பிரதமர் அலுவலகம்

கொவிட்டுக்குப் பிந்தைய அமைதியான, நிலையான, வளமான உலகத்திற்கு பங்களிப்பு செய்ய இந்தியா-ஜப்பான் உச்சி மாநாட்டின் கூட்டறிக்கை

Posted On: 19 MAR 2022 10:30PM by PIB Chennai

மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடியுடன் 14-வது இந்தியா – ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டிற்காக 2022 மார்ச் 19-20-ல் மேன்மை தங்கிய ஜப்பான் பிரதமர் திரு.கிஷிடா ஃபூமியோ இந்தியாவுக்கு தமது முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டார். இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டம் ஜப்பானுடனான தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்ட 70-வது ஆண்டு ஆகியவை இணைந்த குறிப்பிடத்தக்க தருணத்தில் இந்த உச்சி மாநாடு நடைபெறுவதை இரு நாடுகளின் பிரதமர்களும் அங்கீகரித்தனர். கடந்த உச்சி மாநாட்டிற்குப் பின் ஏற்பட்ட நிகழ்வுகளை ஆய்வு செய்த இவர்கள் ஒத்துழைப்புக்கான விரிந்த பகுதிகள் பற்றி விவாதித்தனர். பின்னர் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

இந்தியா – ஜப்பான் இடையே சிறப்பு உத்திகள் வகுத்தல் மற்றும் உலகளாவிய பங்களிப்பை இரு பிரதமர்களும் மறுஉறுதி செய்தனர். பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்தின் ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதற்கும் பாராட்டு தெரிவித்தனர். இந்தியா – பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, வளம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு அவர்கள் உறுதிபூண்டனர். 2019-ல் பிரதமர் மோடி அறிவித்த இந்தியா – பசிபிக் கடல்கள் முன்முயற்சியை ஜப்பான் பிரதமர் கிஷிடா வரவேற்றார்.

ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானங்களை மீறி வடகொரியா அணு ஆயுதங்கள் தாங்கிய ஏவுகணை சோதனைகள் நடத்துவதற்கு இரு பிரதமர்களும் கண்டனம் தெரிவித்தனர். வடகொரியா முற்றிலுமாக அணுஆயுதங்களை கைவிட வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தினர். ஆப்கானிஸ்தானில் அமைதியும், நிலைத்தன்மையும் ஏற்பட நெருக்கமாக ஒத்துழைப்பதற்கு தங்களின் விருப்பத்தை வெளியிட்டனர். பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் அதிகரித்திருப்பது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த இரு பிரதமர்களும் விரிவாகவும், நீடித்த முறையிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு சர்வதேச ஒத்துழைப்பை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

2021 ஆகஸ்ட் மாதம் ஐ.நா.பாதுகாப்பு சபையின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றதற்கும் “சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு பராமரிப்பு: கடல் பாதுகாப்புஎன்பது பற்றிய உயர்நிலை திறந்த விவாதத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கியதற்கும் பிரதமர் கிஷிடா வாழ்த்து தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க கொவிட்-19-ஐ முறியடிப்பதற்கான உலகளவிய முயற்சிகளில் இந்தியாவும், ஜப்பானும் தொடர்ந்து பங்களிப்பு செய்வதை இரு பிரதமர்களும் உறுதிப்படுத்தினர். கொவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் முன்முயற்சிகளை குறிப்பாக மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகள் வழங்குவதை உறுதிபடுத்துதல் மற்றும் தடுப்பூசி தோழமை திட்டத்தின் மூலம் பாதுகாப்பான, பயன்தரத்தக்க தடுப்பூசிகள் வழங்குதல் போன்றவற்றை பிரதமர் கிஷிடா பாராட்டினார்.

கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு ஜப்பானின் உதவியை பாராட்டிய பிரதமர் மோடி சுமார் 300 பில்லியன் யென் (ரூ.20,400 கோடி) கடன் வழங்குவதற்கு கையெழுத்திட்டிருப்பதை வரவேற்றார். அதே போல் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஒத்துழைப்பின் பகுதியாக ஜப்பானில் உள்ள இரண்டு நிறுவனங்களில் கடந்த ஆண்டு 3,700 இந்தியர்கள் பயிற்சி பெற்றிருப்பதை இரு பிரதமர்களும் வரவேற்றனர்.

2020-ல் ஒலிம்பிக் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய பிரதமர் கிஷிடாவுக்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்தார். ஒசாகாவில் 2025 கண்காட்சியின் இந்தியாவின் பங்கேற்பையும் அவர் உறுதி செய்தார்.

தலைவர்களின் பரஸ்பர வருடாந்தர பயணங்களின் முக்கியத்துவத்தை உறுதி செய்த இரு பிரதமர்களும் இத்தகைய பயணங்கள் வரும் ஆண்டுகளிலும் தொடர வேண்டுமென்று விருப்பம் தெரிவித்தனர். தமக்கும், தம்முடன் பயணம் செய்த தூதுக்குழு உறுப்பினர்களுக்கும் இனிய விருந்தோம்பல் தந்ததற்காக பிரதமர் மோடிக்கு ஜப்பான் பிரதமர் கிஷிடா நன்றி தெரிவித்தார். நடைபெறவிருக்கும் க்வாட் தலைவர்களின் உச்சி மாநாட்டிற்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார். இதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.

 

***(Release ID: 1807984) Visitor Counter : 195