பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

டில்லிஹாட்டில் பழங்குடியினர் இந்தியா ஆதிப் பெருவிழாவில் ட்ரைபெட் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தால் தூதரக அதிகாரிகள் தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

Posted On: 28 NOV 2021 11:47AM by PIB Chennai

உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு மற்றும் தற்சார்பு இந்தியாவைக் கட்டமைத்தல் என்ற பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்திற்கேற்பவும் பழங்குடியினரின் வளமான பாரம்பரியத்தை சர்வதேசப் பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்யவும் மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து பழங்குடியினர் இந்தியா

ஆதிப்பெருவிழாவில் 2021 நவம்பர் 27, சனிக்கிழமையன்று பழங்குடியினர் இந்தியா மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் இந்தியாவில் உள்ள 20க்கும் அதிகமான வெளிநாட்டுத் தூதரகங்களைச் சேர்ந்த சுமார் 100 அதிகாரிகளும் இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிற அமைச்சகங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

போலந்து, கிரிபாட்டி, தென்கொரியா, மெக்சிகோ, தாய்லாந்து, லாவோஸ், சுவிட்சர்லாந்து, பங்களாதேஷ், மாலத்தீவுகள், அமெரிக்கா, பிரேசில் போன்ற ஒரு சில நாடுகள் உட்பட 20க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் பங்கேற்றவர்களில் அடங்குவர். ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதிலுமிருந்து வந்திருந்த பழங்குடி கைவினைக் கலைஞர்களின் அரங்குகளை இந்தப் பிரமுகர்கள் பார்வையிட்டனர். தனித்துவமான கைவினைப்பொருட்கள் மற்றும் பாரம்பரியங்கள் பற்றி அறிந்துகொள்ள அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததை இது காட்டியது. பாரம்பரிய நெசவுத் துணிகள் முதல் ஆபரணங்கள் வரை, ஓவியங்கள் முதல் பொம்மைகள் வரை என 200க்கும் அதிகமான அரங்குகளில் பொருள்கள் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பிரமுகர்கள் பழங்குடியினர் கலைகள் மற்றும் கைவினைப் பொருள்களில் பார்வையை செலுத்தினர். கூடுதலாக மட்பாண்டங்கள், லாக் வளையல்கள், கோண்ட் ஓவியங்கள் மற்றும் பழங்குடியினக் கைவினைப் பொருள்கள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதற்குக் கைவினைக் கலைஞர்களால் செயல்முறை விளக்கம் தரப்பட்டது. இந்த நிகழ்வில் பழங்குடியினக் கைவினைக் கலைஞர்களின் பொம்மலாட்ட நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள், கலாச்சாரம், வர்த்தகம் ஆகிய உணர்வின் கொண்டாட்டமான இந்த ஆதிப்பெருவிழா, புதுதில்லியில் உள்ள டில்லிஹாட்டில் நவம்பர் 30 வரை நடைபெறவுள்ளது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1775782



(Release ID: 1775826) Visitor Counter : 161