விவசாயத்துறை அமைச்சகம்
துபாய் கண்காட்சியில் உணவு மற்றும் வேளாண் அரங்கம்: 15 நாள் நிகழ்ச்சியை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர்.அபிலக்ஷ் லிக்கி தொடங்கி வைக்கிறார்
Posted On:
16 FEB 2022 6:10PM by PIB Chennai
துபாய் 2020 கண்காட்சியில் உள்ள இந்திய அரங்கில் 'உணவு, வேளாண்மை மற்றும் வாழ்வாதாரம்’ ஆகியவற்றை விளக்கும் 15 நாள் நிகழ்ச்சி நாளை (பிப்.17) தொடங்குகிறது . அன்று இந்தியா பெவிலியனில் ‘உணவு, விவசாயம் மற்றும் வாழ்வாதாரம்’ என்ற இரண்டு வார விழாவை, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர்.அபிலக்ஷ் லிக்கி தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில், உணவு பதப்படுத்துதல், தோட்டக்கலை, பால்வளம், மீன்வளம் மற்றும் இயற்கை விவசாயத் துறைகளில் இந்தியாவின் திறன்கள் மற்றும் இத்துறைகள் வழங்கும் பிரம்மாண்ட முதலீட்டு வாய்ப்புகள் குறித்து காட்சிப்படுத்தப்படும்.
இந்த இரண்டு வார நிகழ்ச்சியில், உலகளாவிய உணவு பதப்படுத்தும் தொழிலில் திட்டங்களைக் கூட்டாக செயல்படுவதற்கு, தேர்வு செய்யப்படும் நாடாக இந்தியா மாறும். இந்நிகழ்ச்சியில், சர்வதேச அளவில் கூட்டாக ச் செயல்படுவதற்கான வழிகளை ஆராயும் பல கருத்தரங்குகள் நடத்தப்படும். இதன் மூலம் ஏற்றுமதித் திறன் மேலும் அதிகரிக்கப்படும்.
முக்கிய நிகழ்ச்சியாக , சிறுதான்ய உணவுத் திருவிழா நடத்தப்படும். சிறு தான்யங்கள் குறித்த புத்தகம் வெளியிடப்படும். அவற்றால் ஏற்படும் நலன்கள், ஊட்டச்சத்துப் பயன்கள் குறித்து பல்வேறு கருத்தரங்குகள் இந்த கண்காட்சியில் நடத்தப்படும். 2023ம் ஆண்டை சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டாக அறிவித்து ஐ.நா பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இந்தியா கூறியது. இதற்கு 70க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு அளித்தன. இதையடுத்து 2023ம் ஆண்டை, சர்வதேச சிறு தான்யங்கள் ஆண்டாக அறிவித்து, ஐ.நா பொதுச் சபை சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
வேளாண்மை மற்றும் அதுசார்ந்த துறைகள் நாட்டில் மிகப்பெரிய வாழ்வாதாரமாக உள்ளன. உள்நாட்டு மொத்த உற்பத்தியில் வேளாண் துறையின் பங்கு 21 சதவீதமாக உள்ளது. 2021ம் நிதியாண்டில் 41.25 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வேளாண் மற்றும் அது சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. உலகில் வேளாண் உற்பத்தி பொருட்களை அதிகமாக ஏற்றுமதி செய்யும் 15 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
வேளாண் துறை வளர்ச்சியை மேலும் அதிகரிக்க, உணவு பொருட்கள் விற்பனையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ரூ.10,900 கோடி மதிப்பில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டமும், உணவு பதப்படுத்தும் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் வேளாண் ஏற்றுமதியை 2021-22ம் ஆண்டுக்குள் 60 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தவும், அடுத்த சில ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தவும், விரிவான வேளாண் ஏற்றுமதிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
துபாயில் 2 வாரங்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு பல கருத்தரங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இந்த உணவு, வேளாண் மற்றும் வாழ்வாதாரக் கண்காட்சி மார்ச் 2ம் தேதி முடிவடைகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798824
*************
(Release ID: 1798841)