அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நமது அறிவியல் சாதனைகளை கொண்டாட, ‘எங்கும் மதிக்கப்படும் விஞ்ஞானம்’ நிகழ்ச்சி: மத்திய அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

Posted On: 22 FEB 2022 6:50PM by PIB Chennai

நமது அறிவியல் சாதனைகளைக்  கொண்டாட, ‘எங்கும் மதிக்கப்படும் விஞ்ஞானம்’ நிகழ்ச்சியை, புதுதில்லியில் இன்று  மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர்  டாக்டர் ஜித்தேந்திர சிங், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

துவக்க நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியதாவது:

அறிவியல் உபகரணங்களின் உகந்த பயன்பாட்டுக்கு, கலாச்சார நெறிமுறைகள் அவசியம். ஒரு குழந்தையிடம் ஸ்மா்ர்ட் போன் கொடுக்கப்பட்டால், அதில் உள்ள செயலிகளின் பயன்கள் அந்தக்  குழந்தைக்கு தெரியாமல் இருக்கலாம். பெற்றோராலும் எப்போதும் உடன் இருந்து பாதுகாக்க முடியாது. அந்தக் குழந்தைக்கு நாகரீக நடைமுறைகள்  மற்றும் நெறிமுறைகள் போதிக்கப்பட்டால், அந்தக்  குழந்தையால் தனது ஆரோக்கியமான வளர்ச்சிக்குத்  தேவையான செயலிகளை பயன்படுத்தி, தேவையற்ற செயலிகளைத்  தவிர்க்க முடியும்.

இந்தியாவின் அறிவியல் சாதனைகளை நமது கலாச்சார நெறிமுறைகளுடன் இணைப்பதை ‘எங்கும் மதிக்கப்படும் விஞ்ஞானம்’ நிகழ்ச்சி நோக்கமாகக்  கொண்டுள்ளது. அறிவியல் மற்றும் அறிவியல் சிந்தனையை சாதாரண மக்களிடம் கொண்டு செல்வதுதான் இந்த நிகழ்ச்சியின்  இலக்கு. இதன் மூலம் அறிவியல் தகவல்கள் மற்றும் புதுமைக்  கண்டுபிடிப்புகளை  மக்கள் அறிந்து பயனடைய முடியும் மற்றும் இதன் மூலம் ஆழமான அறிவியல் மனபான்மையைப்   பெற முடியும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், தொழில்நுட்பம் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்துள்ளது. புதிய அறிவியல் முன்னேற்றங்களில் இருந்து  சிறந்த பயன்களைப்   பெறுவது குறித்து நாம்தான் முடிவு செய்ய வேண்டும். தேசிய மற்றும் சர்வதேச இலக்குகளை அடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து பிரதமர் மோடி பல தருணங்களில் எடுத்துக்  கூறி, அறிவியல் மனநிலையை வளர்க்க நம்மை ஊக்குவித்துள்ளார். மக்களிடம் அவர்களின் தாய்மொழியில் அறிவியலைக்  கொண்டு சென்றுள்ளார்.

இந்தியாவின் அறிவியல் பரிசோதனைக் கூடங்கள் மற்றும் விஞ்ஞானிகள் தற்போது, உலகின் மிகச் சிறந்தவற்றுடன் போட்டியிடுகின்றனர். அல்பாபெட், மைக்ரோசாப்ட், ட்விட்டர், அடோப், ஐபிஎம் போன்ற உலகின் மிகச் சிறந்த நிறுவனங்களுக்கு இந்தியர்களும், இந்திய வம்சாவழியினரும் தலைமை தாங்குகின்றனர். இவர்கள் அடிப்படை அறிவியல் பயிற்சியை நமது சொந்த அறிவியல் நிறுவனங்களில் பெற்றனர்.  உலகிற்கு மிகச் சிறந்த திறமைசாலிகளை, வலுவான கலாச்சார பாரம்பரியத்துடன் நாம் வழங்கியுள்ளோம்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திலிருந்து அதிகப்  பயன்களைப்  பெற, நாம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். அதை அடைய அறிவியல் தகவல் மற்றும் அறிவு அவசியம்.  தேசிய அறிவியல் வாரத்தை (பிப் 22- 28) கொண்டாடும் வகையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, கச் முதல் கம்ருப் வரை ‘எங்கும் மதிக்கப்படும் விஞ்ஞானம்’ என்ற  பிரம்மாண்ட நிகழ்ச்சிகள்  நாடு முழுவதும் 75 இடங்களில்  நடத்தப்படுகின்றன. இதன் மூலம் மக்களிடம் அறிவியல் பிரபலப்படுத்தப்படும். அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் 75 ஆண்டு சாதனைகளை வெளிப்படுத்த இந்நிகழ்ச்சி கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் விஞ்ஞான் பிரசார், முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் மற்றும் மத்திய அரசின் இதர அமைச்சகங்களுடன் இணைந்து நடத்தப்படுகிறது.

இவ்வாறு டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.

இந்நிகழ்ச்சி குறித்த தகவல்களை www.vigyanpujyate.in என்ற இணையதளத்தில் காணலாம்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் கே.விஜய் ராகவன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளர் எஸ்.சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்  செய்தி குறிப்பைக்  காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800351

                           ****************************

 



(Release ID: 1800396) Visitor Counter : 730