பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்



"இந்திய வரலாற்றில் மீரட் ஒரு நகரமாக மட்டுமே இருக்கவில்லை, கலாச்சாரம் மற்றும் வலிமையின் குறிப்பிடத்தக்க மையமாக உள்ளது"

“நாட்டில் விளையாட்டு செழிக்க, இளைஞர்கள் விளையாட்டில் நம்பிக்கை வைத்து விளையாட்டை ஒரு தொழிலாகக் கொள்ள ஊக்குவிக்க வேண்டியது அவசியம். இதுவே எனது தீர்மானமும் கனவும்”

"கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் விளையாட்டு உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை இந்த இடங்களில் இருந்து அதிகரித்து வருகிறது"

"வளங்கள் மற்றும் புதிய பிரிவுகளுடன் வளர்ந்து வரும் விளையாட்டு சூழலியல் புதிய சாத்தியங்களை உருவாக்குகிறது. விளையாட்டை நோக்கி நகர்வது சரியான முடிவு என்ற நம்பிக்கையை இது சமூகத்தில் ஏற்படுத்துகிறது”

"மீரட் உள்ளூர் தொழில்களுக்காக குரல் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் பொருட்களை உலகத்தரம் மிக்கதாக மாற்றுகிறது"

“எங்கள் இலக்கு தெளிவாக உள்ளது. இளைஞர்கள் உதாரணமானவர்களாக மாறுவதோடு மட்டுமல்லாமல், அவர்களது முன்மாதிரிகளையும் அங்கீகரிக்க வேண்டும்”

Posted On: 02 JAN 2022 4:38PM by PIB Chennai

 

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் செயற்கை ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து / கையெறிப்பந்து / கைப்பந்து / கபடி மைதானம், புல் டென்னிஸ் மைதானம், உடற்பயிற்சி கூடம், செயற்கை ஓடுதளம், நீச்சல் குளம், பல்நோக்கு கூடம் மற்றும் மிதிவண்டி தளம் உள்ளிட்ட அதிநவீன விளையாட்டு உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும். துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், பளு தூக்குதல், வில்வித்தை, கேனோயிங் மற்றும் கயாக்கிங் போன்றவற்றுக்கான வசதிகளும் பல்கலைக்கழகத்தில் இருக்கும். 540 பெண்கள் மற்றும் 540 ஆண் விளையாட்டு வீரர்கள் உட்பட 1080 விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திறனை பல்கலைக்கழகம் கொண்டிருக்கும்.

 

கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், சுதந்திர இந்தியாவிற்கு புதிய திசையை வழங்குவதில் மீரட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் குறிப்பிட்டார். இப்பகுதியைச் சேர்ந்த மக்கள், தேசத்தின் பாதுகாப்பிற்காக எல்லையில் தியாகம் செய்துள்ளதோடு, விளையாட்டு மைதானத்திலும் நாட்டின் மதிப்பை உயர்த்தியுள்ளனர். தேசபக்தியின் சுடரை இந்த பிராந்தியம் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். "இந்திய வரலாற்றில், மீரட் ஒரு நகரமாக மட்டும் இல்லாமல், கலாச்சாரம் மற்றும் வலிமையின் குறிப்பிடத்தக்க மையமாக உள்ளது," என்று பிரதமர் கூறினார். சுதந்திர அருங்காட்சியகம், அமர் ஜவான் ஜோதி மற்றும் பாபா ஔகர் நாத் ஜி கோவில் ஆகியவற்றின் மகத்துவத்தை தாம் உணர்ந்ததிருப்பது குறித்த தமது மகிழ்ச்சியை பிரதமர் விவரித்தார்.

 

மீரட்டில் துடிப்புடன் விளங்கிய மேஜர் தியான் சந்தை பிரதமர் நினைவு கூர்ந்தார். சில மாதங்களுக்கு முன், நாட்டின் மிகப்பெரிய விளையாட்டு விருதை அந்த விளையாட்டு மாவீரரின் பெயரில் மத்திய அரசு அறிவித்தது. மீரட்டில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகம் மேஜர் தியான் சந்துக்கு இன்று அர்ப்பணிக்கப்படுகிறது என்று பிரதமர் கூறினார்.

