கலாசாரத்துறை அமைச்சகம்
வந்தே பாரதம் - நாட்டிய விழா இறுதி நிகழ்ச்சி புதுதில்லியில் நேற்று நடந்தது: 36 குழுக்கள் வென்றன.
Posted On:
20 DEC 2021 4:26PM by PIB Chennai
விடுதலையின் வைர விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘வந்தே பாரதம் - நாட்டிய விழா’ புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று (டிசம்பர் 19ம் தேதி) நடந்தது. தில்லியில் உள்ள மோகினி ஆட்டம் சர்வதேச அகாடமி, ஜெய் கோஜ் நடன குழு, ரேகா நடன குழு ஆகியவை உட்பட 36 குழுக்கள் வென்றன.
நடன விழாவின் இறுதி நிகழ்ச்சியில் மத்திய கலாச்சார மற்றும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் திருமதி. மீனாட்சி லெக்கி மற்றும் கலாச்சார துறை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இறுதி நிகழ்ச்சியில் நடுவர்களாக திருமதி கீதாஞ்சலி லால், திருமதி. மைத்ரேயீ பஹாரி மற்றும் சந்தோஷ் நாயர் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திருமதி. மீனாட்சி லெக்கி, ‘மக்கள் பங்களிப்புடன் வந்தே பாரதம் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்பது பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ஆசை. அதற்கேற்றபடி, நாடு முழுவதும் உள்ள நடன கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இது இந்தியாவின் ஒற்றுமையை கொண்டு வருகிறது. இந்தியாவின் வளமான கலாச்சாரம், உலகம் முழுவதும் உள்ள மக்களை ஈர்க்கிறது. இதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். நாட்டின் பல பகுதிகளில் உள்ள நடன கலைஞர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வருவதற்காக வந்தே பாரதம் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இதில் 200க்கு மேற்பட்ட குழுக்களைச் சேர்ந்த 2,400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கொல்கத்தா, மும்பை, பெங்களூரு மற்றும் புதுதில்லியில் கடந்த 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை பல பிரிவுகளில் நடத்தப்பட்ட நடன நிகழ்ச்சிகளில் இவர்கள் பங்கேற்று ரசிகர்களின் பாராட்டை பெற்றனர். தில்லியில் நடந்த இறுதி போட்டியில் 64 குழுக்களைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
இறுதி போட்டியில் வெற்றி பெற்றவர்கள், தில்லியில் அடுத்த ஜனவரி மாதம் 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா சிறப்பு அணிவகுப்பில் பங்கேற்பர். இறுதி போட்டியில் வெற்றி பெற்ற 36 குழுவினருக்கும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783463
******************
*
(Release ID: 1783625)
Visitor Counter : 143