பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வீட்டிலிருந்து பணிபுரியும் மற்றும் கொவிட் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள அலுவலர்களிடையே உரையாடிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், அவர்களது நலம் குறித்து கேட்டறிந்தார்

Posted On: 19 JAN 2022 6:35PM by PIB Chennai

பணியாளர் மற்றும் பயிற்சி, நிர்வாக சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறைகளைச்  சேர்ந்த, வீட்டிலிருந்து பணிபுரியும் மற்றும் கொவிட்-19 பாதிக்கப்பட்டுள்ள அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ள அலுவலர்களுடன் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று உரையாடினார்.

காணொலி மூலம் அலுவலர்களைத் தொடர்பு கொண்ட  மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், அவர்களது நலம் குறித்து கேட்டறிந்ததோடு, அவர்களது அனுபவங்கள் மற்றும் ஆலோசனைகளைப்  பகிருமாறு கேட்டுக்கொண்டார்.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதியுடைய அனைத்து ஊழியர்களும் இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டது குறித்து  டாக்டர் ஜிதேந்திர சிங் திருப்தி தெரிவித்தார். மேலும், இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத  மக்களிடம் அதை உடனடியாக செலுத்திக்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பணியாளர் மற்றும் பயிற்சித்  துறையின் 663 அதிகாரிகள் மற்றும் ஊழியர்களில் 46 பேர் லேசான தொற்று அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 20 பேர் ஏற்கனவே குணமடைந்துள்ளனர் என்றும் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

அதே போன்று, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறையிலிருக்கும் 158 பேரில் 8 பேர் மற்றும் ஓய்வூதியத் துறையைச் சேர்ந்த 58 ஊழியர்களில் 6 பேர் மூன்றாவது அலை தொற்றினால்   பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இதுவரை யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.

பெருந்தொற்றின் போது அலுவலகம் இடையூறு இல்லாமல் செயல்படுவதற்கான அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பை டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791038

**********


(Release ID: 1791084) Visitor Counter : 228