வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

துணைக் கண்டத்தை மாற்றுவதற்கு அண்டை நாடுகளின் அமைச்சர்கள் சேர்ந்து பாடுபட வேண்டும் என திரு.பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்

Posted On: 14 DEC 2021 3:24PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளித் துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் இன்று அண்டை நாடுகளின் சக அமைச்சர்கள் இணைந்து துணைக் கண்டத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். புதுதில்லியிலிருந்து காணொலி மூலம் சிஐஐ: கூட்டாண்மை உச்சிமாநாட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

தென்னாப்பிரிக்க சுங்க யூனியனில் இடம் பெற்றுள்ள போர்ட்ஸ்வானா நமிபியா, தென்னாப்பிரிக்கா, சுவாசிலாந்து, லெசோதோ ஆகிய நாடுகளுடன் இந்தியாவின் பொருளாதார உறவுகள் வலுவடைய வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தினார்.

ஐக்கிய அரபு குடியரசு, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன். இஸ்ரேல், ஆஸ்திரேலியா, கனடா, ரஷ்யா, ஓமன் ஆகிய நாடுகளுடன் வர்த்தக கூட்டணியை அதிகரிக்க இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இந்தியா வலுவான நம்பிக்கையான நாடாக உருவெடுத்தது என்றும், சர்வதேச அளவில் சிறந்த பங்களிப்பை இந்தியா அளித்துள்ளது என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார். பெருந்தொற்று காலத்தில் இந்தியா முக்கிய மருத்துவ விநியோகம் பிபிஇ உபகரணங்கள் பரிசோதனைக்கருவிகள், முகக்கவசங்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதுடன், முக்கிய தேவை நிலவிய நாடுகளுக்கு விநியோகமும் செய்ததாக அவர் கூறினார். இதே போல தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு இதுவரை 1.3 பில்லியன் டோஸ் தடுப்பூசிகளை ஏற்கனவே செலுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சியின் பாதை உறுதித்தன்மை ஈடுபாட்டிலேயே உள்ளது என்று கூறிய திரு.கோயல், ஜி-20 பிரகடனத்தின் வளரும் நாடுகளின் குரலை ஓங்கி ஒலிக்க இந்தியா உதவியதாக தெரிவித்தார்.

இந்தியா அதிக முதலீடுகள் அதிக ஏற்றுமதியுடன் இரண்டாம் காலாண்டில் 8.4 சதவீத ஜிடிபி வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறிய அவர், சக நாடுகள் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்து பொருளாதாரத்தையும், வேலைவைாய்ப்பையும் உருவாக்குமாறு அமைச்சர்களை கேட்டுக் கொண்டார்.

இந்த உச்சி மாநாட்டில் கத்தார் பூட்டான், எத்தியோபியா, ஃபிஜி, மாலத்தீவுகள், மொரிஷீயஸ், மியான்மர், இலங்கை, கம்போடியா, இத்தாலி ஆகிய நாடுகளில் வர்த்தகத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781322

*******



(Release ID: 1781390) Visitor Counter : 212