சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

உயர்மட்ட கூட்டத்தில் மத்திய உள்துறை செயலர் தலைமை வகித்தார்


உருவாகும் நிலைமையை இந்திய அரசு தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது

Posted On: 28 NOV 2021 7:02PM by PIB Chennai

உலகப் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், முழுமையான அரசு, முழுமையான சமுதாயம் என்னும் அணுகுமுறையுடன் மத்திய அரசு முன்னணியில் இருந்து வருகிறது. கோவிட் மேலாண்மையை வலுப்படுத்தும் முயற்சியாக, தற்போதைய நிலைக்கு ஏற்ற வகையில் பொது சுகாதாரத்தில் கவனம் செலுத்துமாறு அனைத்து மாநில/யூனியன் பிரதேச அரசுகளையும் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கோவிட்-19 தொற்றின் புதிய உருமாற்ற ஒமிக்ரான் தொற்று ( பி.1.1529) கவலைக்குரியது என்று உலக சுகாதார அமைப்பு  , கூறியுள்ளதையடுத்து அதே போன்ற அணுகுமுறை தேவை என அரசு அறிவுறுத்தியுள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டி, உருவெடுத்து வரும் சூழலில், இந்தியாவின் தயார் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக, மத்திய சுகாதாரத்துறை செயலர், மாநில/யூனியன் பிரதேச அரசுகளுக்கு இம்மாதம் 25,27 ஆகிய தேதிகளில் எழுதிய கடிதத்தின்படிபரிசோதனைகள், கண்காணிப்பு, சுகாதார உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றை அதிகரிக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், இன்று உயர்மட்டக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மத்திய உள்துறை செயலர், ஒமிக்ரான் தொற்று பரவல் குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டார். இந்தக்கூட்டத்தில், பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் விஜய் ராகவன், நிதி ஆயோக் உறுப்பினர்( சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் மற்றும் சுகாதாரம், சிவில் விமானப் போக்குவரத்து உள்ளிட்ட இதர அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்  மேற்கொண்டு கண்காணிப்பை வலுப்படுத்துவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஒமிக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையங்களில் கண்காணிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. விமான நிலையங்களில் பரிசோதனைகளை அதிகரித்து, தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய உலக சூழலுக்கு ஏற்ப, சர்வதேச விமான சேவையை மீண்டும் துவக்குவது குறித்து மறு ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1775895

******



(Release ID: 1775916) Visitor Counter : 200