பிரதமர் அலுவலகம்

‘பாதுகாப்புத் துறையில் தற்சார்பு-செயல்பாட்டிற்கு அழைப்பு’ என்ற பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 25 FEB 2022 2:02PM by PIB Chennai

வணக்கம்! ‘பாதுகாப்புத் துறையில் தற்சார்பு-செயல்பாட்டிற்கு அழைப்பு’ என்ற பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு நாட்டின் நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. பாதுகாப்புத் துறையில் தற்சார்பு அடைய அண்மைக்காலமாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பட்ஜெட்டில் தெளிவாக தெரிகிறது.

நண்பர்களே,  இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி, நாம் அடிமைப்பட்டு இருந்த காலத்திலும் சரி, அதன்பின் சுதந்திரம் அடைந்த பிறகும் சரி, முற்றிலும் வலிமையாகவே இருந்து வந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் இரண்டாம் உலகப் போரில் முக்கிய பங்கு வகித்துள்ளன. பிற்காலங்களில் நமது இந்த திறமை வீழ்ச்சி அடைந்த போதிலும், இப்போதும் சரி அல்லது எப்போதும் சரி, நமது திறமைக்கு எவ்வித குறையும் இல்லை என்பது தெளிவாகிறது.

ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் இருந்து உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான வலிமையான சூழலை உருவாக்குவதற்கான திட்டம்  இந்த ஆண்டு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.    பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டில் 70 சதவீதம் உள்நாட்டுத் தொழில்களுக்கு மட்டும் என ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை, 200-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சாதனங்களைக் கொண்ட உள்நாட்டு பொருட்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.  இந்த அறிவிப்புக்குப் பிறகு, சுமார் 54,000 கோடி ரூபாய் மதிப்பில் உள்நாட்டிலேயே கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுதவிர, 4.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சாதனங்களை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளும் பல்வேறு நிலைகளில் உள்ளன.  3-ஆவது பட்டியல் விரைவில் வெளியாகும்.

நண்பர்களே, ஆயுதக் கொள்முதல் நடைமுறைகள் நீண்டநாட்களுக்கு இழுத்தடிக்கப்பட்டதால், அவை செயல்பாட்டிற்கு வரும்போது, காலம் கடந்தவையாக ஆகிவிடும் சூழல் ஏற்பட்டது. இதற்கு ஒரே தீர்வு ‘தற்சார்பு இந்தியா’ மற்றும் ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ ” ஆகியவைதான்.  ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் விவகாரத்தில் வீரர்களின் பெருமிதம் மற்றும் உணர்வுகளை மனதில் கொள்வது அவசியம். இந்தத் துறைகளில் தற்சார்பு அடைந்தால்தான் இது சாத்தியமாகும்.

இணைய பாதுகாப்பு என்பது இனியும் டிஜிட்டல் உலகிற்கு மட்டும்தான் பொருந்தக்கூடியது என்றில்லாமல், தேசப் பாதுகாப்பு அம்சமாக மாறியுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் நமது வலிமை மிகுந்த ஆற்றலை, பாதுகாப்புத் துறையில் பயன்படுத்தினால், நமது பாதுகாப்பு விஷயத்தில் நாம் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கலாம்.

நண்பர்களே, உறுதிப்பாட்டுடன் கூடிய முன்னேற்றத்திற்கு மிகச்சிறந்த உதாரணமாக படைக்கல தொழிற்சாலைகள் திகழ்கின்றன.  கடந்த ஆண்டு பாதுகாப்புத் துறைசார்ந்த 7 புதிய பொதுத் துறை நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டு இருப்பது குறித்து மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்தி, புதிய சந்தை வாய்ப்புகளை எட்டியிருக்கின்றன. கடந்த 5-6 ஆண்டுகளில் நமது பாதுகாப்பு சாதன ஏற்றுமதி 6 மடங்கு அதிகரித்துள்ளது.  தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சாதனங்கள் மற்றும் சேவைகளை 75 –க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நாம் வழங்கி வருகிறோம்.

இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்திற்கு அரசு அளிக்கும் ஊக்கம் காரணமாக, கடந்த 7 ஆண்டுகளில் பாதுகாப்பு சாதன உற்பத்தியை மேற்கொள்ள 350-க்கும் மேற்பட்ட புதிய தொழிற்சாலைகளுக்கான உரிமங்கள்  வழங்கப்பட்டுள்ளன. அதேவேளையில், 2001 முதல் 2014 வரையிலான 14 ஆண்டுகளில், 200 உரிமங்கள் மட்டுமே  வழங்கப்பட்டிருந்தது.  டிஆர்டிஓ மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த துறையின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இணையாக தனியார் துறையினரும் முன்வர வேண்டும். பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் 25%, தொழில் நிறுவனங்கள், புதிதாக தொழில் தொடங்குவோர் மற்றும் கல்வியாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.  இதற்கென, பிரத்யேக அமைப்புக்கான மாதிரி ஒன்றும் பட்ஜெட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த ஒதுக்கீடு தனியார் தொழில் துறையினரை வியாபாரிகள் மற்றும் விநியோகஸ்தராக மட்டுமின்றி, பங்குதாரராக மாற்றவும் வகை செய்யும்.

பட்ஜெட் ஒதுக்கீடுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நடைமுறைப்படுத்த தேவையான புதிய கருத்துக்களை  தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  சமீப ஆண்டுகளாக பட்ஜெட் தாக்கல் ஆகும் தேதி ஒருமாதம் முன்கூட்டியே மாற்றப்பட்டு இருப்பதை முழுமையாக பயன்படுத்தி, பட்ஜெட் நடைமுறைக்கு வரும் தேதியில் களத்தில் பணியாற்ற தொடங்க வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!

பொறுப்பு துறப்பு ; இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது. 

*****



(Release ID: 1801575) Visitor Counter : 160