பிரதமர் அலுவலகம்

இமாச்சலப்பிரதேசத்தின் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கான பூமி பூஜைக்கு பிரதமர் தலைமை வகித்தார்

இமாசலப்பிரதேசத்தின் மண்டியில் ரூ.11, 000 கோடிக்கும் மேல் மதிப்பிலான நீர் மின் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து & அடிக்கல் நாட்டினார்

“இன்று தொடங்கி வைக்கப்பட்ட நீர்மின் திட்டங்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது”

“2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் நிறுவப்பட்ட மின்சார உற்பத்தித் திறனில் 40 சதவீதத்தை புதை படிமம் அல்லாத வளங்கள் மூலம் மேற்கொள்வதென 2016-ல் இந்தியா இலக்கு நிர்ணயித்தது. இந்த இலக்கை இந்தியா இந்த ஆண்டு நவம்பரிலேயே அடைந்துவிட்டது”

“எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக் பரவியுள்ளது, பிளாஸ்டிக் ஆற்றுக்குள் விடப்படுகிறது, இமாசலப்பிரதேசத்திற்கு அது ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகளைத் தடுக்க நாம் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”

“இந்தியா தற்போது உலகின் மருந்தகம் என்றழைக்கப்படுகிறது என்றால், அதன் பின்னணியில் இமாச்சல் இருக்கிறது”

“இமாச்சலப்பிரதேசம் பிற மாநிலங்களுக்கு உதவியதோடு மட்டுமின்றி, உலகளாவிய பெருந்தொற்றுக் காலத்தில் பிற நாடுகளுக்கும் உதவியது”

“தாமதப்படுத்தும் சிந்தனைகள், இமாச்சல் மக்களை பல தசாப்தங்களாக காத்திருக்க வை

Posted On: 27 DEC 2021 2:39PM by PIB Chennai

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டியில், இன்று நடைபெற்ற இரண்டாவது இமாச்சலப்பிரதேச உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கான பூமி பூஜைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை வகித்தார். இந்த மாநாடு ரூ.28,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் மூலம் இப்பகுதியில், முதலீட்டிற்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.11,000 கோடிக்கும் மேல் மதிப்புள்ள  நீர்மின் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.  ரேணுகாஜி அணைக்கட்டுத் திட்டம், லூரி நீர் மின் திட்டம் நிலை-1, மற்றும் தௌலசித் நீர் மின் திட்டம் போன்றவை இந்த நீர் மின்திட்டங்களில் அடங்கும். அத்துடன் சவ்ரா – குட்டூ நீர் மின் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இமாச்சலப்பிரதேச ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இமாச்சலப்பிரதேச முதலமைச்சர் திரு ஜெய் ராம் தாக்கூர், மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இமாச்சலப் பிரதேசத்துடனான தமது உணர்ச்சிப்பூர்வ பிணைப்பை நினைவு கூர்ந்ததுடன், இந்த மாநிலமும் அதன் மலைப்பகுதிகளும் தமது வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்துள்ளன என்றார். இரட்டை எஞ்சின் அரசு நான்கு ஆண்டுகாலத்தை பூர்த்தி செய்திருப்பதற்காக இமாச்சலப் பிரதேச மக்களுக்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.  இந்த நான்கு ஆண்டு காலத்தில், இம்மாநிலம் பெருந்தொற்று சவாலை எதிர்கொண்டதுடன் வளர்ச்சியின் உச்சத்தையும் எட்டியிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். ”ஜெய் ராம் மற்றும்  ஆற்றல் மிக்க அவரது அணியினர், இமாச்சலப்பிரதேச மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான எந்த வாய்ப்பையும் நழுவ விடவில்லை” என்று  பிரதமர் சுட்டிக்காட்டினார்.

