உள்துறை அமைச்சகம்

புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற நல்லாட்சி வாரத்தின் நிறைவு விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்

Posted On: 25 DEC 2021 6:47PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற நல்லாட்சி வாரத்தின் நிறைவு விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார். மத்திய அமைச்சர் திரு ஜிதேந்திர சிங், மத்திய உள்துறை செயலாளர், மத்திய அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் மற்றும் மாநிலங்களின் மூத்த அதிகாரிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர், இன்று டிசம்பர் 25-ம் தேதிக்கு வித்தியாசமான முக்கியத்துவம் உள்ளது என்றார். நாட்டின் வளர்ச்சி, சுதந்திரம் மற்றும் நாட்டிற்கு ஒரு புதிய திசையை வழங்குவதற்காக தங்களது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த நாட்டின் இரண்டு பெரிய ஆளுமைகளின் நினைவுகள் இந்த நாளுடன் இணைந்துள்ளன.

பண்டிட் மதன் மோகன் மாளவியா, சுதந்திரத்திற்கு முன் நாட்டின் பெருமையை உலகறிய பாடுபட்டவர். வாராகி முயற்சியால், இந்தியாவின் கலாச்சாரம், மரபுகள், புராண அறிவு, அறிவியல், வேத கணிதம் போன்ற பாடங்கள் உலகத்தின் முன் பெருமையுடன் வைக்கப்பட்டன. அனைத்து பாடங்களின் பாதுகாப்பும் ஊக்குவிப்பும் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகிற்கும் மிகவும் முக்கியமானது, ஏனெனில் அவற்றில் பல உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவும்  என்று அவர் கூறினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை நிறுவனர்  பாரத ரத்னா பண்டிட் மதன் மோகன் மாளவியா பிறந்த தினம் இன்று.

நவீன இந்தியாவில் நல்லாட்சி என்ற வார்த்தையின் உண்மையான பொருளை களத்திற்கு கொண்டு வந்த மறைதிரு அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளும் இன்று. திரு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நாட்டின் பெருமையுடன் தொடர்புடைய பல பிரச்சினைகளுக்கு முடிவுகள் எடுக்கப்பட்டன. எதிர்காலத்தில் அரசாங்கங்கள் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதைக் காட்டும் வலுவான மற்றும் சிறந்த முன்மாதிரியை நாட்டு மக்களின் முன் வைத்தார்  வாஜ்பாய்.

விடுதலையின் மஹோத்சவ ஆண்டில் (சுதந்திரத்தின் 75-வது ஆண்டு) நல்லாட்சி வாரத்தை கொண்டாடும் முடிவை பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். இதன் காரணமாக நல்லாட்சி தத்துவம் தில்லியில் இருந்து மாவட்டங்கள் மற்றும் கிராமங்களுக்கு விரிவாக்கப்பட்டது, அரசின் முழு அமைப்பிலும் நல்ல நிர்வாகத்திற்கு  இது வழிவகுத்தது. இது ஒரு பெரிய சாதனை.

2014-ல் திரு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றபோது, இந்த அரசின் நோக்கம் ஆட்சி செய்வது மட்டுமல்ல, நாட்டை மாற்றுவது என்று முதல்முறையாக மக்கள் கருதினர் என்று திரு அமித்ஷா கூறினார். 70 ஆண்டுகளாக நமது ஜனநாயக அமைப்பின் மீது மக்களின் நம்பிக்கை படிப்படியாக குறைந்து வந்தது. சுயாட்சியை நல்லாட்சியாக மாற்றும் போதுதான் ஜனநாயகத்தின் வெற்றி மக்களைச்  சென்றடையும். மக்களுடைய இந்த எதிர்பார்ப்பை திரு நரேந்திர மோடி அவர்கள் சிறந்த முறையில் நிறைவேற்றியுள்ளதன் காரணமாக. மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்போது, நாடு எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு குடிமகனும் கற்பனை செய்கிறார். இந்த நாடு 22 அரசாங்கங்களை கண்டுள்ளது அதன் பின்னர் இப்போதுதான் இந்த மாற்றத்தைக்  காண முடிந்தது.

வளர்ச்சியின் மாதிரி அனைவருக்குமானதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்பதே நல்லாட்சியில் இருந்து மக்கள் எதிர்பார்ப்பது என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் கூறினார். வளர்ச்சியைத்  தொடாத நாட்டின் எந்தப் பகுதியும் இருக்கக்கூடாது, வளர்ச்சியின் மாதிரியில் சேர்க்கப்படாத எந்தவொரு நபரும் சமூகத்தில் இருக்கக்கூடாது. ஊழலற்ற, வெளிப்படையான ஆட்சி, அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நேர்மையான முயற்சி, பொறுப்புணர்வோடு செயல்திறன், புத்தாக்கம், நிலைத்தன்மை ஆகியவற்றோடு அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் ஆட்சி இருக்க வேண்டும் என்பதுதான் நல்லாட்சியின் முன்மாதிரி மற்றும் மக்களின் எதிர்பார்ப்பு. இந்த வகை ஜனநாயகம் கட்டமைக்கப்பட வேண்டும். மக்களின் இந்த ஏழு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

