சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
21 DEC 2021 3:06PM by PIB Chennai
தேசிய கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ், 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் அனைவருக்கும், அவர்களது சமூக பொருளாதார நிலையைக் கணக்கில் கொள்ளாமல், அரசு கொவிட்-19 தடுப்பூசி மையங்களில் கட்டணம் இன்றி கொவிட்-19 தடுப்பூசியை செலுத்தி வருகிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், துறவிகள், நாடோடிகள், அகதிகள், ஆதரவற்றோர், வீடற்ற மக்கள், பிச்சைக்காரர்கள் உள்ளிட்ட உரிய அடையாள அட்டையில்லாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு, குறிப்பிட்ட நடைமுறைகள் மூலம், 100% தடுப்பூசியும் செலுத்தப்படும் சிறப்பு முகாம்கள் வாயிலாக, அந்த இடத்திலேயே பதிவு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மூத்த குடிமக்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கொவிட்-19 தடுப்பூசி மையங்களிலும், நடமாட்டம் இன்றி படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு அவர்களது வீட்டிற்கே சென்றும் தடுப்பூசி செலுத்த, அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தவிர, 3 நவம்பர் 2021 முதல் வீடு வீடாகச் சென்று, இதுவரை முதல் டோஸ் செலுத்தாதவர்களையும், இரண்டாவது டோஸ் செலுத்த வேண்டியவர்களையும் அடையாளம் கண்டறிந்து தடுப்பூசி செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான, சரியான மற்றும் விரிவான சிகிச்சை அளிக்க ஏதுவாக பல்வேறு வகையான கொவிட் சிகிச்சை மையங்களில் அனுமதிக்க தேசிய கொள்கை ஒன்று வெளியிட்டிருப்பதுடன் பரிசோதனை எண்ணிக்கையையும் மத்திய அரசு கணிசமாக அளவு அதிகரித்திருப்பதாகவும் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783810
-------
(रिलीज़ आईडी: 1783971)
आगंतुक पटल : 309