நாட்டு மக்களின் ‘வாழ்க்கையை எளிதாக்குவது’ தலையாய முன்னுரிமையாக இருப்பதோடு, மின்சாரம் இதில் பெரும் பங்கு வகிப்பதாகவும் பிரதமர் கூறினார்.  இன்று தொடங்கி வைக்கப்பட்ட நீர் மின் திட்டங்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. “கிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் ஸ்ரீ ரேணுகாஜி அணைக்கட்டுத்திட்டம் முடிவடையும் போது, அதன்  மூலம் பெரும் பகுதி நேரடியாக பலனடையும்.  இந்தத் திட்டத்தின் மூலம் எவ்வளவு வருவாய் கிடைத்தாலும், அதில் பெரும் பகுதி இப்பகுதியின் வளர்ச்சிக்காக செலவிடப்படும்” என்று பிரதமர் குறிப்பிட்டார். 

புதிய இந்தியா பணியாற்றும் விதத்தை மாற்ற வேண்டும் என பிரதமர்  வலியுறுத்தினார்.  சுற்றுச்சூழல் தொடர்பான இலக்குகளை இந்தியா எட்டிய வேகத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.

“2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் நிறுவப்பட்ட மின்சார உற்பத்தித் திறனில் 40 சதவீதத்தை புதைப் படிமம் அல்லாத வளங்கள் மூலம் மேற்கொள்வதென 2016-ல் இந்தியா இலக்கு நிர்ணயித்தது. இந்த இலக்கை இந்தியா இந்த ஆண்டு நவம்பரிலேயே எட்டியிருப்பது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமிதத்தை அளிக்கிறது” என்று பிரதமர் தெரிவித்தார். “சுற்றுச்சூழலையும் பாதுகாத்துக் கொண்டே இந்தியா எவ்வாறு வளர்ச்சியையும்  விரைவுப்படுத்துகிறது  என்று ஒட்டுமொத்த உலகமும் பாராட்டுகிறது. சூரியசக்தி மின்சாரம் முதல் நீர் மின்சாரம் வரையிலும் காற்றாலை மின்சாரத்திலிருந்து பசுமை ஹைட்ரஜன் வரையிலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான  அனைத்து வளங்களையும் முழுமையாக பயன்படுத்த நாடு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது”  என்று பிரதமர் தெரிவித்தார்.

ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய  பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற தமது கருத்தையும் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். பிளாஸ்டிக்கால் மலைகளுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்பு குறித்து அரசு விழிப்புடன் இருப்பதாகவும் அவர் கூறினார். ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய  பிளாஸ்டிக்கிற்கு எதிராக நாடு தழுவிய இயக்கம் மேற்கொள்ளப்படுவதுடன், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைப் பணிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை  சுட்டிக்காட்டிய திரு மோடி, “இமாச்சலப் பிரதேசத்தை தூய்மையானதாகவும், பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகள் இல்லாததாகவும் பராமரிப்பதில் சுற்றுலாப் பயணிகளுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது. எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக் பரவியுள்ளது, பிளாஸ்டிக் ஆற்றுக்குள் விடப்படுகிறது, இமாசலப்பிரதேசத்திற்கு அது ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகளைத் தடுக்க நாம் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

இமாச்சலப் பிரதேசத்தில் மருந்து தயாரிப்புத் தொழில் வளர்ச்சி அடைந்து வருவது குறித்தும் பிரதமர் பாராட்டினார். “இந்தியா தற்போது உலகின் மருந்தகம் என்றழைக்கப்படுகிறது என்றால், இமாச்சல் அதன் பின்னணியில் இருப்பது தான் காரணம்.  “இமாச்சலப்பிரதேசம் பிற மாநிலங்களுக்கு உதவியதோடு மட்டுமின்றி, உலகளாவிய பெருந்தொற்றுக் காலத்தில் பிற நாடுகளுக்கும் உதவியது” என்று அவர் தெரிவித்தார்.

இம்மாநிலத்தின் சிறப்பான செயல்பாடு பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், “தகுதியான மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் மற்ற மாநிலங்களைவிட இமாச்சல் முன்னணியில் உள்ளது. இங்கு அரசு பொறுப்பில் இருப்பவர்கள், அரசியல் சுயநலத்தில் மூழ்காமல், இமாச்சலில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் எவ்வாறு தடுப்பூசி செலுத்துவது என்பதிலேயே தங்களது முழுக் கவனத்தையும் செலுத்தினர்” என்றார்.