திரு அமித் ஷா மேலும் கூறுகையில், முன்பு வளர்ச்சிக்கு வேறு பொருள் இருந்தது: நிறைய குழப்பங்கள் இருந்தன. ஆனால்  மோடி அரசு ஒரு நல்ல முயற்சியை மேற்கொண்டு இந்த குழப்பங்களை எல்லாம் முடிவுக்கு கொண்டு வந்தது. இந்த அரசின் ஏழு வருடங்களில் அனைத்து முரண்பாடுகளையும் களைந்து அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம். விவசாயம், தொழில், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, நீர்ப்பாசனம், ஊரக வளர்ச்சி, நகர்ப்புற மேம்பாடு, பழங்குடியினர் மேம்பாடு என அனைத்துத் துறைகளையும் தொடும் வகையில் தெளிவான கொள்கைகளை வகுக்க  மோடி அரசு உழைத்துள்ளது. அனைவருக்குமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டுக்கு முன் நமது 80 கோடி ஏழைக் குடிமக்களிடம் பிரதமர்களும், அரசுகளும் வந்து செல்கிறார்கள் அதனால் என்ன பயன் என்ற பெரிய கேள்வி இருந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. 2014-க்கு முன், 60 கோடி மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒரு வங்கிக் கணக்கு கூட இல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தில் எந்த பங்களிப்பும் இல்லாமல் இருந்தனர். 10 கோடிக்கும் அதிகமான வீடுகளில் கழிப்பறை இல்லை, 30 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சாரம் இல்லை, 140 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு எரிவாயு இல்லை, சுகாதாரத் துறையில் மிகப்பெரிய வெற்றிடம் இருந்தது. ஏழைகள் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டபோது ஆதரவற்றவர்களாக உணர்ந்தார்கள், கடவுளைத் தவிர வேறு யாரையும் அவர்கள் நினைக்க இயலவில்லை. ஆதரவற்ற ஏழை ஒருவர் தனது அன்புக்குரியவர் இறப்பதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தால் சுதந்திரத்திற்கு எந்த அர்த்தமும் இல்லை என்று திரு அமித் ஷா கூறினார்.

மோடி அரசு முதன்முறையாக 2 கோடிக்கும் அதிகமானோருக்கு வீடுகளை வழங்குவதன் மூலம் நாட்டின் முன் முக்கிய இலக்கை நிர்ணயித்துள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் மற்றும் கழிப்பறைகள் வழங்கும் பணியும் நிறைவடைந்துள்ளது, 14 கோடி வீடுகளுக்கு சமையல் எரிவாயுவை வழங்குவதன் மூலம் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த திரு மோடி உழைத்துள்ளார். ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்ற இலக்கு 2022 டிசம்பருக்கு முன் நிறைவேற்றப்படும். எந்த ஒரு தீவிர நோய்க்கும் சிகிச்சை அளிக்க  ரூ. ஐந்து லட்சம் வழங்கப்படும். கொவிட்-19 பெருந்தொற்றின் போது கூடமோடி அரசு ஒரு நபருக்கு 25 கிலோ உணவு தானியங்களை 2 ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்கியதன் மூலம் 80 கோடி மக்களை பட்டினியிலிருந்து காப்பாற்றியது. நாட்டின் வளர்ச்சியில் இருந்து தங்களைத் துண்டித்துக் கொண்ட நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இன்று புதிய நம்பிக்கையுடன் உள்ளனர்.

மோடி அரசு மிகவும் திட்டமிட்ட முறையில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றார் அவர். இதுமட்டுமின்றி கறுப்புப் பணத்துக்கு எதிராகப் பல சட்டங்கள் இயற்றப்பட்டன, பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு எதிராக, பினாமி சொத்துக்களுக்கு எதிராகச் சட்டங்கள் இயற்றப்பட்டன, போலி நிறுவனங்களுக்கு எதிராகப் பெரும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜைத் தடுக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. திரு நரேந்திர மோடி இதைச் செய்தார். இதன் காரணமாக, இன்று 7 ஆண்டுகளுக்குப் பிறகும், ஊழல் குற்றச்சாட்டை யாரும் முன்வைக்க முடியாத அரசாக, வெளிப்படைத் தன்மைக்கு சிறந்த உதாரணமாக மோடி அரசு விளங்குகிறது என்று பொதுமக்கள் முன் நம்பிக்கையுடன் கூறலாம்.

நாடு முழுவதும் வழங்கப்பட்டுவரும் தடுப்பூசிகள் குறித்தும், ராணுவத்தினர், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரின் நலனுக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் திரு அமித் ஷா பேசினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785170

****



(Release ID: 1785195) Visitor Counter : 209