தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன: மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ்

Posted On: 12 FEB 2022 4:59PM by PIB Chennai

காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வு மற்றும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி ​​ஊதிய தரவுகளின் சமீபத்திய அறிக்கைகளை மேற்கோள் காட்டி பேசிய மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும், அமைப்பு மற்றும் அமைப்புசாரா துறைகளில் உள்ள தொழிலாளர்களின் நலனில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது என்றும் கூறினார்.

குருகிராமில் இன்று பிற்பகல் நடைபெற்ற பணியாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் (இஎஸ்ஐசி) 187-வது கூட்டத்தில் பேசிய அவர், தொழிலாளர்களின் தொடர் உடல்நலப் பரிசோதனைக்காக தொழிற்சாலைகள் / சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் குழுக்களுடன் இஎஸ்ஐசி மருத்துவமனைகள் ஒருங்கிணைக்கப்படும்  என்று கூறினார். தற்போதைய முன்னோடி திட்டத்தின் ஒரு பகுதியாக மொத்தம் 15 நகரங்களில் பரிசோதனை நடத்தப்படும்.

நிலுவையில் உள்ள இஎஸ்ஐசி திட்டங்கள் துரிதப்படுத்தப்படும் என்றும், இஎஸ்ஐசி மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகள் மற்றும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் ஆகியவற்றின் மீது உரிய கவனம் செலுத்தப்படும் என்றும், ஏழைகளுக்கு சேவை செய்யும் இஎஸ்ஐசி மருத்துவமனைகளில் பணியில் சேருமாறு மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் திரு யாதவ் மேலும் தெரிவித்தார்.

டாக்டர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் இஎஸ்ஐசி மூலம் திருத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார். இஎஸ்ஐசி ஊழியர்களின் இடமாற்றக் கொள்கை குறித்து பேசிய அமைச்சர், டிஜிட்டல் முறையிலான வெளிப்படையான இட மாற்றக் கொள்கை விரைவில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார்.

இரண்டு இஎஸ்ஐசி மேலாண்மை தகவல் பலகைகளை அமைச்சர் திறந்து வைத்தார். அவை கட்டுமான திட்ட தகவல் பலகை மற்றும் மருத்துவமனை தகவல் பலகை ஆகும். இஎஸ்ஐசி மருத்துவமனைகளின் செயல்பாடு தொடர்பான முக்கிய தகவல்களை சுகாதார தகவல் பலகை வழங்கும். இஎஸ்ஐசியின் பல்வேறு கட்டுமானத் திட்டங்கள் பற்றிய முக்கிய தகவல்களைத் கட்டுமான தகவல் பலகை தரும். இரண்டும் சிறந்த கண்காணிப்புக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் திறமையான செயல்படுத்தலுக்கும் உதவும் என்று திரு யாதவ் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திரு ராமேஷ்வர் தெலி, தோட்டத் தொழிலாளர்களுக்கு மருத்துவச் சலுகைகளை வழங்குவது குறித்தும், நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் நலனுக்கான அரசின் பல்வேறு திட்டங்களைப் பற்றியும் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1797898

***************



(Release ID: 1797908) Visitor Counter : 249