இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகமையின் அங்கீகாரத்தை தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகம் மீண்டும் பெற்றது

Posted On: 23 DEC 2021 6:11PM by PIB Chennai

உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை (வாடா) அங்கீகாரத்தை தேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகம் (என்டிடிஎல்) மீண்டும் பெற்றுள்ளது. தேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகத்திற்கான அங்கீகாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக வாடா மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகத்தின் ஊக்கமருந்து எதிர்ப்பு சோதனை மற்றும் நடவடிக்கைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும்.

 

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். அங்கீகாரத்தை மீட்டெடுப்பது, விளையாட்டில் உயர்ந்த உலகளாவிய தரத்தை அடைவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதாக திரு தாக்கூர் குறிப்பிட்டுள்ளார்.

 

அங்கீகாரத்தை மீட்டெடுக்க என்டிடிஎல்லில் உள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குழுவும் அயராது உழைத்துள்ளனர். 2018 செப்டம்பரில் நடைபெற்ற ஆய்வகத்தின் மதிப்பீட்டின் போது கவனிக்கப்பட்ட இணக்கமின்மைகளின் அடிப்படையில் என்டிடிஎல்லின் வாடா அங்கீகாரம் 20 ஆகஸ்ட் 2019 அன்று இடைநிறுத்தப்பட்டது.

 

என்டிடிஎல்லின் செயல்முறைகள் மற்றும் வழிமுறைகளை ஆய்வகங்களுக்கான சர்வதேச தரநிலையின் (ஐஎஸ்எல்) சமீபத்திய பதிப்பு மற்றும் வாடா தொழில்நுட்ப ஆவணங்கள், 2021 ஆகியவற்றுடன் முழுவதும் இணக்கமிக்கவையாக்குவதற்கு தொடர்ச்சியான வழிகாட்டுதலையும் ஆதரவையும் வாடா வழங்கி வருகிறது.

 

இதன் விளைவாக, விரைவான முன்னேற்றங்களை என்டிடிஎல் அடைந்துள்ளது. இப்போது அதன் வசதிகள் உலகம் முழுவதும் உள்ள வாடா அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களுக்கு இணையாக முழுமையான தயார்நிலையில் உள்ளன. சிறந்து விளங்குவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளில், தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கவுகாத்தி மற்றும் சிஎஸ்ஐஆர்-ஐஐஎம் ஜம்மு ஆகியவற்றுடன் ஊக்கமருந்து எதிர்ப்பு அறிவியலில் ஆராய்ச்சியில் என்டிடிஎல் ஒத்துழைத்து வருகிறது. அதன் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மற்றும் ஊக்கமருந்து எதிர்ப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக வாடா அங்கீகாரம் பெற்ற இதர ஆய்வகங்களுடனும் என்டிடிஎல் ஒத்துழைத்து வருகிறது.

 

நாட்டில் அதிக ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகங்களை நிறுவவும் அங்கீகரிக்கவும் அரசு ஆர்வமாக உள்ளது. நாட்டின் மக்கள் தொகை மற்றும் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளும் போது, அதிக எண்ணிக்கையிலான மாதிரிகளைச் சோதிக்கும் திறனை இத்தகைய ஆய்வகங்கள் வலுப்படுத்தும். மெகா விளையாட்டு நிகழ்வுகளை இந்தியாவில் நடத்துவதற்கும் இவை உதவும்.

 

17 டிசம்பர் 2021 அன்று தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு மசோதா 2021 நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, விளையாட்டு சக்தியாக மாறுவதற்கான இந்தியாவின் முயற்சியில் இது மற்றொரு படியாகும்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784617

**************

 



(Release ID: 1784645) Visitor Counter : 255