நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav g20-india-2023

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வங்கி கடன் வசதி குறித்த அறிக்கை: நிதி ஆயோக் வெளியீடு

Posted On: 21 JAN 2022 3:20PM by PIB Chennai

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வங்கி கடன் வசதி குறித்த அறிக்கையை நிதி ஆயோக், ராக்கி மவுன்டன் நிறுவனம் (ஆர்எம்ஐ) மற்றும் ஆர்எம்ஐ இந்தியா ஆகிய அமைப்புகள் இன்று வெளியிட்டன. இது மின்சார வாகனங்களுக்கான சில்லரைக் கடனை முன்னுரிமைத் துறையாக அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்து கூறுகிறது. ரிசர்வ் வங்கியின் முன்னரிமைத்  துறை கடன் வழிகாட்டுதல்களில் மின்சார வாகனங்களையும் சேர்ப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

2025ம் ஆண்டுக்குள் ரூ.40,000 கோடிக்கும், 2030ம் ஆண்டுக்குள் ரூ.3.7 லட்சம் கோடி அளவுக்கும் மின்சார வாகனங்களுக்கு நிதியுதவி அளிக்கும் ஆற்றலை இந்தியாவில் உள்ள வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் பெற்றுள்ளன. ஆனாலும், மின்சார வாகனங்களுக்கான சில்லரை கடனுதவி மந்தநிலையில்  இருக்கிறது.

‘‘இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் நிதி நிறுவனங்கள் முக்கியப்  பங்காற்றி, சாலைப் போக்குவரத்தில் கார்பன் உமிழ்வு இல்லாத நிலைக்கு உதவ வேண்டும்’’ என நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறுகிறார்.

 ‘‘ரிசர்வ் வங்கியின் முன்னுரிமைப் பிரிவுக்  கடன் சார்ந்த உத்தரவில், தேசிய முன்னுரிமை வாய்ந்த துறைகளில் முறையான கடன் விநியோகத்தை மேம்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சார வாகனங்களுக்குக்  கடனுதவி அளிப்பதை அதிகரிக்க வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கியால் வலுவான ஊக்கத்தொகையை அளிக்க முடியும்’’ என அமிதாப் காந்த் கூறுகிறார்.

இந்தியா, நிதி அணுகலை விரிவுபடுத்துதல் மற்றும் வேலைவாய்ப்புக்கு ஆதரவு  அளிப்பதை முன்னுரிமை பிரிவுக் கடன் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த இலக்குகளை அடைய, மின்சார வாகனங்களுக்கு கடனுதவி அளிப்பதை ரிசர்வ் வங்கி பரிசீலிக்கலாம் என இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

 

மறுவிற்பனை மதிப்பு மற்றும் தயாரிப்பின் தரம் குறித்து வங்கிகள் கவலைப்படுவதால், மின்சார வாகனங்களைக்  குறைந்த வட்டி வீதத்திலும், நீண்ட காலக்  கடன் தவனையிலும் வாடிக்கையாளர்களால் பெற முடியவில்லை. மின்சார வாகனங்களுக்கு இந்தியா விரைவில் மாற, வங்கிகள் முன்னுரிமைப்  பிரிவுக் கடன்களை  ஊக்குவித்து, 2070ம் ஆண்டு பருவநிலை இலக்குகளை அடைய உதவ முடியும்’’ என ஆர்எம்ஐ நிர்வாக இயக்குனர் கிளே ஸ்டேரங்சர் கூறுகிறார்.

 

இருசக்கர, 3 சக்கர மற்றும் 4 சக்கர மின்சார வாகனங்கள் முன்னுரிமைக்  கடன் பிரிவின் கீழ் உள்ளதாக அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.  இதை முன்னெடுத்துச் சென்று, இதர அமைச்சகங்கள் மற்றும் தொழில்துறையினரின்  ஈடுபாட்டுடன், இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான முதலீட்டை அதிகரிப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது முக்கியம்.

 

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார வாகனங்களுக்கான முன்னுரிமைக்  கடனுக்கு ஒரு தெளிவான துணை இலக்கு மற்றும் அபராத முறையையும் இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது. மேலும், மின்சார வாகனங்களை உள்கட்டமைப்பின் துணைப்பிரிவாக நிதித்துறை அமைச்சகம் அங்கீகரிக்க வேண்டும் எனவும் இந்த அறிக்கை கூறுகிறது. மின்சார வாகனங்கள் மற்றும் வர்த்தகத்துக்கு மட்டும் அல்லாமல், நிதித் துறை மறறும் இந்தியாவின் 2070ம் ஆண்டு பருவநிலை இலக்குக்கு இது போன்ற பல்முனை தீர்வுகள் அவசியம்.

 

இந்த அறிக்கையை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்:

https://www.niti.gov.in/sites/default/files/2022-01/Banking-on-EV_web_2.0a.pdf

                                                                                ***********************

 (Release ID: 1791570) Visitor Counter : 315