பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

நாகாலாந்தின் வோகா-வில் உள்ள வன நிதி தொகுப்புகள், பழங்குடியின தொழில்முனைவோருக்கு உதவிகரமாக திகழ்கின்றன

Posted On: 26 NOV 2021 11:14AM by PIB Chennai

உறுப்பினர்கள் அதிக வருவாய் ஈட்டுவதற்கு, தொகுப்பு வளர்ச்சி மற்றும் மதிப்புக் கூட்டுதல் எவ்வாறு உதவுகிறது என்பதற்கு,  நாகாலாந்தின் பழங்குடியின தொழில்முனைவு, நாட்டிற்கே சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.   மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் TRIFED  எனப்படும் பழங்குடியினர் கூட்டமைப்பு, மாநில அரசுகளுடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ள பிரதமரின் வன நிதித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பல்வேறு தொகுப்புகளில் இதுவும் ஒன்று.   பழங்குடியினர் தங்களது தொழிலை விரிவுபடுத்தி, வருவாயை அதிகரித்துக்கொள்ள, அவர்களுக்கு,  நிதி மூலதனம், பயிற்சி, வழிகாட்டுதல் போன்றவற்றை வழங்கி அதிகாரமளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். 

நாகாலாந்து தேனி வளர்ப்பு மற்றும் தேன் இயக்கம், மாநிலத்தில் தேன் உற்பத்திக்கான செயல்பாட்டு முகமையாகத் திகழ்வதுடன், மேற்குறிப்பிட்ட தொகுப்புகளை செயல்படுத்தும் முகமையாகவும் உள்ளது.   மலைப்பகுதி துடைப்பம்,  சிப்பிக் காளான், இஞ்சி மற்றும் பித்தப்பை கொட்டை போன்ற, பிற வகையான சிறு வன உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான  அரசு அமைப்பாகவும் இந்த முகமை திகழ்கிறது. 

TRIFED நிறுவனத்தின் முயற்சிகள் வாயிலாக, குறைந்தபட்ச ஆதரவு விலை மூலம், “சிறு வன உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான நடைமுறை மற்றும் சிறு வன உற்பத்திப் பொருட்களுக்கான மதிப்புச் சங்கிலி மேம்பாடு”  பழங்குடியினரின் சூழலியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  மத்திய – மாநில அரசுகளின் நிதியைப் பயன்படுத்தி, நாடு முழுவதும் ரூ.30 கோடி அளவிற்கு மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் அளவு தற்போது, ரூ.1,843 கோடி அளவிற்கு அதிகரித்துள்ளது.  வன் தன் பழங்குடியினர் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்,  வனப்பொருட்களை சேகரிக்கும் பழங்குடியினர்,  வனப்பகுதிகளில் வசிப்போர் மற்றும் பழங்குடியின கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முக்கிய ஆதாரமாக உருவெடுத்துள்ளன.  

நாகாலாந்தில் மட்டும்,  285 வன் தன் சுய உதவிக் குழுக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு,  19 வன் தன் வளர்ச்சி மையங்களாக உட்படுத்தப்பட்டு,  வோகா உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.   இந்த வளர்ச்சி மையங்கள்,  மலைத் தேன், நெல்லிக்காய், பித்தப்பை கொட்டை, இஞ்சி, மஞ்சள், மலைத் துடைப்பம், சிப்பிக் காளான், ரோசெல் மற்றும் ஸாந்தோசைலம் போன்றவற்றை உற்பத்தி செய்து, சந்தைப்படுத்துவதன் மூலம், இந்த மையத்தில் இணைந்துள்ள 5,700 உறுப்பினர்களுக்கு பயனளித்துள்ளது.   இது, நாகாலாந்தின் பழங்குடியின சமுதாயத்தினரின் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தலுக்கு உதவியுள்ளது.

********



(Release ID: 1775415) Visitor Counter : 158