சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மருத்துவமனைகளில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்
Posted On:
03 DEC 2021 3:31PM by PIB Chennai
நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சுமார் 2,000 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட, 1,563 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிஎம் கேர்ஸ் நிதியத்திலிருந்து அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ள 1,225 பிஎஸ்ஏ நிலையங்களும் இதில் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இது தவிர, பெட்ரோலியம், எரிசக்தி, நிலக்கரி மற்றும் ரயில்வே துறைகளுக்கு உட்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் கூடுதலாக 281 பிஎஸ்ஏ ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், 57 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களுக்கு வெளிநாட்டு நிதியுதவி கிடைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மாநில அரசுகள் சார்பிலும், அரசு மருத்துவமனைகளில் பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைப்பதுடன், தனியார் மருத்துவமனைகளிலும் இது போன்ற மையங்களை ஏற்படுத்த உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்சத் தேவையாக, பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதை கட்டாயமாக்கி தேசிய மருத்துவ ஆணையம் விதிமுறைகளைத் திருத்தியிருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
****
(Release ID: 1777837)