குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதன் வாயிலாக நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய குடியரசு துணைத் தலைவர் அழைப்பு பெட்ரோ கெமிக்கல் தொழில் துறையில் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தேவை: குடியரசு துணைத் தலைவர்

Posted On: 21 JAN 2022 12:26PM by PIB Chennai

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி கல்வி நிறுவனத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், நாட்டின் எரிசக்தி தேவையில் தற்சார்பை அடைய வேண்டும் என்றார். இதற்கு உள்நாட்டில் பெட்ரோலிய துரப்பணப் பணிகளை அதிகரிப்பதுடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் எரிசக்தி தொழில் துறையில் புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு தலை சிறந்த நாடாகத் திகழ முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

 உலகில் கச்சா எண்ணெயை அதிக அளவில் வாங்கும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா திகழ்வதை சுட்டிக்காட்டிய திரு.நாயுடு, நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீத அளவிற்கு இறக்குமதியை சார்ந்தே இருப்பதாகவும் குறிப்பிட்டார். புதிய வண்டல் வடிநிலப் பகுதிகளில் எண்ணெய் துரப்பண பணிகளை அதிகரிக்கும் நோக்கில், ஹைட்ரோ கார்பன் ஆய்வு உரிமக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு கொள்கை சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டு வருவதையும் திரு.வெங்கையா நாயுடு சுட்டிக்காட்டினார்.

மக்கள் தொகை பெருக்கம் மற்றும் தொழில்மயமாதல் காரணமாக எரிசக்தி தேவை அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், உலக நாடுகளின் எரிசக்தி தேவை 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில் இந்தியாவின் பிரதான எரிசக்தி தேவை 2045 ஆம் ஆண்டு வரை 3 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கக் கூடுமென்றும் தெரிவித்தார்.

அந்த வகையில், பெட்ரோலியத் துறையில் காணப்படும் திறன் பயிற்சி பெற்ற மனிதவள இடைவெளியைப் பூர்த்தி செய்ய இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி கல்வி நிறுவனம் மற்றும் இதர எரிசக்தி கல்வி நிறுவனங்கள் முயற்சி மேற்கொள்வதோடு தொழில் துறைக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் இடையே வலுவான பிணைப்பை ஏற்படுத்த முன்வர வேண்டும் எனவும் திரு.நாயுடு வலியுறுத்தினார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791418

 

***************



(Release ID: 1791742) Visitor Counter : 136