பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புனே, சிம்பியோசிஸ் பல்கலைக்கழகத்தின் பொன் விழா தொடக்க நிகழ்வில் பிரதமர் உரையின் தமிழாக்கம்

Posted On: 06 MAR 2022 5:09PM by PIB Chennai

வணக்கம்!

மகாராஷ்டிர ஆளுனர் திரு.பகத் சிங் கோஷியாரி அவர்களே, திரு.தேவேந்திர ஃபட்னவிஸ் அவர்களே, திரு.சுபாஷ் தேசாய் அவர்களே, இந்தப் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் தலைவர் பேராசிரியர் எஸ்.பி.மஜூம்தார் அவர்களே, முதன்மை இயக்குனர் டாக்டர் வித்யா எராவ்டேகர் அவர்களே, அனைத்துத் துறைகளின் உறுப்பினர்களே, சிறப்பு விருந்தினர்களே, எனது இளம் நண்பர்களே!

சிம்பியோசிசின் தொலைநோக்கு மற்றும் மாண்புகளை ஏற்றுக் கொண்டுள்ள மாணவர்கள் தங்களின் வெற்றி மூலம் சிம்பியோசிசுக்கு அடையாளம் வழங்கியுள்ளனர். அனைத்து பேராசிரியர்களையும், மாணவர்களையும், முன்னாள் மாணவர்களையும் இந்நாளில் நான் வாழ்த்துகிறேன். பொன்னான இத்தருணத்தில் ஆரோக்கிய தாம் வளாகத்தை தொடங்கி வைக்கும் வாய்ப்பையும் நான் பெற்றுள்ளேன். இந்தப் புதிய முன்முயற்சிக்காக சிம்பியோசிசின் குடும்பத்திற்கு நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

தங்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளைப் பெற்றுள்ள தலைமுறையை இந்த கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் இன்று பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். உலகின் மிகப் பெரிய  பொருளாதாரங்களில் ஒன்றாக நமது நாடு உள்ளது. மேலும் உலகின் மூன்றாவது பெரிய புதிய தொழில் நிறுவனங்களின் மையமாகவும் நமது நாடு விளங்குகிறது. கொரோனா தடுப்பூசிகள் விஷயத்தில் இந்தியா அதன் திறனை உலகிற்கு எவ்வாறு வெளிப்படுத்தியது என்பதை புனே நகர மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான போர் பகுதியிலிருந்து ஆபரேஷன் கங்கா மூலம் தனது மக்களை பாதுகாப்பாக இந்தியா எவ்வாறு வெளியேற்றி வருகிறது என்பதையும் நீங்கள் காண்கிறீர்கள். இது தொடர்பாக பல பிரச்சனைகளை உலகின் பல நாடுகள் எதிர்கொண்டு வருகின்றன. ஆனால் அதிகரித்து வரும் இந்தியாவின் செல்வாக்கு காரணமாக ஆயிரக்கணக்கான மாணவர்களை நாம் தாயகத்திற்கு அழைத்து வந்திருக்கிறோம்.

நண்பர்களே,

உங்கள் பல்கலைக்கழகத்தின் 50-வது ஆண்டினைக் கொண்டாட இங்கு அமர்ந்திருக்கும் அனைவருக்கும் சிம்பியோசிஸ் குடும்பத்தினருக்கும் நான் ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன். ஒவ்வொரு ஆண்டும் மையப்பொருள் ஒன்றை தெரிவு செய்யும் மரபை நாம் உருவாக்கலாமா? இங்குள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அந்த மையப்பொருளுக்கு பங்களிப்பு செய்ய இயலுமா? பொன் விழாவை நாம் கொண்டாடும் வேளையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு ஆண்டுக்குமான மையப் பொருளை நாம் முடிவு செய்யலாமா?

உதாரணமாக, ஒரு மையப்பொருளை உங்களுக்கு நான் ஆலோசனையாக தெரிவிக்கிறேன். இதனை பின்பற்ற வேண்டுமென்பது அவசியமில்லை. உங்களுக்கான திட்டத்தை நீங்களும் உருவாக்கலாம். 2022-ல் உலகம் வெப்பமயமாகும் பிரச்சனையை நாம் எடுத்துக் கொள்வோம். உலகம் வெப்பமயமாகும் ஒவ்வொரு அம்சம் குறித்தும் ஒட்டு மொத்த சிம்பியோசிஸ் குடும்பமும் பயில வேண்டும், ஆய்வு செய்ய வேண்டும். கருத்தரங்குகளை நடத்த வேண்டும், கருத்துப் படங்களை உருவாக்க வேண்டும். கதைகள், கவிதைகள் எழுத வேண்டும். இந்த மையப்பொருள் குறித்து நாம் செய்யும் பணிகள் மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

நண்பர்களே,

மையப் பொருள்களின் தலைப்பை முடிவு செய்வதை நான் உங்களிடமே விட்டுவிடுகிறேன். இளைஞர்கள் இது போன்ற தலைப்புகளை தெரிவு செய்யும்போது நாட்டின் தேவைகளுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதாக இருக்க வேண்டும் என்று மட்டும் நான் தெரிவிக்கிறேன். உங்களின் ஆலோசனைகளையும், அனுபவங்களையும் அரசுடன் பகிர்ந்து கொள்ளுமாறும் உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களின் ஆராய்ச்சி, விளைவுகள், கருத்துக்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பிரதமர் அலுவலகத்திற்கும் நீங்கள் அனுப்பி வைக்கலாம்.

இந்த இயக்கத்தில் பேராசிரியர்களும், மாணவர்களும் ஒரு பகுதியாக இருக்கும்போது வியத்தகு பயன்கள் கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அடுத்த 25 ஆண்டுகளில் பல்வேறு மையப்பொருள்களில் பணியாற்றினால் பல்கலைக்கழகத்தில் 75-வது ஆண்டுவிழாக் கொண்டாடும் போது சுமார் 50,000 சிந்தனைகளின் பயன்கள் எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்.

நண்பர்களே,

உங்களை சந்திக்க எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்த போதும் வர இயலவில்லை. நான் முதலமைச்சராக இருந்தபோது உங்களை சந்தித்திருக்கிறேன். இப்போது இந்தப் புனிதமான இடத்திற்கு மீண்டும் வருகின்ற வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். புதிய தலைமுறையுடன் கலந்துரையாடும் வாய்ப்பை எனக்கு வழங்கிய உங்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுடையவனாவேன்.

மிகுந்த நன்றியும், நல்வாழ்த்துக்களும்!

 

******


(Release ID: 1804266) Visitor Counter : 177