பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டிசம்பர் 19 ஆம் தேதி கோவா செல்லும் பிரதமர், கோவா விடுதலை தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் ‘ஆபேரேஷன் விஜய்’-யில் பங்கேற்ற வீரர்களை பிரதமர் கவுரவிக்கிறார்

கோவா விடுதலைக்கான சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, புனரமைக்கப்பட்ட அகுவாடா கோட்டை சிறை அருங்காட்சியகத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்

கோவாவில் ரூ.650 கோடிக்கும் மேல் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்

நாடு முழுவதும் அதிநவீன மருத்துவக்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின்படி, கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் புதிய தெற்கு கோவா மாவட்ட மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு தொடங்கப்படுகிறது

Posted On: 17 DEC 2021 4:34PM by PIB Chennai

டிசம்பர் 19-ம் தேதி கோவா செல்லும் பிரதமர் திரு நரேந்திர மோடி, கோவாவில் உள்ள டாக்டர் ஷ்யாமபிரசாத் முகர்ஜி விளையாட்டரங்கில் பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறும் கோவா விடுதலை தினக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் விழாவில் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் ‘ஆபரேஷன் விஜய்”-யில் பங்கேற்ற வீரர்களை பிரதமர் கவுரவிக்க உள்ளார். போர்ச்சுகீசிய ஆட்சியாளர்களிடமிருந்து கோவாவை விடுவிக்க இந்திய ஆயுதப்படைகள் மேற்கொண்ட ‘ஆபரேஷன் விஜய்” வெற்றி பெற்றதைக் குறிக்கும் விதமாக ஆண்டுதோறும்  டிசம்பர் 19-ம் தேதி  கோவா விடுதலை தினம் கொண்டாடப்படுகிறது.

புனரமைக்கப்பட்ட அகுவாடா சிறை அருங்காட்சியகம் , கோவா மருத்துவக் கல்லூரி, புதிய தெற்கு கோவா மாவட்ட மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு மோபா விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து திறன் மேம்பாட்டு மையம் மற்றும் மர்மகோவா, தபோலிம் – நாவ்லிம்-ல் எரிவாயுவால் இயங்கும் துணை மின்நிலையம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளார்.   கோவாவில்,  இந்திய பார் கவுன்சில் அறக்கட்டளையின், சட்டக்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான இந்திய சர்வதேச பல்கலைக்கழகத்துக்கும் அவர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

நாடுமுழுவதும் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், உயர்தர மருத்துவ வசதிகளை வழங்கவும் பிரதமர் அயராத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  இந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பிரதமரின் ஸ்வஸ்திய சுரக்சா திட்டத்தின் கீழ் சுமார் ரூ.380 கோடி செலவில் இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு கட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கோவா மாநிலத்திலும் இந்த மருத்துவமனைதான் உயர்தர சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சைகளை வழங்கக் கூடிய ஒரே அதிநவீன சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனை, ஆஞ்சியோபிளாஸ்டி, பைபாஸ் அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, டயாலிஸிஸ் போன்ற  சிறப்பு சிகிச்சைகளை வழங்கும். இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவில், பிஎம் கேர்ஸ் நிதியத்தின் கீழ், 1,000 எல்பிஎம் பிஎஸ்ஏ (ஆக்சிஜன் உற்பத்தி) ஆலையும் அமைக்கப்பட்டுள்ளது.  

சுமார் ரூ.220 கோடி செலவில்  கட்டப்பட்டுள்ள புதிய தெற்கு கோவா மருத்துவமனையில், 33 மருத்துவப் பிரிவுகளில் புறநோயாளிகள் மருத்துவ சேவை, அதிநவீன நோய் கண்டறியும் பிரிவு, மற்றும் பரிசோதனைக் கூடங்கள் மற்றும் பிசியோதெரபி, ஆடியோமெட்ரி உள்ளிட்ட அதிநவீன மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள், 5,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ மருத்துவ ஆக்சிஜன் டேங்க் மற்றும் 600 எல்பிஎம் திறன் கொண்ட இரண்டு பிஎஸ்ஏ ஆலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. 

ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ், அகுவாடா கோட்டை சிறை அருங்காட்சியகத்தை பாரம்பரிய சுற்றுலாத்தலமாக மாற்றும் பணிகள் ரூ.28 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  கோவா விடுதலை பெறுவதற்கு முன்பாக, சுதந்திரப் போராட்ட வீரர்களை சித்ரவதை செய்து கொடுமைப்படுத்துவதற்காக அகுவாடா கோட்டை  பயன்படுத்தப்பட்டது. இந்த அருங்காட்சியகம் கோவா விடுதலைக்காக போரிட்ட பிரபல சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பு மற்றும் தியாகங்களை சித்தரிப்பதாக அமைவதுடன் அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்துவதாகவும் இருக்கும்.  

புதிதாக அமைக்கப்படும் மோபா விமான நிலையத்தில் சுமார் ரூ.8.5 கோடி செலவில்  கட்டப்பட்டுள்ள விமானப் போக்குவரத்து திறன் மேம்பாட்டு மையம், 16 வகையான பணிகளுக்கு உரிய பயிற்சிகளை வழங்கும்.  இங்கு பயிற்சி பெறுவோர் மோபா விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரும்போது இங்கும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள  பிற விமான நிலையங்களிலும் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற முடியும்.

மர்மகோவா, தபோலிம் – நாவ்லிம்-ல் சுமார் ரூ.16 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள எரிவாயு அடிப்படையிலான துணை மின்நிலையம், மத்திய மின்துறையின் ஒருங்கிணைந்த மின்சார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இது தாவோர்லிம், நேசாய், நாவ்லிம், அக்யூம்பைக்ஸோ மற்றும் டெலோலிம் கிராமங்களுக்கு நிலையான மின்சார விநியோகத்தை வழங்கும்.

இந்திய பார் கவுன்சில் அறக்கட்டளையின் சட்டக்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான இந்திய சர்வதேச பல்கலைக்கழகம், கோவாவை உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பகல்வி மையமாக  மாற்றியமைக்கும் அரசின் தொலைநோக்குப்  பார்வைக்கு ஏற்ப உருவாக்கப்படும்.

போர்ச்சுகீசிய ஆட்சியாளர்களிடமிருந்து கோவாவை விடுவித்த இந்திய ஆயுதப்படைகளை நினைவு கூரும் விதமாக சிறப்பு அஞ்சல் உறை மற்றும் சிறப்பு வடிவமைப்புடன் கூடிய முத்திரையை பிரதமர் வெளியிட உள்ளார். வரலாற்றின் இந்த சிறப்பு அத்தியாயம், சிறப்பு அஞ்சல் உறையில் இடம் பெறுவதுடன், ‘ஆபரேஷன் விஜய்’-யின் போது தங்களது இன்னுயிரை ஈந்த தீரமிக்க ஏழு இளம் மாலுமிகள் மற்றும் பிற வீரர்களின் நினைவாகக் கட்டப்பட்ட இந்திய கடற்படைக் கப்பல், கோமந்தக்கில் உள்ள போர் நினைவுச் சின்னத்தை பிரதிபலிப்பதாக சிறப்பு முத்திரை இடம் பெறும். பத்ராதேவியில் உள்ள ஹூத்தத்மா ஸ்மாரக்கை சித்தரிக்கும் ‘மை ஸ்டாம்ப்’யும் பிரதமர் வெளியிட உள்ளார். இது கோவா விடுதலை இயக்கத் தியாகிகளின் தலைசிறந்த தியாகத்திற்கு மரியாதை செலுத்துவதாக இருக்கும். கோவா விடுதலைப் போராட்டத்தின் போது நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளை சித்தரிக்கும் படங்கள் அடங்கிய படத்தொகுப்பான ‘மேக்தூத் அஞ்சல் அட்டை’ பிரதமருக்கு வழங்கப்பட உள்ளது.

சிறந்த ஊராட்சி / நகராட்சிகள், ஸ்வயம்பூர்ண கோவா திட்டத்தின் ஸ்வயம்பூர்ண நண்பர்கள் மற்றும் பயனாளிகளுக்கான விருதுகளையும் பிரதமர் வழங்க உள்ளார்.

தமது இந்தப் பயணத்தின் போது பிற்பகல் 2.15 மணி அளவில் பனாஜி, ஆசாத் மைதானத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். பிற்பகல் 2.30 மணி அளவில்  பனாஜி, மிராமரில் பாய்மர அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பிரதமர் பங்கேற்க உள்ளார்.

-------

 


(Release ID: 1782793) Visitor Counter : 256