குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

டாக்காவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராம்னா காளி கோயில், இந்தியா மற்றும் பங்களாதேஷ் மக்களிடையே ஆன்மீக, கலாச்சார பிணைப்பின் அடையாளமாக இருக்கிறது : குடியரசுத் தலைவர் கோவிந்த்


பங்களாதேஷ் பயணத்தின் நிறைவு நாளில் இந்திய சமூகத்தினர் மற்றும் பங்களாதேஷில் உள்ள இந்தியாவின் நண்பர்கள் அமைப்பில் இந்தியக் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்

Posted On: 17 DEC 2021 1:46PM by PIB Chennai

பங்களாதேஷ் பயணத்தின் நிறைவு நாளில் (டிசம்பர் 17, 2021)  குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் டாக்காவில் இந்திய சமூகத்தினர் மற்றும் இந்தியாவின் நண்பர்கள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதற்கு பங்களாதேஷுக்கான ஹை கமிஷனர் திரு விக்ரம் கே துரைசாமி ஏற்பாடு செய்திருந்தார்.

இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னால் டாக்காவில் புதுப்பிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ராம்னா காளி கோயில் தொடக்க நிகழ்வில் பங்கேற்ற பெருமையைத் தாம்  கொண்டிருந்ததாக அங்கு கூடியிருந்தோரிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர்  தெரிவித்தார். விடுதலைப் போரின் போது பாகிஸ்தான் படைகளால் அழிக்கப்பட்ட இந்தக் கோயிலைப் புனரமைக்க பங்களாதேஷ் மற்றும் இந்தியாவின் அரசுகளும், மக்களும் உதவி செய்தனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.  இந்தியா மற்றும் பங்களாதேஷ் மக்களிடையே ஆன்மீகம் மற்றும் கலாச்சார பிணைப்பின் அடையாளமாக இந்தக் கோயில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

 பங்களாதேஷில் உள்ள இந்திய சமூகத்தைப் பாராட்டிய குடியரசுத் தலைவர், பங்களாதேஷின் பல்வேறு முக்கியத் துறைகளில் அவர்கள் முத்திரையை பதித்திருக்கிறார்கள் என்றார். பங்களாதேஷின் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்திருப்பதோடு இந்தியா- பங்களாதேஷ் இடையேயான நீடித்த, நெருக்கமான உறவுகளையும் அவர்கள் இணைத்திருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

தனித்துவமான இந்த ஆண்டில் பங்களாதேஷ் சுதந்திரப் போரின் பொன் விழாவையும், வங்கபந்துவின் நூற்றாண்டு விழாவையும் நமது நட்புறவின் 50-வது ஆண்டினையும், இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டினையும் நாம் கொண்டாடுகிறோம். நமது நாடுகளின் அடித்தளமாக இருந்த தலைவர்களின் கனவுகளை நிறைவேற்ற நம்மை நாமே மறு அர்ப்பணம்  செய்து கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் :  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782586

***


(Release ID: 1782661) Visitor Counter : 278