தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

சர்வதேச மகளிர் தினத்தன்று பெண் செங்கல் சூளை மற்றும் பீடி தொழிலாளர்களுக்கான சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை முகாமை தொழிலாளர் அமைச்சர் நடத்துகிறார்

Posted On: 08 MAR 2022 2:33PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், இன்று இங்கு சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை முகாமை முன் நின்று நடத்தினார். நிகழ்ச்சிக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி தலைமை தாங்கினார். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் திரு ராமேஸ்வர் டெலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

 பெண் தொழிலாளர்கள் மத்தியில் ‘ஸ்வஸ்தா பாரத்’ என்ற எண்ணத்தை ஊக்குவிப்பதற்கும், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காகவும், சர்வதேச மகளிர் தினத்தன்று உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.  அமைப்புசாரா துறையின் பெண் தொழிலாளர்களிடையே தொழில் சார்ந்த நோய்களைக் கண்டறிவது அவசியம் என்று திரு  பூபேந்தர் யாதவ் வலியுறுத்தினார். அபாயகரமான பணிச்சூழலுக்கு ஆளாகும் பெண் தொழிலாளர்கள் பல்வேறு தொழில் சார்ந்த நோய்கள் மற்றும் பல  பெரும  மற்றும் குறு  ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு ஆளாகின்றனர். செங்கல் சூளைத் தொழிற்சாலைகள் மற்றும் பீடித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் இரும்புச் சத்து குறைபாட்டிற்கு ஆளாகின்றனர்.

  இரத்த சோகை என்பது இந்தியாவில் ஒரு முக்கிய உடல்நலப் பிரச்சினையாகும், குறிப்பாக நலிந்த  சமூக-பொருளாதார நிலையில்  உள்ள பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.

  தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டிய  திருமதி. ஸ்மிருதி ஜூபின் இரானி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் எடுத்துள்ள முயற்சிகள் பற்றி மீண்டும் வலியுறுத்தினார். 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கருத்தைச் சுற்றி கொள்கைகளை உருவாக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். இரு அமைச்சகங்களுக்கிடையிலான ஒத்துழைப்பால் நமது நாட்டின் பெண் தொழிலாளர்களின் பிரச்சனைகளைத்  தீர்க்க முடியும் என்றார். பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட பல பெண்களை மையப்படுத்திய அரசின் முதன்மையான திட்டங்களை அவர் விவரித்தார். நாடு முழுவதும் 704 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ திட்டத்தின் மூலம் அமைப்புசாரா துறையைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக தொழிலாளர் அரசுக் ஈட்டுறுதி கழகத்துடன்  இணைந்து செயல்படும் யோசனையையும் அவர் ஊக்குவித்தார்.

 பெண்கள் செங்கல் சூளை பீடி தொழிலாளர்களுக்கான உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை முகாம்

  எந்தவொரு பெரிய தொழில் சார்ந்த நோய்களையும் முன்கூட்டியே கண்டறிவதற்காக, சர்வதேச மகளிர் தினத்தன்று தொழிலாளர் அரசுக் ஈட்டுறுதி கழகம்  மற்றும் தொழிலாளர் நலத்துறையின் உதவியுடன் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்,  சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. தொடங்கப்பட்ட இந்த முகாம்  ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு உழைக்கும் பெண்களின் உகந்த ஆரோக்கியத்தை அடைவதற்கு உதவும். முகாமில் பங்கேற்றவர்களுக்கு சுகாதார விவர அட்டைகள் வழங்கப்பட்டன. அடுத்த 06 மாதங்களுக்கு பங்கேற்பாளர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். இவை தவிர, இந்த நிகழ்வில் பங்கேற்ற அஜ்மீரைச் சேர்ந்த 20 பெண்கள் பீடித் தொழிலாளர்கள், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 22 பெண்கள் பீடித் தொழிலாளர்கள் மற்றும் ஹரியானாவில் இருந்து 26 பெண்கள் செங்கல் சூளைத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு நோய்த்தடுப்பு சுகாதாரம், சுகாதாரப் பொருட்கள் மற்றும் ஆயுஷ் கிட்கள்  வழங்கப்பட்டன.

***************



(Release ID: 1804031) Visitor Counter : 189