குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
‘தாய்மொழிகளைப் பாதுகாக்கும் இயக்கம்’ மக்கள் இயக்கமாக மாற வேண்டும் – குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்
Posted On:
22 FEB 2022 1:23PM by PIB Chennai
மொழி என்பது மக்களை இணைக்கும் அடிப்படையான பந்தம் என குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு கூறியிருக்கிறார். தாய்மொழிகளைப் பாதுகாக்கும் இயக்கம் நாட்டில் மக்கள் இயக்கமாக மாறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். “ நாம் நமது தாய்மொழியை இழந்தால், நமது அடையாளத்தை இழந்து விடுவோம்” என்று அவர் தெரிவித்தார்.
புவி அறிவியல் அமைச்சகம், சர்வதேச தாய்மொழிகள் தினத்தையொட்டி, ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சென்னையிலிருந்து காணொலி மூலம் உரையாற்றிய அவர், மாறி வரும் காலத்திற்கேற்ப மொழிகளில் மாற்றங்களைச் செய்து இளம் தலைமுறையினருக்கு இடையே அதனை கொண்டு செல்ல படைப்பாற்றல் மற்றும் புதுமையான வழிகளை கண்டறிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “விளையாட்டுக்கள் மற்றும் இதர நடவடிக்கைகள் மூலம் மொழியின் சிறப்பு அம்சங்களைக் கற்றுக் கொள்ள குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்” என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார். இந்திய மொழிகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கலைச்சொற்களை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மொழிகள் நமது கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டு விளங்குவதாகக் குறிப்பிட்ட திரு நாயுடு, மொழி மிகவும் முக்கியமான, கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் இணைக்கும் கண்ணுக்குத் தெரியாத இழை என்று குறிப்பிட்டார். “ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலாக நாம் சேர்த்துவைத்துள்ள கூட்டு அறிவு மற்றும் ஞானத்தின் கருவூலமாக நமது மொழிகள் திகழ்கின்றன” என்று அவர் கூறினார்.
இந்தியாவின் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலாக எண்ணற்ற மொழிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வளர்ந்து வந்துள்ளது என்பதை குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், மொழிகளின் சம அந்தஸ்து மற்றும் குறிப்பிட்ட அடையாளங்களைக் கொண்டுள்ளதை வைத்து, பிராந்திய மொழிகள் என அவற்றை குறிப்பிடுவதற்குப் பதிலாக இந்திய மொழிகள் என்றே கூறவேண்டும் என ஆலோசனை வழங்கினார். “இத்தகைய ‘இந்திய மொழிகள்’ நாம் செழுமைப்படுத்தி வந்துள்ள ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற உருவகமாகத் திகழ்கின்றன என்றார் அவர்.
இந்தியா நூற்றுக்கணக்கான மொழிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பேச்சுவழக்குகளின் தாயகமாகத் திகழ்கிறது என குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், இந்த மொழிகளின் வளமை, நமது படைப்பாற்றலுக்கும், கருத்துகளுக்கும் முக்கியமானவையாக உள்ளன என்றும் குறிப்பிட்டார். தேசிய கல்விக் கொள்கை 2020 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், தாய்மொழியைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது என்று கூறிய அவர், இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார். நமது கல்வி முறை முழுமையான மற்றும் மதிப்புமிக்க, அனைவருக்குமானதாக இந்தியத்துவம் கொண்டதாக விளங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இந்த அணுகுமுறையைப் பாராட்டிய அவர், மாநிலங்கள் இந்தக் கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கல்வி அனைவருக்குமானது என்பதை உறுதி செய்ய, நமது இஞைர்களின் முழு ஆற்றலை வெளிக்கொணரும் வகையில், இந்திய மொழிகளில் தொழில்நுட்ப படிப்புகளை அளிக்க வேண்டியது அவசியம் என குடியரசு துணைத்தலைவர் உறுதிபட கேட்டுக் கொண்டார். ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற பல்வேறு வளர்ந்த நாடுகள் தங்கள் தாய்மொழிகளில் கல்வியை வழங்கி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர்களது கொள்கைகள் மற்றும் உத்திகளிலிருந்து தாய்மொழியைப் பாதுகாத்து ஊக்குவிப்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் யோசனை தெரிவித்தார்.
மாநில அரசுகள் இந்திய மொழிகளை வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நடைமுறைப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று திரு நாயுடு வலியுறுத்தினார்.
“அனைத்து மாநிலங்களும் தங்களின் தாய்மொழியை நிர்வாக மொழியாக பயன்படுத்துவதுடன், கல்வி பயிற்றுவிக்கும் மொழியாகவும் ஆக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஜனநாயகத்தின் நிர்வாகத்தில் மக்களின் பங்கேற்பு முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்ட திரு நாயுடு, தாய்மொழிகளை மக்களின் மொழிகளாக பயன்படுத்துவதன் மூலமே இதனை சாதிக்க வேண்டும் என்று கூறினார். நீதிமன்ற நடவடிக்கைகள் இந்திய மொழிகளில் இருந்தால் தான் மக்கள் நீதிlதுறையின் நடைமுறைகளை சிறப்பாக புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
காலனி ஆதிக்க ஆட்சி நமது மொழிகளுக்கு ஊறுவிளைவித்ததாகக் கூறிய அவர், சுதந்திரத்திற்கு பின்னர் நமது மொழிகளுக்கு நீதி வழங்க போதுமான முயற்சிகளை நாம் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டார். தாய்மொழி பயன்பாட்டை நாடாமல் இருந்தது மிகப்பெரிய தவறு என குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர் காலனி ஆதிக்கம் முடிவடைந்த பின்னர் தாய்மொழிகள் மற்றும் இந்திய மொழிகளுக்கு நாம் திரும்பாதது தவறு எனக் குறிப்பிட்டார். ஒருவர் இயன்றவரை பல மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர், எனினும் தாய்மொழியில் வலுவான அடித்தளத்தை முதலில் கட்டமைக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார். வேலைவாய்ப்புகள் மற்றும் வாழ்வாதாரத்துடன் தாய்மொழியை இணைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச தாய்மொழிகள் தினத்தைக் கொண்டாட, மத்திய புவி அறிவியல் அமைச்சகம் மெய்நிகர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், புவி அறிவியல் அமைச்சக செயலர் டாக்டர் எம் ரவிச்சந்திரன், வாரதாவில் உள்ள மகாத்மா காந்தி சர்வதேச இந்தி விஸ்வவித்யாலயாவின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் (டாக்டர்) கிரிஷ்வர் மிஷ்ரா, புவி அறிவியல் அமைச்சக இணைச் செயலர் திருமிகு இந்திரா மூர்த்தி மற்றும் பலர் இந்த மெய்நிகர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
---------------
(Release ID: 1800289)
Visitor Counter : 206