நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

இந்திய தர நிர்ணய அமைவனம் ஏற்பாடு செய்திருந்த ‘நீர்வாழ் உயிரின தீவனத்திற்கான இந்திய தரம்’ குறித்த இணையவழி கருத்தரங்கு

Posted On: 18 FEB 2022 12:48PM by PIB Chennai

‘நீர்வாழ் உயிரின தீவனத்திற்கான இந்திய தரம்’ குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல்முறை பற்றிய இணையவழி கருத்தரங்கிற்கு இந்திய தர நிர்ணய அமைவனம் ஏற்பாடு செய்திருந்தது.  தீவன தயாரிப்பு தொழில்துறை மற்றும் அரசின் மீனவளத் துறையைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.

மீன் தீவனம் குறித்த இந்தியாவின் தற்போதைய தர நிர்ணய முறைகள் மற்றும் வருங்காலத்தில் பின்பற்றப்படவுள்ள புதிய தர விதிகள் குறித்த கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதோடு, இதுதொடர்பான முக்கிய தேவைகள் குறித்து விளக்கப்பட்டது.  15 மார்ச் 2022 வரை சுற்றுக்கு விடப்பட்டுள்ள தர நிர்ணய வரைவு குறித்து ஆய்வு செய்யவும், கருத்து தெரிவிக்கவும் பிரதிநிதிகள் ஊக்குவிக்கப்பட்டனர்.  உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு  தர முத்திரை (ஐஎஸ்ஐ முத்திரை)-ஐ பயன்படுத்துவதற்கான இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சான்றிதழை பெறுமாறு வலியுறுத்தப்பட்டது. இதற்கான மதிப்பீட்டுத் திட்டங்கள் குறித்த தகவல் மற்றும் உரிமம் பெறுவதற்கான விண்ணப்ப நடைமுறைகளும் விளக்கி கூறப்பட்டது. 

நீர்வாழ் உயிரினத் தீவனம் குறித்த இந்தியாவின் தர நிர்ணய விதிமுறைகளை இந்திய தர நிர்ணய அமைவனம் வெளியிட்டுள்ளது,   அதன் விவரம் வருமாறு:

  1. IS 16150 (பகுதி 1) : 2014  மீன் தீவனம் - வகைப்பாடு, பகுதி 1 கெண்டை மீன் தீவனம்
  2. IS 16150 (பகுதி 2) : 2014 மீன் தீவனம் - வகைப்பாடு, பகுதி 2 கெழுத்திமீன் தீவனம்
  3. IS 16150 (பகுதி 3) : 2014 மீன் தீவனம் - வகைப்பாடு, பகுதி 3 இறால் தீவனம்  
  4. IS 16150 (பகுதி 4) : 2014 மீன் தீவனம் - வகைப்பாடு, பகுதி 4 நன்னீர் இறால் தீவனம்

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை விடுத்த வேண்டுகோளின் பேரில் புதிய நீர் வாழ் உயிரினங்களுக்கான நீர் வாழ் உயிரின தீவனங்களுக்கும், இந்தியாவின் புதிய தர விதிமுறைகளை உருவாக்கும் பணியில் இந்திய தர நிர்ணய அமைவனம் ஈடுபட்டுள்ளது.

  1. பங்காசியஸ் மீனுக்கான மீன் தீவனம்
  2. அனைத்து வகை உண்ணி மீனுக்கான மீன் தீவனம்
  3. புலால் உண்ணி மீனுக்கான மீன் தீவனம்
  4. பல கலாச்சார மீனுக்கான மீன் தீவனம்

நாட்டில் மீனவளர்ப்புத் தொழில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இந்த துறையில் அரசால் பல்வேறு புதிய முன்முயற்சிகள் / திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.  இந்திய தர நிர்ணய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது, அதிக தரம்வாய்ந்த நீர்வாழ் உயிரின தீவன பயன்பாட்டை உறுதி செய்வதோடு, நீர்வாழ் உயிரினங்களின் தரத்தையும் மேம்படுத்த வகை செய்யும்.  நீர்வாழ் உயிரின தீவனங்கள் பாதுகாப்பானவையாகவும், மேம்பட்ட தரத்துடனும் இருந்தால் அது, உற்பத்தியாளர் அதிக விலை  கோருவதற்கு உதவுவதுடன், நுகர்வோரும் தரமான மீன் வகைகளை வாங்கவும், சூழலியலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.    அத்துடன் புதிய தர விதிமுறைகள் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் மீன் உணவுகளின் தரத்தை முறைப்படுத்தவும் பயன்படும்.

***************



(Release ID: 1799288) Visitor Counter : 279