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முன்பு குற்றவாளிகள் மற்றும் மாஃபியாக்கள் தங்கள் விளையாட்டுகளை விளையாடிய நிலை மாறியுள்ளதை பிரதமர் குறிப்பிட்டார். சட்டவிரோத ஆக்கிரமிப்பு, மகள்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் கண்டுகொள்ளப்படாமல் இருந்த காலத்தை அவர் நினைவு கூர்ந்தார். முந்தைய காலத்தின் பாதுகாப்பின்மை மற்றும் சட்டமின்மையை அவர் நினைவு கூர்ந்தார். இப்போது திரு யோகி அரசு இதுபோன்ற குற்றவாளிகள் மத்தியில் சட்டத்தின் மீதான பயத்தை உருவாக்குகிறது என்று அவர் பாராட்டினார். இந்த மாற்றம் முழு நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் என்ற நம்பிக்கையை மகள்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

 

புதிய இந்தியாவுக்கான அடித்தளம் மற்றும் விரிவாக்கம் இளைஞர்கள் தான் என்று பிரதமர் கூறினார். இளைஞர்கள் புதிய இந்தியாவை வடிவமைத்து தலைவர்களாகவும் உள்ளனர். இன்றைய நமது இளைஞர்கள் தொன்மையின் பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதோடு, நவீனத்துவ உணர்வையும் கொண்டுள்ளனர். அதனால், இளைஞர்கள் எங்கு செல்வார்களோ, இந்தியாவும் அங்கு நகரும். மேலும், இந்தியா செல்லும் இடத்திற்கு உலகமும் செல்லப் போகிறது.

 

கடந்த சில ஆண்டுகளில், வளங்கள், பயிற்சிக்கான நவீன வசதிகள், சர்வதேச வெளிப்பாடு மற்றும் தேர்வில் வெளிப்படைத்தன்மை ஆகிய நான்கு கருவிகளை இந்திய வீரர்கள் பெறுவதற்கு தமது அரசாங்கம் முதன்மையான முன்னுரிமை அளித்துள்ளது என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். நாட்டில் விளையாட்டு வளர்ச்சியடைய, இளைஞர்கள் விளையாட்டில் நம்பிக்கை வைப்பது அவசியம் என்றும், விளையாட்டை ஒரு தொழிலாகக் கொள்ள அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். "இது என் தீர்மானம், என் கனவும் கூட! நமது இளைஞர்கள் மற்ற தொழில்களைப் போல விளையாட்டையும் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்றார் அவர். விளையாட்டை அரசு  வேலைவாய்ப்புடன் இணைத்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். டார்கெட் ஒலிம்பிக் போடியம் (டாப்ஸ்) போன்ற திட்டங்கள் மிக உயர்ந்த மட்டத்தில் போட்டியிடுவதற்கான அனைத்து ஆதரவையும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்குகின்றன. கேலோ இந்தியா திட்டம் திறமைகளை வெகு விரைவில் அடையாளம் கண்டு வருகிறது, மேலும் சர்வதேச அளவில் அவர்களை வளர்க்க அனைத்து ஆதரவும் அளிக்கப்படுகிறது. ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவின் சமீபத்திய செயல்திறன் விளையாட்டுக் களத்தில் புதிய இந்தியாவின் எழுச்சிக்கு சான்றாகும் என்று பிரதமர் கூறினார். கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் விளையாட்டு உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதால், இந்த நகரங்களில் இருந்து விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 

