சுற்றுலா அமைச்சகம்

35-வது சூரஜ்கண்ட் சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சியை ஹரியானா ஆளுநர் திரு பண்டாரு தத்தாத்ரேயாவும் முதலமைச்சர் திரு மனோகர் லாலும் தொடங்கிவைத்தனர்

Posted On: 20 MAR 2022 8:45AM by PIB Chennai

35-வது சூரஜ்கண்ட் சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சியை ஹரியானா ஆளுநர் திரு பண்டாரு தத்தாத்ரேயாவும் முதலமைச்சர் திரு மனோகர் லாலும் இன்று தொடங்கிவைத்தனர். ஹரியானா மாநில சுற்றுலா, வனம், விருந்தோம்பல் மற்றும் கலை, கல்வி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு கன்வர் பால், உஸ்பெகிஸ்தான் குடியரசின் தூதர் திரு டில்ஷாட் அக்கதோவ், சட்டப்பேரவை உறுப்பினர் திருமதி சீமா ட்ரிக்கா, மத்திய இணையமைச்சர்கள் திரு கிஷன் பால், திரு மூல்சநத் ஷர்மா, மத்திய சுற்றுலா அமைச்சக செயலாளர் திரு அர்விந்த் சிங் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.

தொடக்க நிகழ்ச்சியில் பேசிய ஹரியானா ஆளுநர் திரு பண்டாரு தத்தாத்ரேயா கலாச்சாரம் மற்றும் நாகரிக வளர்ச்சியில் கலை மற்றும் கைவினைப் பொருட்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

இந்தியாவைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்களுக்கு வாய்ப்பை வழங்கியுள்ள கைவினைப்பொருட்கள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக மத்திய அரசு மற்றும் ஹரியானா மாநில அரசின் அமைச்சகங்களை

அவர் பாராட்டினார். கலை மற்றும் கைவினை பொருட்களின் வளமான பாரம்பரியத்தைப் பங்கேற்றுள்ள நாடுகளையும் அவர் பாராட்டினார்.

இந்தியா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கைவினைக் கலைஞர்கள் தங்களின் கலை மற்றும் கைவினைப் பொருட்களை பரவலான பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்த கைவினைப்பொருட்கள் கண்காட்சி உதவுகிறது என்று ஹரியானா முதலமைச்சர் திரு ‌ மனோகர் லால் தெரிவித்தார்.

இந்தக் கண்காட்சி இந்தியாவின் பாரம்பரிய கைவினைப் பொருட்களின் மறுமலர்ச்சிக்கும் உதவி செய்வதாகக் கூறினார். சுதந்திரத்தின் 75வது ஆண்டுப் பெருவிழாவை நாம் கொண்டாடும் வேளையில் இந்த ஆண்டின் சூரஜ்கண்ட் கைவினை பொருட்கள் கண்காட்சி மேலும் சிறப்படைகிறது என்று அவர் குறிப்பிட்டார். 1987 ஆம் ஆண்டு முதலாவது கண்காட்சி தொடங்கப்பட்டதிலிருந்து இந்த ஆண்டின் 35வது கண்காட்சி வரை ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்களும் தங்களின் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்கியுள்ளன. மேலும் நமது வளமான கலாசாரமும் பாரம்பரியமும் பாதுகாக்கப்படுகின்றன என்று மனோகர் லால் தெரிவித்தார்.

ஹரியானா மாநில சுற்றுலாத் துறை முதன்மைச் செயலாளர் திரு எம்.டி.சினஹா பேசுகையில், சூரஜ் கண்ட் கைவினைப்பொருட்கள் கண்காட்சி 2013ல் சர்வதேச நிலைக்கு உயர்த்தப்பட்ட நிலையில்

2020 இல் 30க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்றன. தற்போது பங்குதாரர் நாடாக உஸ்பெகிஸ்தான் அமைந்துள்ளது என்றார். இந்த ஆண்டு லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, மொசாம்பிக், தான்சானியா, ஜிம்பாப்வே, நமீபியா, சூடான், நைஜீரியா, செனகல், அங்கோலா, தாய்லாந்து, நேபாளம், இலங்கை, ஈரான், மாலத்தீவுகள் உள்ளிட்ட பல நாடுகள் கலந்து கொள்வதாக அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1807354

*******



(Release ID: 1807415) Visitor Counter : 308