குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
தீவுகளைக் காப்பாற்றும் வகையில், உலக வெப்பநிலை அளவைக் குறைக்க உலகம் முழுவதும் உறுதியான முயற்சிகள் அவசியம்; குடியரசு துணைத்தலைவர்
Posted On:
02 JAN 2022 4:42PM by PIB Chennai
சிறு தீவுகளின் கம்பீரமான அழகை நிலைக்கச் செய்யவும், தீவுகளின் வீடுகள் காப்பாற்றப்படவும், உலக வெப்ப நிலையை ஒரு அளவுக்குள் கொண்டு வர, அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
லட்சத்தீவுகளில் தமது இரண்டு நாள் பயணத்தை நிறைவு செய்த குடியரசு துணைத்தலைவர், தமது பயண அனுபவத்தை முகநூலில் எழுதியுள்ளார். லட்சத்தீவுகள் இந்தியாவின் ரகசியம் என்று கூறியுள்ள அவர், நீலமும், பச்சை வண்ணமும் கலந்த கடல் நீர், நீண்டு வளர்ந்த பனை மரங்கள், வெள்ளை நிற மணல், அடர்ந்த நீலவானம் ஆகியவற்றால் சூழப்பட்ட மகிழ்ச்சிகரமான தீவு என வர்ணித்துள்ளார்.
பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகியவற்றால் சிறு தீவுகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கவலை வெளியிட்டுள்ள குடியரசு துணைத்தலைவர், மிகக்குறைந்த அளவு உமிழ்வை வெளியிடும் சிறு தீவுகள், அதிக அளவில் பாதிப்புக்குள்ளாவது நியாயமற்றது எனக் குறிப்பிட்டுள்ளார். கடல் மட்டம் அதிகரிப்பு, புயல்கள், வெள்ளம், கடலரிப்பு போன்றவை உலகில் உள்ள பல்வேறு தீவுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
சுற்றுலாவை மேம்படுத்தி, கடலோரச் சூழலைப் பாதுகாக்க உறுதியான முயற்சிகளை மேற்கொண்டு வரும் லட்சத்தீவு நிர்வாகத்தைப் பாராட்டிய குடியரசு துணைத்தலைவர், இந்த அணுகுமுறையை இதர சுற்றுலா தலங்கள் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தீவுகளை தூய்மையாக வைத்திருப்பதில் பங்காற்றும் லட்சத்தீவு மக்களை அவர் பாராட்டியுள்ளார்.
லட்சத்தீவு பிராந்தியத்தில், மீன் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டுள்ள குடியரசு துணைத்தலைவர், தீவு நிர்வாகம் இந்த விஷயத்தில் எடுத்து வரும் முயற்சிகளைப் புகழ்ந்துள்ளார். மீன் வளத்துறைக்கு ஊக்கமளிக்க நமது விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவின் இயற்கை பன்மைத்தன்மை குறித்து குறிப்பிட்டுள்ள குடியரசு துணைத்தலைவர், ‘’ சுற்றுலா என்று வரும்போது இந்தியா சிறந்தவற்றை கொண்டுள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது. வலிமையான இமயமலை, ராஜஸ்தானின் கட்டட விநோதம், இமாச்சலப் பிரதேசத்தின் பளிங்கு போன்ற தெளிந்த நீர் கொண்ட ஏரிகள், உத்தராகண்டின் ஆன்மீக வழிகள், வியப்பூட்டும் கோவாவின் கடற்கரை, கேரளாவின் அமைதியான உப்பங்கழிகள், மத்தியப்பிரதேசத்தின் வனவிலங்கு சரணாலயங்கள், வடகிழக்கின் இதயத்தைக் கொள்ளை கொள்ளும் இயற்கைக் காட்சிகள், தேயிலை தோட்டங்கள், கட்சின் ரான் அழகு’’ என பட்டியலிட்டுள்ளார். இந்தியாவில் ஒவ்வொருவரும் பயணம் செய்து, நமது தாய்நாட்டின் அழகிய அம்சங்களை அனுபவிக்குமாறு குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தியுள்ளார். அதே சமயம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாதவாறு பயணம் அமைய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
****
(Release ID: 1786955)
Visitor Counter : 239