சுரங்கங்கள் அமைச்சகம்

சுரங்கத் துறையின் வளர்ச்சி இந்தியப் பொருளாதாரத்திற்கு சரியான ஊக்கத்தை வழங்குகிறது என்று திரு பிரல்ஹாத் ஜோஷி கூறியுள்ளார்


36 ஆவது சர்வதேச புவியியல் மாநாடு புதுதில்லியில் தொடங்கியது

Posted On: 20 MAR 2022 5:23PM by PIB Chennai

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் சுரங்கங்கள் தோண்டுவது கணிசமாக அதிகரித்துள்ளது என்று மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இந்தத் துறை நேரடியாகவும் மறைமுகமாகவும் 12 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக அவர் கூறினார்.

36 ஆவது சர்வதேச புவியியல் மாநாட்டின் தொடக்க நிகழ்வில் இன்று இணையம் வழியாக அவர் உரையாற்றினார். தற்போதைய அரசின் கீழ் தாதுப்பொருட்கள் கண்டறிவதன் வேகம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் கூறினார். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் பற்றி குறிப்பிட்ட அவர், இவை இந்தியப் பொருளாதாரத்திற்கு சரியான ஊக்கத்தை வழங்கியிருப்பதாக தெரிவித்தார். மகத்தான உயரங்களை அடைவதற்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் இந்தியப் புவியியல் ஆய்வு அமைப்பு மிகச் சிறந்த பணியை செய்திருப்பதாக திரு ஜோஷி பாராட்டினார்.

36வது சர்வதேச புவியியல் மாநாடு பற்றி தெரிவித்த அமைச்சர் இந்த மூன்று நாள் நிகழ்வு 58 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவால் நடத்தப்படுகிறது என்றார். இந்த மாநாடு நீடித்த வளர்ச்சிக்கான களத்தில் மிக முக்கியமான வாய்ப்புகள் பற்றி ஆய்வு செய்வதற்கு உலகம் முழுவதுமிருந்து வந்துள்ள புவியியல் விஞ்ஞானிகளுக்கு சரியான மேடையை வழங்கும் என்றும் கூறினார்.

'புவி அறிவியல்: நீடித்த எதிர்காலத்திற்கான அடிப்படை அறிவியல்' என்பதை மையப் பொருளாகக் கொண்டு 36 ஆவது சர்வதேச புவியியல் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு சுரங்கங்கள் அமைச்சகம், புவிசார் அறிவியல் அமைச்சகம், இந்திய தேசிய அறிவியல் கல்விக் கழகம், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை அறிவியல் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டு முயற்சியுடன் நடைபெறுகிறது. இந்த மூன்று நாள் மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து 5,000 முதல் 7,000 வரையிலான பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்க நாளன்று நினைவு அஞ்சல் தலையும், முதல் நாள் உறையும், புவி சார்ந்த சுற்றுலாவுக்கான முக்கிய இடங்கள் குறித்த பல வண்ண புகைப்படங்களுடன் சிறு வடிவிலான புத்தகங்களும் வெளியிடப்பட்டன.

2020 மார்ச் 2 முதல் 8 வரை நடைபெறுவதாக இருந்த இந்த மாநாடு பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடைபெறுகிறது. 58 ஆண்டுகளுக்கு முன் 22ஆவது மாநாட்டை இந்தியா நடத்தியது. இது ஆசியாவில் முதல் முதலாக நடைபெற்ற சர்வதேச புவியியல் மாநாடாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1807426

 

**********



(Release ID: 1807453) Visitor Counter : 246