பாதுகாப்பு அமைச்சகம்

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 17.78 லட்சம் ஏக்கர் பாதுகாப்புத் துறை நிலத்தை அளந்த அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் விருதுகள் வழங்கினார்

Posted On: 10 FEB 2022 12:25PM by PIB Chennai

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 17.78 லட்சம் ஏக்கர் பாதுகாப்புத் துறை நிலத்தைக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக பூர்த்தி செய்ததில் பாதுகாப்பு எஸ்டேட் ஊழியர்களின் பங்களிப்புக்காக 2022 பிப்ரவரி 10 அன்று புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ் நாத் சிங் விருதுகள் வழங்கினார். 38 பாதுகாப்பு எஸ்டேட் அலுவலகங்களின் 11 அதிகாரிகள், 24 ஊழியர்கள் மற்றும் 4 பாதுகாப்பு எஸ்டேட் அலுவலகங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

பாதுகாப்பு எஸ்டேட் அலுவலகம் பராமரித்து வரும் ஆவணங்களின்படி பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 17.99 லட்சம் ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இதில் 1.61 லட்சம் ஏக்கர் நிலம் நாடு முழுவதும் உள்ள 62 கன்டோன்மென்ட் பகுதிகளில் உள்ளது. கன்டோன்மென்ட்டுகளுக்கு வெளியே 16.38 லட்சம் ஏக்கர் நிலம் நாடு முழுவதும் பரவலாக உள்ளது. இதில் 18,000 ஏக்கர் நிலம் அரசால் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. அல்லது அரசின் மற்ற துறைகளுக்கு மாற்றுவதற்காக ஆவணங்களிலிருந்து நீக்குவதற்கு யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநில அரசுகளின் வருவாய் துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நவீன கணக்கெடுக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுதந்திரத்திற்குப் பின் முதன் முறையாக பாதுகாப்புத் துறை நிலம் முழுவதும் கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்று அச்சுறுத்தல், மோசமான வானிலைக்கு இடையே குடியிருப்பே இல்லாத தொலை தூர பகுதிகளுக்கும் சென்று கணக்கெடுப்புப் பணியை நிறைவு செய்து விருதுகளை வென்றுள்ள ஊழியர்களை திரு.ராஜ் நாத் சிங் பாராட்டினார். இது வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சி என்றும், பாதுகாப்புத் துறைக்கான இலக்கை தெளிவாக வரையறை செய்திருப்பது பாதுகாப்புக்கு முக்கியமானது என்பதோடு இந்தப் பகுதிகளை மேம்படுத்தவும் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ட்ரோன் மூலமான வரைபடம், செயற்கைக் கோள் மூலமான வரைபடம், முப்பரிமாண தொழில்நுட்பம் ஆகியவற்றை நிலக் கணக்கெடுப்புக்கு முதன் முறையாக பயன்படுத்தியிருப்பதற்கு பாதுகாப்பு எஸ்டேட்டின் தலைமை இயக்ககத்தைப் பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் இ-சாவனி இணையவழி கருத்தரங்கையும் திரு.ராஜ் நாத் சிங் தொடங்கி வைத்தார். இந்த ஒருநாள் கருத்தரங்கில் 13 மாநிலங்களின் மாநகராட்சிகளைச் சேர்ந்த 27 பிரதிநிதிகளும், 62 கன்டோன்மென்ட் வாரியங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். விருது வழங்கும் விழாவில் பாதுகாப்புத் துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1797128

***************



(Release ID: 1797303) Visitor Counter : 230