பாதுகாப்பு அமைச்சகம்
1971-ல் இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்திய வெற்றியின் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் நினைவு அஞ்சல் தலையைப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிட்டார்
Posted On:
16 DEC 2021 1:35PM by PIB Chennai
1971-ல் இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்திய வெற்றியின் பொன்விழாவைக் குறிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறையின் சிறப்பு நாள் உரை மற்றும் நினைவு அஞ்சல் தலையை 2021 டிசம்பர் 16 அன்று புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிட்டார். 2020 டிசம்பரில் தொடங்கிய ஓராண்டு கால ‘வெற்றி நாள் பொன்விழா’ கொண்டாட்டங்களின் நிறைவு நாள் இன்று.
1971-ம் ஆண்டு பெரும் எண்ணிக்கையிலான இந்திய விமானப்படை தளங்களின் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் தொடுத்ததால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. இதற்கு விரைந்த பதிலடியாக மேற்கு மற்றும் கிழக்கு முனைகளில் இந்திய ராணுவத்தினர் நிலம், கடல், வான்பகுதி வழியாக தாக்குதல்களை நடத்தினர். இந்திய ராணுவத்தின் எதிர் தாக்குதல் நடவடிக்கையால் கிழக்குப் பாகிஸ்தானின் டாக்காவை அது கைப்பற்ற வழிவகுத்தது. இதனால் சுமார் 93,000 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சரணடைந்தனர். இதைத் தொடர்ந்து பங்களாதேஷ் என்ற சுதந்திர தேசம் உருவானது. இரண்டாம் உலகப்போருக்கு பின் இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் ராணுவ வீரர்கள் சரணடைந்த சம்பவமாக இது இருந்தது.
இந்திய துணைக்கண்ட வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வை இன்று வெளியிடப்பட்ட அஞ்சல் தலை நினைவு படுத்துகிறது. இதன் நடுவே ‘வெற்றிநாள் பொன் விழா’ சின்னம் உள்ளது. இதனை இந்தியக் கப்பற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் குஷால் சந்திரசேகர் வடிவமைத்தார். 2020 அக்டோபர்-நவம்பரில் நடைபெற்ற அகில இந்திய போட்டியில் இது தெரிவு செய்யப்பட்டது.
இன்றைய நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் திரு அஜய் பட், தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் திரு தேவுசின் சௌகான், ராணுவத் தளபதி ஜென்ரல் மனோஜ் முகுந்த் நரவானே, கப்பற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி, பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார் மற்றும் மூத்த சிவில், ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782159
****************
(Release ID: 1782244)
Visitor Counter : 212