குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் மாளிகை, அருங்காட்சியக வளாகம், மெய்க்காவலர்கள் படைப் பிரிவு மாற்ற நிகழ்ச்சி ஆகியவை அடுத்த வாரம் முதல் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதி

Posted On: 04 MAR 2022 6:56PM by PIB Chennai

கோவிட் 19 பரவல் காரணமாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் மாளிகை சுற்றுலா, குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியக வளாகம், மெய்க்காவலர்கள் படைப் பிரிவு மாற்ற நிகழ்ச்சி ஆகியவை அடுத்த வாரம் முதல் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியக வளாகம்  மார்ச் 8 ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும்.  செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை நாட்கள் தவிர (வாரத்திற்கு 6 நாட்கள்) திறந்திருக்கும்.  பார்வையாளர்கள் அருங்காட்சியகத்தில் முன்பதிவு செய்யப்பட்ட 4 தொகுப்பு நேரங்களில் அதிகபட்சமாக ஒரு தொகுப்புக்கு 50 பேர் வீதம் அனுமதிக்கப்படுவார்கள்.  நேரத் தொகுப்புகள் காலை 9.30 மணிமுதல் 11 மணிவரை, 11.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, பிற்பகல் 1.30 மணிமுதல் மாலை 3 மணி வரை, மாலை 3.30 மணி முதல் மாலை 5 மணி வரை.

குடியரசுத் தலைவர் மாளிகை சுற்றுலா மார்ச் 12 ஆம் தேதி முதல் தொடங்கும்.  அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினங்கள் தவிர இந்த சுற்றுலா, முன்பதிவு செய்யப்பட்ட 3 நேர தொகுப்புகளில் அதிகபட்சம் 25 பார்வையாளர்கள் வீதம் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதிக்கப்படும்.  இந்தச் சுற்றுலாவில் அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆரோக்கிய வனமும் இடம் பெறும். 

மெய்க்காவலர்கள் படைப்பிரிவு மாற்ற நிகழ்ச்சி, அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினங்கள் தவிர, ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்.  இது மார்ச் 12-ஆம் தேதி தொடங்கும்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய http://rashtrapatisachivalaya.gov.in/rbtour/ என்ற இணைப்பை அணுகவும்.

***************


(Release ID: 1803030)