பிரதமர் அலுவலகம்

டிசம்பர் 21 அன்று பிரயாக் நகருக்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர், 2 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்


பெண்களுக்கு, குறிப்பாக அடித்தள நிலையில் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் எனும் பிரதமரின் தொலைநோக்கு திட்டத்தின் படி இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது

சுமார் 16 லட்சம் பெண் உறுப்பினர்கள் பயனடையும் வகையில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.1000 கோடியைப் பிரதமர் பரிவர்த்தனை செய்யவுள்ளார்

தோழிகள் எனப்படும் வணிகத் தொடர்பாளர்களுக்கான முதல் மாத உதவித் தொகையைப் பரிவர்த்தனை செய்யவிருக்கும் பிரதமர், 1 லட்சத்திற்கும் அதிகமான முதலமைச்சரின் மகளிர் நல்வாழ்வுத் திட்டப் பயனாளிகளுக்குப் பணப்பரிவர்த்தனையையும் செய்வார்

200-க்கும் அதிகமான ஊட்டச்சத்து தயாரிக்கும் துணை அமைப்புகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்

Posted On: 20 DEC 2021 9:04AM by PIB Chennai

2021, டிசம்பர் 21 அன்று பிரயாக் நகருக்குப் பயணம்  மேற்கொள்ளும் பிரதமர் திரு நரேந்திர மோடி பிற்பகல் 1 மணியளவில் 2 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்.

 தேவைப்படும் திறன்கள், ஊக்கத் தொகை, நிதி ஆதாரங்கள் வழங்குவதன் மூலம், பெண்களுக்கு, குறிப்பாக அடித்தள நிலையில் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் எனும் பிரதமரின் தொலைநோக்கு திட்டத்தின் படி இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பெண்களுக்கு உதவி செய்யும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக சுமார் 16 லட்சம்  பெண் உறுப்பினர்கள் பயனடையும் வகையில் மகளிர் சுயஉதவி குழுக்களின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.1000  கோடியைப் பிரதமர் பரிவர்த்தனை செய்யவுள்ளார்.

ஒவ்வொரு சுயஉதவி குழுவுக்கும் ரூ.1.10 லட்சம் என 80,000 சுயஉதவிக் குழுக்கள் சமூக முதலீட்டு நிதியையும், ஒவ்வொரு சுயஉதவி குழுவுக்கும் ரூ.15,000 என 60,000 சுயஉதவிக் குழுக்கள் சுழற்சி நிதியையும் பெறவுள்ளன. தீன்தயாள் அந்தியோதயா திட்டம்-தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் மூலம் இந்தப் பரிவர்த்தனை நடைபெறும்.

தோழிகள் எனப்படும் வணிகத் தொடர்பாளர்கள் 20,000 பேரின் வங்கிக் கணக்கில் முதல் மாத உதவித் தொகையான ரூ.4,000 பிரதமரால் பரிமாற்றம் செய்யப்படுவதன் மூலம் தோழிகள் எனப்படும் வணிகத் தொடர்பாளர்கள் ஊக்கப்படுத்தப்படுவதையும் இந்த நிகழ்ச்சியில் காண முடியும். அடித்தள நிலையில் உள்ளவர்களுக்கு வீடுகளுக்கே சென்று நிதியுதவி செய்யும் பணியை தோழிகள் எனப்படும் வணிகத் தொடர்பாளர்கள் தொடங்கவிருக்கும் நிலையில், அவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.4,000 உதவித் தொகையாக வழங்கப்படும். இதனால்  தங்களின் பணியில்  அவர்கள் ஊக்கம் பெறுவார்கள். பின்னர் பரிவர்த்தனைகள் மூலம் பெறும் கமிஷன் தொகையால் வருவாய் ஈட்டத் தொடங்குவார்கள்.

 இந்த நிகழ்ச்சியின் போது 1 லட்சத்திற்கும் அதிகமான முதலமைச்சரின் மகளிர் நல்வாழ்வுத் திட்ட பயனாளிகளுக்கு  மொத்தம் ரூ.20 கோடி  பணப்பரிவர்த்தனையையும்  பிரதமர் செய்வார். இந்த திட்டத்தின்படி பெண் குழந்தையின் வாழ்க்கையில் பல்வேறு படி நிலைகளில் நிபந்தனைக்கு உட்பட்டு பணப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ.15,000 பரிவர்த்தனை செய்யப்படுகிறது. குழந்தை பிறக்கும் போது (ரூ.2,000), ஓராண்டு தடுப்பூசி செலுத்துவது நிறைவடையும் போது (ரூ.1,000), ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படும் போது (ரூ.2,000), ஆறாம் வகுப்பில் சேர்க்கப்படும் போது (ரூ.2,000), ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப்படும் போது (ரூ.3,000), பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த பின் பட்டம் / பட்டய வகுப்பில் சேரும் போது (ரூ.5,000) என இந்த படி நிலைகள் உள்ளன.

202 ஊட்டச்சத்து தயாரிக்கும் துணை அமைப்புகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்த அமைப்புகளுக்கு சுயஉதவிக் குழுக்கள் நிதியுதவி செய்கின்றன. ஒவ்வொன்றும் சுமார் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ளன. உத்தரப்பிரதேசத்தின் 600 ஒன்றியங்களில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூடுதல் சத்துணவை இந்த அமைப்புகள் வழங்கும்.

                                   *****



(Release ID: 1783351) Visitor Counter : 229