பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
பினா (ம.பி) - பான்கி (உ.பி) பல்பொருள் குழாய் இணைப்பு திட்டம் .
திட்டத்தின் மொத்த செலவு ரூ.1524 கோடி.
இத்திட்டம் கிழக்கு உ.பி. மத்திய உ.பி, வடக்கு பிஹார் மற்றும் தெற்கு உத்தராகண்ட் ஆகிய பகுதிகளில் பெட்ரோலிய தயாரிப்புகள் கிடைப்பதை மேம்படுத்தும்.
கட்டுமான காலத்தில், 5 லட்சம் வேலை நாட்களுக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
Posted On:
28 DEC 2021 4:22PM by PIB Chennai
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பினா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து, உத்தரப் பிரதேசம் கான்பூர் பான்கியில் உள்ள பிஓஎல் முனையத்துக்கு பல்பொருள் குழாய் இணைப்பு திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். 356 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இத்திட்டம், ஆண்டுக்கு 3.45 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோலியப் பொருட்களை கொண்டு செல்லும் திறன் படைத்தது. சேமிப்பு திறனை அதிகரித்தல் மற்றும் பாங்கி பிஓஎல் முனையத்தில் ரயில் மூலம் பெட்ரோலியப் பொருட்களை அனுப்பும் வசதி ஆகியவையும் இத்திட்டத்தில் அடங்கியுள்ளன. இத்திட்டத்தின் மொத்த செலவு ரூ.1524 கோடி. (உ.பி.யில் ரூ.1227 கோடி மற்றும் ம.பி.யில் ரூ.297 கோடி). இத்திட்டம் உத்தரப் பிரதேசத்தில் லலித்பூர், ஜான்சி, ஜலான், கான்பூர் தெஹத் மற்றும் கான்பூர் நகர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் சாகர் மற்றும் திகம்கர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது.
இத்திட்டம், நிறைவு செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட காலமான 2021 டிசம்பருக்கு, ஒரு மாதம் முன்பே அனுமதிக்கப்பட்ட செலவுக்குள் முடிக்கப்பட்டுள்ளது. இந்த பல்பொருள் குழாய் இணைப்பு திட்டம் மூலம் பினா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பாதுகாப்பாகவும், திறம்படவும் பெட்ரோலியப் பொருட்களை கொண்டு செல்ல முடியும் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசம், மத்திய உத்தரப் பிரதேசம், வடக்கு பிஹார் மற்றும் தெற்கு உத்தராகண்ட் ஆகிய பகுதிகளில் பெட்ரோலியப் பொருட்கள் கிடைப்பது மேம்படும்.
இந்த பல்பொருள் குழாய் இணைப்பு திட்டத்தில் 18 இன்ஞ் விட்டம் உள்ள குழாய் 356 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் உ.பி.யில் 283 கி.மீ தூரமும், ம.பி.யில் 73 கி.மீ தூரமும் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 3.5 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற பெட்ரோலியப் பொருட்களை பினா முனையத்திலிருந்து, கான்பூர் பான்கியில் உள்ள பிஓஎல் முனையத்துக்கு கொண்டு செல்ல முடியும். இத்திட்டத்தில் கீழ்கண்ட வசதிகளும் உள்ளன.
A. பினாவில் குழாய்வழி விநியோக முனைய கட்டுமானம்.
B. பான்கியில்(கான்பூர்) குழாய் வழி சேகரிப்பு முனையம். இங்கு சேமிப்பு 3,04,00,000 லிட்டரிலிருந்து 16,72,00,000 லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.
C. ரயிலில் சரக்கு ஏற்றும் வசதி.
D. 11 எஸ்.வி. நிலையங்கள் மற்றும் குழாய் வழித்தடத்துடன் ஒரு இடைநிலை சுத்தப்படுத்தும் நிலையம்.
இத்திட்டத்தின் கட்டுமான பணியின் போது, 5 லட்சம் வேலை நாட்களுக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கு அதிகபட்சமாக 200 பேருக்கு வேலை கிடைக்கும்.
பெட்ரோலியப் பொருட்களை அதிகளவில், அனுப்புவதற்கு குழாய் வழி பாதைகள் மிகவும் பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது. குறைந்த செலவில், நம்பகமான முறையில் பெட்ரோலியப் பொருட்களை அனுப்ப முடியும். லாரிகள் மூலம் கொண்டு செல்வதை தவிர்ப்பதன் மூலம் கார்பன் மாசும் குறையும்.
************************
(Release ID: 1785894)
Visitor Counter : 307