குடியரசுத் தலைவர் செயலகம்
பதஞ்சலி பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்
Posted On:
28 NOV 2021 3:16PM by PIB Chennai
ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (நவம்பர் 28, 2021) பங்கேற்று உரையாற்றினார்.
இந்த விழாவில் பேசிய குடியரசுத் தலைவர், யோகாவைப் பிரபலப்படுத்துவதில் சுவாமி ராம்தேவ் தீவிரப் பங்களிப்பு செய்திருப்பதாகக் கூறினார். யோகா பயிற்சிகள் மூலம் ஏராளமான சாமானிய மக்களை அவர் பயனடையச் செய்திருக்கிறார். யோகா என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவு அல்லது சமயத்தோடு சம்பந்தப்பட்டது என்று சிலர் தவறாக கருதிக் கொண்டுள்ளனர் ஆனால் அது அப்படி அல்ல என்று குடியரசுத் தலைவர் கூறினார். உண்மையில் யோகா என்பது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒரு நடைமுறையாகும். எனவேதான் யோகா உலகம் முழுவதும் உள்ள அனைத்துத் தரப்பு மக்களாலும் சித்தாந்தங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 2018ல் சுரினாமுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது அந்நாட்டு அதிபருடன் இணைந்து சர்வதேச யோகா தினம் கொண்டாடியதை அவர் நினைவுகூர்ந்தார். யோகா துறையின் பங்களிப்புக்காக அராப் யோகா அறக்கட்டளையின் நிறுவனர் திருமதி நௌஃப் மர்வாய்க்கு 2018ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார். எனது நம்பிக்கையின் படி யோகா எல்லோருக்குமானது; எல்லோருடையது என்று அவர் கூறினார்.
நவீன மருத்துவ விஞ்ஞானம் பல கருவிகளின் உதவியுடன் சிகிச்சைத் துறையில் மிகச் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இருப்பினும் ஆயுர்வேதமும் யோகா அறிவியலும் இந்தப் பிரபஞ்சம் உருவாக்கிய மிகச்சிறந்த கருவியான மனித உடலைக் கொண்டு ஆழமாக ஆராய்ச்சி செய்துள்ளது. இந்த உடலின் மூலமே சிகிச்சைக்கான சிறந்த வழிமுறைகளை உருவாக்கி உள்ளது . ஆயுர்வேதம் மற்றும் யோகாவின் இலக்கு இயற்கையுடன் மனிதனுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகும் என்று அவர் கூறினார். இந்த நல்லிணக்கத்திற்கு நாம் அனைவரும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையை ஏற்பதும் இயற்கையின் விதிகளை மீறாமல் இருப்பதும் அவசியமாகும். இயற்கைப் பொருட்களை பயன்படுத்துவது அனைவருக்கும் நலம் பயப்பதாகும்.
பதஞ்சலி பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்களுக்கென்று தனியாக ஒரு பிரிவு அமைக்கப்பட்டிருப்பது குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இதன் மூலம் இந்திய மாண்புகளும் பாரம்பரிய ஞானமும் உலகம் முழுவதும் பரவும் என்று அவர் கூறினார். 21ஆம் நூற்றாண்டின் புதிய இந்தியா உருவாவதற்கு இந்தப் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பங்களிப்பாக இது இருக்கும் என்று அவர் கூறினார்.
பதஞ்சலி பல்கலைக்கழகத்தில் மாணவர்களை விட மாணவியர் எண்ணிக்கை அதிகம் இருக்கும் நிலையை சுட்டிக்காட்டிய குடியரசுத் தலைவர் நமது புதல்விகள் பாரம்பரியத்தின் அடிப்படையில் நவீன கல்வியைப் பரவலாக்குவதில் முன்னணிப் பாத்திரம் வகிப்பது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்று கூறினார். இந்த மாணவிகளிடம் இருந்து நவீன யுகத்தில் கார்கி, மைத்ரேயி, அபாலா, ரொமாஷா,
லோபமுத்ரா போன்றவர்கள் உருவாவார்கள் என்றும் இவர்கள் உலக அரங்கில் இந்திய அறிவின் மேன்மையை நிலை நிறுத்துவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1775821
******
(Release ID: 1775876)
Visitor Counter : 254