விவசாயத்துறை அமைச்சகம்

2021-22 கோடை கால முகாமுக்கு வேளாண்மை குறித்த 4-வது தேசிய கருத்தரங்கில் மத்திய வேளாண் துறை அமைச்சர் உரையாற்றினார்

கடந்த 3 ஆண்டுகளில் கோடை கால பயிர்கள் 29.71 என்பதிலிருந்து 80.46 லட்சம் ஹெக்டேராக அதிகரித்திருப்பது அரசின் முயற்சிகள் பயனளித்திருப்பதை நிரூபிக்கிறது என்று திரு.தோமர் கூறினார்

Posted On: 27 JAN 2022 4:29PM by PIB Chennai

2021-22 கோடை கால முகாமுக்கு வேளாண்மை குறித்த 4-வது தேசிய கருத்தரங்கில் இன்று காணொலி காட்சி மூலம் உரையாற்றிய மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு.நரேந்திர குமார் தோமர், கோடை கால பயிர்கள் கூடுதல் வருவாய் வழங்குவது மட்டுமின்றி ரவி மற்றும் கரீப் இடையே வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகின்றன என்றார். 2017-18-ல் 29.71 லட்சம் ஹெக்டேர் என்பதிலிருந்து 2020-21-ல் 80.46 லட்சம் ஹெக்டேர் என நெல் உள்ளிட்ட கோடை கால பயிர்களின் சாகுபடி பரப்பு அதிகரித்திருப்பதாக அவர் கூறினார்.

கோடை கால பயிர்களில் நல்ல உற்பத்திக்கு ஐசிஏஆர் மூலம் உருவாக்கப்பட்டுள்ள புதிய ரகங்களின் விதைகளை மாநிலங்கள் பயன்படுத்த வேண்டுமென்று அமைச்சர் கேட்டுக் கொண்டார். தங்களின் உரத்தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு மத்திய அரசுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்ட அவர், அப்போதுதான் உரிய நேரத்தில் போதிய உரங்களை உரத்துறை வழங்க முடியும் என்றார். மாநிலங்கள் என்பிகே மற்றும் திரவ யூரியா பயன்பாட்டை அதிகரிக்க வேண்டுமென்றும் டிஏபி உரங்களை சார்ந்திருப்பது குறைய வேண்டுமென்றும் கூறினார்.

சிக்கலான கொவிட் காலத்திலும் கூட 2020-21-ல் உணவு தானியங்கள் உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத சாதனை அளவாக 3086.47 லட்சம் டன்னாக இருந்தது. பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியும் முறையே 257.19 மற்றும் 361.01 லட்சம் டன்னாக இருந்தது என்று அமைச்சர் தோமர் குறிப்பிட்டார்.

இந்தக் கருத்தரங்கில் பேசிய வேளாண் துறை இணையமைச்சர் திரு.கைலாஷ் சவுத்ரி, இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுள்ள ஒட்டு மொத்த ஒன்றியம் அல்லது பகுதி குறித்த சான்றிதழுக்கான ஆலோசனைகளை மாநிலங்கள் அனுப்பினால் அந்தப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தனியாக சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேவை இருக்காது என்றார். இயற்கை முறையில் பயிரிடும் விவசாயிகளுக்கு சந்தை வசதியை ஏற்படுத்தித் தருமாறும் மாநிலங்களை அவர் கேட்டுக் கொண்டார்.

மாநிலங்களில் சாதனைகள், சவால்கள், நடைமுறை உத்திகள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள அனைத்து மாநிலங்களின் வேளாண் உற்பத்தி ஆணையர்கள், முதன்மை செயலாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் அமர்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792958

 

*****



(Release ID: 1793023) Visitor Counter : 296