கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

‘இந்திய அருங்காட்சியகங்களின் மறுஉருவாக்கம்’ குறித்து முதன்முறையாக உலகளாவிய உச்சிமாநாட்டை திரு ஜி.கிஷன் ரெட்டி ஐதராபாதில் நாளை தொடங்கி வைக்கிறார்

Posted On: 14 FEB 2022 12:19PM by PIB Chennai

‘இந்தியாவின் அருங்காட்சியகங்களை மறுஉருவாக்கம்’ செய்வது குறித்து  முதன்முறையாக உலகளாவிய இரண்டு நாள்- 2022, பிப்ரவரி 15-16- உச்சிமாநாட்டிற்கு மத்திய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.  இந்த உச்சிமாநாட்டை மத்திய கலாச்சாரம், சுற்றுலா, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி தொடங்கிவைப்பார். இரண்டு நாட்கள்  இணையவழி நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இத்தாலி, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்து பங்கேற்பாளர்கள் இடம்பெறுவர். பொதுமக்களும் இதில் பங்குபெறலாம். இதுவரை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 2300 பேர் பதிவு செய்துள்ளனர்.

 சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப்பெருவிழாவின் ஒரு பகுதியாக இந்த உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அருங்காட்சியகத் துறையில் சிறந்த நடைமுறைகள் மற்றும் உத்திகள் பற்றி விவாதிப்பதற்காக இந்தியாவில் இருந்தும், உலக அளவிலும் நிபுணர்கள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். புதிய அருங்காட்சியகங்களை உருவாக்குவதற்கான வரைபடம் தயாரித்தல், புதுப்பித்தலுக்கான கட்டமைப்பு, இந்தியாவில் தற்போதுள்ள அருங்காட்சியகங்கள் புனரமைப்பு ஆகியவற்றுக்கு இந்த உச்சிமாநாடு பயன்படும்.

கட்டிடக்கலை மற்றும் செயல்பாட்டுத் தேவைகள், நிர்வாகம், சேகரிப்பு (பராமரிப்பு,பாதுகாப்பு நடைமுறைகள் உட்பட), கல்வி மற்றும் பார்வையாளர் ஈடுபாடு ஆகிய நான்கு மையப் பொருட்களைக் கொண்டதாக இந்த உச்சிமாநாடு இருக்கும்.  இந்த மாநாட்டிற்கு பதிவு செய்வதற்கான இணையதள முகவரி  https://www.reimaginingmuseumsinindia.com/

 இந்த உச்சிமாநாடு குறித்து அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி கூறுகையில், “மனிதகுல நாகரிகம் தொடங்கிய காலத்தில் இருந்து இந்தியா வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப்பெருவிழாவைக் கொண்டாடும் நிலையில், நமது கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும், நிலைநிறுத்துவதற்கும் நமது கவனமும், அர்ப்பணிப்பும் புதுப்பிக்கப்படுவது நமக்குப் பெருமை அளிக்கிறது.  இந்தியாவில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான அருங்காட்சியகங்களில்  இந்த கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும், பாதுகாக்கும் கருவியாக மட்டுமின்றி எதிர்காலத் தலைமுறைகளுக்கு கற்பிப்பதாகவும் இருக்கின்றன” என்றார்.

***************(Release ID: 1798270) Visitor Counter : 214