வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தேசிய ஒற்றைச் சாளர முறையை பெரு நிறுவனங்கள் மற்றும் அயல்நாட்டு இந்திய தூதரகங்களுக்கு எடுத்து செல்லுங்கள்: திரு பியுஷ் கோயல்

Posted On: 21 JAN 2022 3:31PM by PIB Chennai

செயல்பாடுகளின் எளிமை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை தேசிய ஒற்றைச் சாளர அமைப்பின் முக்கிய அம்சங்களாக  இருக்க வேண்டும் என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார்.

தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு தளத்தின் ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய திரு கோயல், தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட அமைச்சகங்களின் ஒப்புதல்கள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றார்.

தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு தளம் முதலீட்டாளர்களை அடையாளம் கண்டு ஒப்புதல்களுக்கு விண்ணப்பிக்க உதவுகிறது. 32 மத்திய அமைச்சகங்கள்/துறைகளில் உள்ள தகவல்களை இது வழங்குவதோடு ஆந்திரப் பிரதேசம், அசாம், கோவா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 14 மாநிலங்களும் இதில் இணைந்துள்ளன. மேலும் 6 மாநிலங்களைச்  சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விரைவான அனுமதிகளை உறுதி செய்வதற்கும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும் சிறந்த தகவல் தொடர்பு உத்தியை திட்டமிட வேண்டும் என்று திரு கோயல் கூறினார். தளத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்காக, பெரிய நிறுவனங்களுக்கும், வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுக்கும் விளக்கக்காட்சிகளை நடத்துமாறு அமைச்சர்  அறிவுறுத்தினார்.

கூடுதல் மாநிலங்களை தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு தளத்திற்குள் கொண்டு வர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடனான சந்திப்புக்கு அடுத்த மாதம் ஏற்பாடு செய்யப்படும் என்று திரு கோயல் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791481

 ****



(Release ID: 1791567) Visitor Counter : 159