அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இளம் திறமைசாலிகளுக்கு நிபுணத்துவ வழிகாட்டல் 2047-ம் ஆண்டு இந்தியாவுக்கான சிறந்த முதலீடு: மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 28 FEB 2022 5:39PM by PIB Chennai

இளம் திறமைசாலிகளுக்கு நிபுணத்துவ வழிகாட்டல்,  2047-ம் ஆண்டு சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடவுள்ள இந்தியாவுக்கான சிறந்த முதலீடாக இருக்கும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை  இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

நமது அறிவியல் சாதனைகளின் சாரத்தையும் மகத்துவத்தையும் கொண்டாடும் தேசிய அறிவியல் தினத்தை குறிக்கும் தேசிய அறிவியல் வாரத்தின் நிறைவு விழாவில் பேசிய  அவர், இந்தியா சுதந்திரம் அடைந்த 100 ஆண்டுகளைக் கொண்டாடும் அடுத்த 25 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தில் 25 ஆண்டுகள் செயல்படும் திறனுள்ள இளம் விஞ்ஞானிகள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்றார்.

விஞ்ஞானத்தைப்  போற்றி வழிபடுவதே இந்த ஒரு வாரத்தின் நோக்கம் என்று அமைச்சர் கூறினார். நம்மிடம் இல்லாததை எவ்வாறு ஈடுசெய்கிறோம் என்பதை சுயபரிசோதனை செய்து பார்க்க இது ஒரு வாய்ப்பு என்றார் அவர். விஞ்ஞானம் மற்றும் விஞ்ஞானச்  சிந்தனையைச்  சாமானியர்களிடம் கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும், அறிவியல் தகவல்களையும் கண்டுபிடிப்புகளையும் உள்வாங்குவதன் மூலம் அவர்கள் பயனடைந்து, ஆழ்ந்த அறிவியல் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு விஞ்ஞானிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடியின் வாழ்த்துகளைக்  குறிப்பிட்டு பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், "அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் ஆர்வலர்களுக்கு தேசிய அறிவியல் தின வாழ்த்துகள். நமது கூட்டு அறிவியல் பொறுப்பை நிறைவேற்றுவதற்கும், மனித முன்னேற்றத்திற்கான அறிவியல் சக்தியை மேம்படுத்துவதற்கும் நமது உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்துவோம்," என்றார்.

டாக்டர் ஜிதேந்திர சிங் மேலும் கூறுகையில், “விக்யான் சர்வத்ர பூஜ்யதே” (அறிவியலுக்கான உலகளாவிய மரியாதை) என்பது தில்லி உட்பட 75 இடங்களில் பிப்ரவரி 22, 2022 அன்று தொடங்கிய நாடு தழுவிய திட்டமாகும். பரவலான பங்கேற்பையும் அனைத்து தரப்புப்  பாராட்டையும் இது பெற்றுள்ளது. இன்று நிறைவுபெறும் இந்த தேசிய அறிவியல் வாரத்தின் போது, இந்தியாவில் நவீன அறிவியலின் எழுச்சிக்கு வழிவகுத்த போராட்டத்தையும் தியாகத்தையும் பிரதிபலிக்கும் ஒரு முன்முயற்சியாகவும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு கனவு காண வழிவகுத்த வழிகாட்டுதலாகவும் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது,” என்றார்.

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டைக் கொண்டாடும் விடுதலையின் அமிர்தப்  பெருவிழாவின் ஒரு பகுதி என்று கூறிய அமைச்சர், “இந்தியாவின் சுதந்திரத்தின் 75 புகழ்பெற்ற ஆண்டுகளின் சாதனைகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் அவற்றை வெளிப்படுத்துவதற்கும் இது ஒரு சந்தர்ப்பமாகும்,” என்றார்.

கலாச்சார அமைச்சகம், முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் உள்ள அமைப்பான விக்யான் பிரசார் ஆகியவற்றின் கீழ் இந்தத்  திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த அனைத்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகங்கள் மற்றும் துறைகள் கைகோர்த்துள்ளன என்று அமைச்சர் கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1801838

                           *************************

 



(Release ID: 1801898) Visitor Counter : 234