நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி வெட்டி எடுத்து முடிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 2600 ஹெக்டேர் நிலத்தை மீட்டது என்எல்சி இந்தியா நிறுவனம்
Posted On:
10 MAR 2022 4:53PM by PIB Chennai
நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா லிமிடெட், சூரிய மின் உற்பத்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை தற்போது அடைந்து வருகிறது.
இதில் தொடர் நில மீட்பு நடவடிக்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பல்வேறு முயற்சிகளும் கணிசமான வெற்றியுடன் நடைபெற்று வருகின்றன. சுரங்க மூடல் திட்டத்திற்கு ஏற்பவும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்திற்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கு இணங்கவும் அனைத்து சுரங்கப் பகுதிகளிலும் காடு வளர்ப்பு மற்றும் பசுமையை உருவாக்கும் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதைபடிவ எரிபொருள் சுரங்கம் மற்றும் அனல் மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள என்எல்சி இந்தியா நிறுவனம், பசுமையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, நெய்வேலி நகரம் மற்றும் தொழில்துறைப் பகுதிகளில் இரண்டு கோடி மரக்கன்றுகளை நட்டுள்ளது. இதுவரை 2600 ஹெக்டேர் நிலத்தை நிலக்கரி வெட்டியெடுக்கப்பட்ட சுரங்கப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டு 2188 ஹெக்டேரில் காடு வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பகுதியில் பல்வேறு வகையான நாட்டு மரங்கள் நடப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட நிலத்தில் இதுவரை 27.96 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டு, 100 ஹெக்டேர் நிலத்தில் உயர் தொழில்நுட்ப முறையில் காய்கறி சாகுபடி நடைபெற்று வருகிறது.
நிலத்திற்கு புத்தாக்கம் அளிப்பதன் ஒரு பகுதியாக, திறந்தவெளி சுரங்கங்களில் இருந்து அகற்றப்படும் அதிக மண் சுமை, வெட்டியெடுக்கப்பட்டப் பகுதிகளில் மீண்டும் நிரப்பப்படுகிறது. அர்ப்பணிப்பு முயற்சியுடன் செயல்படும் என்எல்சி நிறுவனம் , மண்ணின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் மீண்டும் நிரப்பப்பட்ட பகுதிகளை விவசாய வயல்களாக மாற்றுகிறது மற்றும் அறிவியல் அடிப்படை விவசாய முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
நிலைத்தன்மை மிக்க சுரங்க முயற்சிகளுக்கு ஏற்ப, மழை நீர் சேகரிப்பை எளிதாக்கும் வகையில் 104 ஹெக்டேரில் ஐம்பத்திரண்டு நீர்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. படகு சவாரி வசதியுடன் கூடிய சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்கா, பல்வேறு பறவைகள் கொண்ட மினி உயிரியல் பூங்கா ஆகியவை மற்ற சிறப்பம்சங்கள் ஆகும். நிறுவனத்தின் தொடர் சுற்றுச்சூழல் நட்பு முயற்சிகளால், ஏராளமான உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகளின் தாயகமாக இப்பகுதி மாறியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804789
**********
(Release ID: 1804862)
Visitor Counter : 250