பெண்களின் திருமண வயது வரம்பை மாற்றுவதென்ற அரசின் சமீபத்திய முடிவையும் பிரதமர் குறிப்பிட்டார். “ஆண்கள் எந்த வயதில் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்களோ அதே வயதில் பெண்களும் திருமணம்  செய்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்.  பெண்களுக்கான திருமண வயதை 21-ஆக உயர்த்தியிருப்பது, அவர்கள் தங்களது படிப்பை முடிக்க முழு கால அவகாசம் அளித்திருப்பதுடன், அவர்கள் தங்களது எதிர்கால வாழ்க்கையை நிர்ணயித்துக் கொள்ளவும் வகை செய்துள்ளது” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

புதிய தடுப்பூசி வகை குறித்த சமீபத்திய அறிவிப்புகள் குறித்தும் பிரதமர் பேசினார். அனைத்துத் தேவைகளையும் மனதில் கொண்டு மிகுந்த  பொறுப்புணர்வு மற்றும் எச்சரிக்கையுடன் அரசு பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.  தற்போது, 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கும் ஜனவரி 3 முதல் தடுப்பூசி செலுத்துவதென அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரொனாவுக்கு எதிரானப் போரில், மருத்துவத்துறையினரும், முன்களப்பணியாளர்களும் தொடர்ந்து நாட்டிற்கு வலிமை சேர்த்து வருகின்றனர்.  இந்தப் பிரிவினருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (பூஸ்டர்) செலுத்தும் பணியும் ஜனவரி 10 முதல் தொடங்குகிறது. ஏற்கனவே பல்வேறு கடுமையான நோய் பாதிப்புடைய 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி முன்னெச்சரிக்கை தவணை செலுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரும் முயற்சிப்போம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் பணியாற்ற, அரசு உறுதிபூண்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். “ஒவ்வொரு நாடும் மாறுபட்ட சிந்தனையுடையதாகும், ஆனால், தற்போது நம் நாட்டு மக்களுக்கு, இரண்டு சிந்தனைகள் தெளிவாகத் தெரிகிறது. ஒரு சிந்தனை தாமதப்படுத்துவது, மற்றொன்று வளர்ச்சிப் பற்றியது.   தாமதப்படுத்தும் சிந்தனை உடையவர்கள், ஒரு போதும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலனில் அக்கறை செலுத்தியது இல்லை” என்றும்  அவர் தெரிவித்தார்.  தாமதப்படுத்தும் சிந்தனைகள், இமாச்சலப் பிரதேச மக்களை பல தசாப்தங்களாக காத்திருக்க வைத்துள்ளது. இதன் காரணமாக, அடல் சுரங்கப் பாதைப் பணிகள்,  பல ஆண்டுகளாக தாமதமாகி வந்தது.  ரேணுகா திட்டமும் 30 ஆண்டுகளுக்கு மேல் தாமதமானது. அரசாங்கத்தின் உறுதிப்பாடு வளர்ச்சிப் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  அடல் சுரங்கப்பாதைப் பணிகள் நிறைவேற்றி முடிக்கப்பட்டிருப்பதோடு, சண்டிகரை மணாலி மற்றும் சிம்லாவுடன் இணைக்கும் சாலையும் அகலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இமாச்சலப் பிரதேசம் தான் பெரும்பாலான பாதுகாப்புப் படையினருக்கு சொந்த ஊராக உள்ளது. ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் நலனுக்காக  அரசு மேற்கொண்டு வரும் நலத்திட்டங்கள் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார். “இமாச்சலப்பிரதேசத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும், நாட்டைப் பாதுகாக்கக் கூடிய தீரமிக்க புதல்வர்களும், புதல்விகளும் உள்ளனர்.   நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க கடந்த 7 ஆண்டுகளில் எங்களது அரசு மேற்கொண்ட பணி, வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் நலனுக்காக  மேற்கொண்ட முடிவுகள், இமாச்சலப்பிரதேச மக்களுக்கும் பயன் அளித்துள்ளது” என்று கூறி அவர் தமது உரையை நிறைவு செய்தார்.

------



(Release ID: 1785561) Visitor Counter : 298