பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மணிப்பூரின் 50-வது மாநில தினத்தையொட்டி பிரதமர் ஆற்றிய உரை


“மணிப்புரி மக்களின் வரலாற்றில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளின்போது அவர்களின் புத்தெழுச்சி மற்றும் ஒற்றுமைதான் அவர்களது உண்மையான வலிமை”

“முழு அடைப்புகள் மற்றும் போக்குவரத்துத் தடைகளிலிருந்து மணிப்பூர் விடுதலை பெற்று அமைதியாக திகழ வேண்டும்”

“மணிப்பூரை நாட்டின் விளையாட்டு அதிகார மையமாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது”

“கிழக்கை உற்று நோக்குங்கள் கொள்கையின் மையப் புள்ளியாக வடகிழக்கு மாநிலங்களை மாற்றுவதற்கான தொலைநோக்குத் திட்டத்தில் மணிப்பூருக்கு முக்கியப் பங்கு உள்ளது”

“மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்தில் ஏற்படும் தடைகள் அகற்றப்பட்டு அடுத்த 25 ஆண்டுகள் மணிப்பூரின் வளர்ச்சியில் அமிர்த காலமாக இருக்கும்”

Posted On: 21 JAN 2022 10:39AM by PIB Chennai

மணிப்பூரின் 50-வது மாநில தினத்தையொட்டி மணிப்பூர் மக்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதையொட்டி உரையாற்றிய அவர், இம்மாநிலத்தின் ஒளிமயமான பயணத்திற்கு அளப்பரிய பங்காற்றி, தியாகம் புரிந்துள்ள அனைவருக்கும் மரியாதை செலுத்துவதாக கூறினார். மணிப்புரி மக்களின் வரலாற்றில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளின்போது அவர்களின் புத்தெழுச்சி மற்றும் ஒற்றுமைதான் அவர்களது உண்மையான வலிமை என்றும் அவர் குறிப்பிட்டார். இம்மாநில மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவர், இந்த முயற்சிதான் மக்களின் உணர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்ளவும், மாநிலத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் வழிவகுப்பதாக கூறினார். தாங்கள் விரும்பும் அமைதியை மணிப்புரி மக்கள் அடைவார்கள் என்றும் அவர் மகிழ்ச்சித் தெரிவித்தார். “முழு அடைப்புகள் மற்றும் போக்குவரத்துத் தடைகளிலிருந்து மணிப்பூர் விடுதலை பெற்று அமைதியாக திகழ வேண்டும்என்றும் அவர் குறிப்பிட்டார்.

மணிப்பூரை நாட்டின் விளையாட்டு அதிகார மையமாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். மணிப்பூர் மாநிலத்தின் புதல்வர்களும், புதல்விகளும் தங்களது நேசம் மற்றும் திறமை மூலம் விளையாட்டுத் துறையில் பல்வேறு பெருமைகளைத் தேடித் தந்திருப்பதுடன் இந்தியாவின் முதலாவது விளையாட்டு பல்கலைக்கழகம் இம்மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டாட் அப் துறையிலும் மணிப்பூர் இளைஞர்கள் வெற்றியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். உள்ளூர் கைவினைப் பொருட்களை ஊக்குவிக்க அரசு உறுதிபூண்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கிழக்கை உற்று நோக்குங்கள் கொள்கையின் மையப் புள்ளியாக வடகிழக்கு மாநிலங்களை மாற்றுவதற்கான தொலைநோக்குத் திட்டத்தில் மணிப்பூருக்கு முக்கியப் பங்கு உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். ‘இரட்டை என்ஜின் அரசின் கீழ், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ரயில்வே திட்டங்களான ஜிரிபாம் – துபுல் – இம்பால் ரயில் பாதை உட்பட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள போக்குவரத்து இணைப்புத் திட்டங்கள் மணிப்பூருக்கு கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார். அதே போன்று இம்பால் விமான நிலையத்திற்கு சர்வதேச தகுதி கிடைத்திருப்பதன் மூலம் வடகிழக்கு மாநிலங்களுக்கு தில்லி, கொல்கத்தா மற்றும் பெங்களூருவுடனான இணைப்பு வசதிகள் மேம்பட்டுள்ளன. இந்தியா – மியான்மர் – தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலைத் திட்டம் மற்றும் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தின் மூலமும் மணிப்பூர் பலனடையும்.

மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்தில் ஏற்படும் தடைகள் அகற்றப்பட்டு அடுத்த 25 ஆண்டுகள் மணிப்பூரின் வளர்ச்சியில் அமிர்த காலமாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். மாநிலத்தின் இரட்டை என்ஜின் வளர்ச்சிக்கு வாழ்த்துக் கூறி அவர் தமது உரையை நிறைவு செய்தார்.

*******


(Release ID: 1791415) Visitor Counter : 218