி, பதிவாளர் திரு அமிதாப் ரஞ்சன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

**************



(Release ID: 1808412) Visitor Counter : 173