புதிய தேசிய கல்விக் கொள்கையில் விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அறிவியல், வணிகம் அல்லது பிற படிப்புகளின் அதே இடத்தில் விளையாட்டு இப்போது வைக்கப்பட்டுள்ளது. விளையாட்டுகள் முன்பு கூடுதல் பாடத்திட்டமாக கருதப்பட்டது, ஆனால் இப்போது விளையாட்டு பள்ளிகள் அதை முறையான பாடமாக வைத்திருக்கும். விளையாட்டு, விளையாட்டு மேலாண்மை, விளையாட்டு எழுத்து, விளையாட்டு உளவியல் போன்றவற்றை உள்ளடக்கிய விளையாட்டு சூழலியல் புதிய சாத்தியங்களை உருவாக்குகிறது என்று பிரதமர் கூறினார்.  விளையாட்டை நோக்கி நகர்வது சரியான முடிவு என்ற நம்பிக்கையை சமுதாயத்தில் இது ஏற்படுத்துகிறது என்றார் அவர். வளங்களுடன் ஒரு விளையாட்டு கலாச்சாரம் உருவாகிறது, விளையாட்டு பல்கலைக்கழகம் இதில் பெரிய பங்கை வகிக்கும், என்று பிரதமர் கூறினார். மீரட்டின் விளையாட்டு கலாச்சாரம் பற்றி பேசிய பிரதமர், இந்நகரம் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விளையாட்டு பொருட்களை ஏற்றுமதி செய்வதை சுட்டிக்காட்டினார். இதன் மூலம், உள்ளூர் தொழில்களுக்கு மீரட் ஊக்கம் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் பொருட்களை உலகத்திற்கானவையாக மாற்றுகிறது, வளர்ந்து வரும் விளையாட்டுக் குழுக்கள் மூலம் நாட்டை தற்சார்பாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.

 

உத்தரப்பிரதேசத்தின் இரட்டை எஞ்சின் அரசு பல பல்கலைக்கழகங்களை நிறுவி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். கோரக்பூரில் உள்ள மகாயோகி குரு கோரக்நாத் ஆயுஷ் பல்கலைக்கழகம், பிரயாக்ராஜில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் சட்டப் பல்கலைக்கழகம், லக்னோவில் உள்ள தடயவியல் அறிவியல் நிறுவனம், அலிகாரில் உள்ள ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக்கழகம், சஹாரன்பூரில் உள்ள மா ஷகும்பரி பல்கலைக்கழகம் மற்றும் மீரட்டில் மேஜர் தியான் சந்த் பல்கலைக்கழகம் ஆகியவற்றை அவர் பட்டியலிட்டார். “எங்கள் இலக்கு தெளிவாக உள்ளது. இளைஞர்கள் முன்மாதிரியாக மாறுவது மட்டுமல்லாமல் அவர்களின் முன்மாதிரிகளையும் அங்கீகரிக்க வேண்டும்” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

 

ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் 75 மாவட்டங்களில் 23 லட்சத்திற்கும் அதிகமான சான்றுகள் (கரவ்னி) வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். பிரதமரின் விவசாயிகள் கவுரவ நிதியின் கீழ் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் கணக்கில் பல கோடி ரூபாய் பெற்றுள்ளனர். கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சாதனை அளவிலான நிதியால் இம்மாநில விவசாயிகளும் பயன் அடைந்துள்ளனர். அதேபோல் உ.பி.யில் இருந்து 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எத்தனால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

அரசுகளின் பணி ஒரு பாதுகாவலரின் வேலையை போன்றது என்று பிரதமர் குறிப்பிட்டார். தகுதி உள்ளவர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும், தவறுகளை இளைஞர்களின் கவனக்குறைவாக நியாயப்படுத்த முயற்சிக்கக் கூடாது. தற்போதைய உத்தரப்பிரதேச அரசு இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கி சாதனை படைத்ததற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். ஐ.டி.ஐ.யில் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய தொழிற்பயிற்சி திட்டம் மற்றும் பிரதமரின் கௌஷல் விகாஸ் திட்டம் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். கங்கை விரைவுச்சாலை, பிராந்திய விரைவு ரயில் போக்குவரத்து அமைப்பு மற்றும் மெட்ரோ ஆகியவற்றின் இணைப்பின் மையமாகவும் மீரட் மாறி வருகிறது.

****

 


(Release ID: 1786960) Visitor Counter : 388