மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
‘புதிய இந்தியா எழுத்தறிவு திட்டம், வயது வந்தோருக்கான புதிய கல்வி திட்டம் 2022-27 - மத்திய அரசு அனுமதி
Posted On:
16 FEB 2022 5:57PM by PIB Chennai
‘புதிய இந்தியா எழுத்தறிவு திட்டம், வயது வந்தோருக்கான புதிய கல்வித் திட்டம் 2022-27 -க்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் புதிய கல்விக் கொள்கை 2020 மற்றும் பட்ஜெட் அறிவிப்புகள் 2021-22-க்கு ஏற்றபடி வயதுவந்தோர் கல்விக்கான அனைத்து அம்சங்களும் அடங்கியிருக்கும். இந்த வயதுவந்தோர் கல்வி மற்றும் வாழ்நாள் கல்வித் திட்டத்தை தேசிய கல்விக் கொள்கை 2020 பரிந்துரை செய்துள்ளது.
2021-22 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, ஆன்லைன் கல்வி முறை உட்பட அதிகமான வசதிகளுடன் வயது வந்தோர் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
அடிப்படைக் கல்வியறிவை மட்டும் அளிக்காமல், 21ம் நூற்றாண்டு மக்களுக்குத் தேவையான வாழ்க்கைத் திறமைகள், தொழில் திறமைகள் மேம்பாடு, வேலைவாய்ப்பைப் பெறுதல் ஆகிய அம்சங்களைக் கற்பிப்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கங்கள்.
இத்திட்டம் ஆன்லைன் மூலம் அமல்படுத்தப்படும். பயிற்சி மற்றும் பயிலரங்குகள் நேரடியாக நடத்தப்படும். இதற்கான பாடங்கள் டி.வி, ரேடியோ, செல்போன், செயலி, இணையளம் ஆகியவற்றில் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும்.
இத்திட்டத்தில், கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் சேரலாம். இந்த 5 ஆண்டு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுத் திட்டத்தில் ஆண்டுக்கு 1 கோடி அளவில் 5 கோடி பேருக்கு ஆன்லைன் மூலம் தேசியத் தகவல் மையம், தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில், மற்றும் திறந்தவெளிப் பள்ளி தேசிய மையம் ஆகியவற்றுடன் இணைந்து கல்வி கற்பிக்கப்படும்.
புதிய இந்தியா எழுத்தறிவு திட்டத்துக்கான செலவு ரூ.1037.90 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 2022 முதல் 2027ம் ஆண்டு வரை ரூ.700 கோடி மத்திய அரசின் பங்கு. ரூ.337.90 கோடி மாநில அரசுகளின் பங்கு.
இத்திட்டத்தின் சிறப்பம்சங்களை அறிய இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798805
*********
(Release ID: 1798907)
Visitor Counter : 5574