பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஊரக வளர்ச்சியில் மத்திய பட்ஜெட்டின் ஆக்கப்பூர்வமான தாக்கம் குறித்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்

“அரசு வளர்ச்சித் திட்டங்களின் பயன்களில் விரும்பத்தக்க இலக்கை எட்டுவதற்கும் அடிப்படை வசதிகள் எவ்வாறு நூறு சதவீத மக்களை எட்ட முடியும் என்பதற்கும் தெளிவான வரைபடத்தை பட்ஜெட் வழங்கியிருக்கிறது”

“அகண்ட அலைவரிசை கிராமங்களில் வசதிகளை மட்டும் வழங்கவில்லை, கிராமங்களில் திறன் மிக்க இளைஞர்களின் பெரிய தொகுப்பையும் உருவாக்குகிறது”

“கிராம மக்கள் வருவாய்த் துறையை சார்ந்திருப்பதை குறைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டியுள்ளது”

“பல்வேறு திட்டங்களில் 100 சதவீதம் பூர்த்தியாவதை எட்டுவதற்கு நாம் புதிய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது, இதனால் வேகத்துடன் திட்டங்களை நிறைவேற்ற முடிவதோடு தரத்திலும் சமரசம் செய்யாமல் இருக்க முடியும்”

“ஊரகப் பொருளாதாரத்தின் அடித்தளமாக மகளிர் சக்தி உள்ளது. குடும்பங்களின் நிதி சார்ந்த முடிவுகளில் பெண்களின் சிறந்த பங்களிப்பை அனைவரையும் உட்படுத்திய நிதிமுறை உறுதி செய்துள்ளது”

Posted On: 23 FEB 2022 11:44AM by PIB Chennai

ஊரக வளர்ச்சியில் மத்திய பட்ஜெட்டின் ஆக்கப்பூர்வமான தாக்கம் குறித்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். இந்தத் தொடரில் இது இரண்டாவது கருத்தரங்காகும். இந்தக் கருத்தரங்கில் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்கள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் மற்றும் இதர பிரிவினர் கலந்து கொண்டனர்.

அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்துக்குப் பின்னாலும் அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரிடமும் நம்பிக்கை வைப்போம், அனைவரும் முயற்சி செய்வோம் என்ற மந்திரம் இருப்பதை வலியுறுத்தியதோடு பிரதமர் உரையைத் தொடங்கினார். “சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவுக்கான நமது உறுதிமொழிகள் அனைவரின் முயற்சிகளால் மட்டுமே நிறைவேறும். வளர்ச்சியின் முழுமையான பலனை ஒவ்வொரு தனிநபரும், பிரிவினரும், பிராந்தியமும் பெற்றால் மட்டுமே இத்தகைய முயற்சியை ஒவ்வொருவரும் செய்ய முடியும்” என திரு.மோடி தெரிவித்தார்.

அரசு வளர்ச்சித் திட்டங்களின் பயன்களில் விரும்பத்தக்க இலக்கை எட்டுவதற்கும் அடிப்படை வசதிகள் எவ்வாறு நூறு சதவீத மக்களை எட்ட முடியும் என்பதற்கும் தெளிவான வரைபடத்தை பட்ஜெட் வழங்கியிருக்கிறது என்பதை அவர் விவரித்தார். “பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், கிராமப்புற சாலைத் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், வடகிழக்கின் போக்குவரத்துத் தொடர்பு, கிராமங்களில் அகண்ட அலைவரிசை போன்ற ஒவ்வொரு திட்டத்திற்கும் போதிய ஒதுக்கீடுகளை பட்ஜெட் செய்திருக்கிறது” என்று அவர் கூறினார். “அதே போல் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள துடிப்புமிக்க கிராமத் திட்டம் என்பது எல்லைப்பகுதி கிராமங்களுக்கு மிகவும் முக்கியமானது” என்று அவர் மேலும் கூறினார்.

அரசின் முன்னுரிமைகளை விரித்துரைத்த பிரதமர், வடகிழக்குப் பிராந்தியத்திற்கான பிரதமரின் வளர்ச்சித் திட்டம், வடகிழக்குப் பிராந்தியத்தில் அடிப்படை வசதிகளின் விருப்பத்தை நிறைவேற்றும் என்றார். அதே சமயம், 40 லட்சத்திற்கும் அதிகமான சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், கிராமங்களில் குடியிருப்புகளையும், நிலத்தையும் முறையாக பிரித்துக் காட்ட ஸ்வமிதா திட்டம் உதவி செய்கிறது. தனித்துவ நில அடையாளத்திற்கான ‘பின்’ (தனிப்பட்ட அடையாள எண்) போன்ற நடவடிக்கைகளால் கிராம மக்கள் வருவாய் அதிகாரிகளை சார்ந்திருப்பது குறையும். நில ஆவணங்களையும் வகைப்படுத்தல் முறைகளையும் புதிய தொழில்நுட்பத்துடன் இணைப்பதற்கு கால வரம்புடன் பணியாற்றுமாறு மாநில அரசுகளை அவர் கேட்டுக் கொண்டார். “பல்வேறு திட்டங்களில் 100 சதவீதம் பூர்த்தியாவதை எட்டுவதற்கு நாம் புதிய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது, இதனால் வேகத்துடன் திட்டங்களை நிறைவேற்ற முடிவதோடு தரத்திலும் சமரசம் செய்யாமல் இருக்க முடியும்” என்று அவர் மேலும் கூறினார்.

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 4 கோடி குடிநீர் குழாய் இணைப்புகள் இலக்கு பற்றி பேசிய பிரதமர், இந்த முயற்சிகளை விரிவாக்குமாறு கேட்டுக் கொண்டார். விநியோகிப்பதற்கு உத்தேசிக்கப்படும் குடிநீர் பற்றியும், குழாய் பாதைகளின் தரம் பற்றியும் மிகுந்த கண்காணிப்போடு இருக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார். “கிராம நிலையில் உடைமையாளர் உணர்வு இருக்க வேண்டும் என்பதும் ‘நீர் நிர்வாகம்’ வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதும் இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இவை அனைத்தையும் மனதில் கொண்டு 2024 –க்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீரை நாம் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது” என்று பிரதமர் கூறினார்.

“ஊரகப் பகுதியில் டிஜிட்டல் தொடர்பு என்பது நீண்ட காலத்திற்கு வெறும் விருப்பமாக மட்டும் இருக்க முடியாது. அது தேவையாக மாறியிருக்கிறது என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். “அகண்ட அலைவரிசை கிராமங்களில் வசதிகளை மட்டும் வழங்கவில்லை, கிராமங்களில் திறன் மிக்க இளைஞர்களின் பெரிய தொகுப்பையும் உருவாக்குகிறது” என்று அவர் கூறினார். நாட்டில் திறன்களை அதிகரிக்க சேவைத் துறையில் அகண்ட அலைவரிசை விரிவாக்கப்படும் என்று பிரதமர் கூறினார். பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள இடங்களில் அகண்ட அலைவரிசை திறன்களை முறையாக பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்றும் அவர் கூறினார்.

ஊரகப் பொருளாதாரத்தின் அடித்தளமாக மகளிர் சக்தி உள்ளது என்பதைப் பிரதமர் கோடிட்டுக் காட்டினார். “குடும்பங்களின் நிதி சார்ந்த முடிவுகளில் பெண்களின் சிறந்த பங்களிப்பை அனைவரையும் உட்படுத்திய நிதிமுறை உறுதி செய்துள்ளது. சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்களின் இந்தப் பங்களிப்பை அதிகரிப்பது அவசியமாகும்” என்றும் அவர் கூறினார்.

ஊரக வளர்ச்சிக்கான நிர்வாக மேம்பாட்டிற்கு தமது அனுபவத்திலிருந்து பல வழிமுறைகளை பிரதமர் யோசனைகளாக தெரிவித்தார். ஊரக விஷயங்களுக்குப் பொறுப்பான அனைத்து முகமைகளும் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் உறுதி செய்ய குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒருங்கிணைந்து அமர்வது உதவியாக இருக்கும் என்று அவர் யோசனை தெரிவித்தார். “பணத்தின் இருப்பு என்பதைக் காட்டிலும் தடைகள் இருப்பதும், ஒற்றுமை குறைபாடும் பிரச்சனையாக இருக்கிறது” என்று அவர் கூறினார். எல்லைப்புற கிராமங்களை பல்வேறு போட்டிகளுக்கான தினமாக மாற்றுதல், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் தங்களின் நிர்வாக அனுபவங்களால் தங்களின் கிராமங்களைப் பயனடையச் செய்தல் போன்ற புதிய பல வழிகளையும் அவர் தெரிவித்தார். கிராமத்தின் பிறந்தநாளாக ஒரு நாளை முடிவு செய்து, கிராமத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் உணர்வுடன் அதனைக் கொண்டாடுவது மக்களுக்கு தங்களின்  கிராமத்தின் மீதான ஈடுபாட்டை அதிகரிக்கும் என்றும், கிராமப்புற வாழ்க்கையை வளப்படுத்தும் என்றும் அவர் யோசனைத் தெரிவித்தார். இயற்கை விவசாயத்திற்கு சில விவசாயிகளைத் தேர்ந்தெடுக்கும் விவசாய அறிவியல் மையம், ஊட்டச்சத்து குறைப்பாட்டையும் மாணவர்கள் இடைநிற்றல் விகிதத்தையும் அகற்றுவது பற்றி கிராமங்கள் முடிவு செய்தல் போன்ற நடவடிக்கைகள் இந்தியாவின் கிராமங்களுக்கு மிகச் சிறந்த பயன்களுக்கு வழிவகுக்கும் என்று கூறி பிரதமர் உரையை நிறைவு செய்தார்.

 

****




(Release ID: 1800526) Visitor Counter : 351