மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
நுண்ணுயிர் எதிர்ப்பை எதிர்கொள்வதற்கான தேசிய செயல் திட்டம் குறித்த பங்குதாரர் பயிலரங்கில் அமைச்சர்கள் திரு ருபாலா, டாக்டர் எல் முருகன் பங்கேற்பு
Posted On:
23 NOV 2021 4:02PM by PIB Chennai
நுண்ணுயிர் எதிர்ப்பை எதிர்கொள்வதற்கான தேசிய செயல் திட்டம் குறித்த பங்குதாரர் பயிலரங்கை ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்புடன் இணைந்து மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை நடத்தியது.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ருபாலா, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் மற்றும் உயரதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
உலக நுண்ணுயிர் எதிர்ப்பை விழிப்புணர்வு வாரம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 18 முதல் 24 வரை அனுசரிக்கப்படுகிறது. விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், நுண்ணுயிர்
எதிர்ப்பை எதிர்கொள்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது தொடர்பான உலகளாவிய செயல் திட்டத்தை உலக சுகாதார நிறுவனம் 2015-ல் தலைமையேற்று உருவாக்கியது. 2017 முதல் 2021 ஆண்டு வரையிலான தேசிய செயல் திட்டத்தை தொடங்கிய முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். செயல் திட்டத்தின் படி பல நடவடிக்கைகள் பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
"வேகமாக பரவும் நோய்களுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை பெருந்தொற்று வலியுறுத்தியுள்ளது. தரமான மனித சுகாதார அமைப்புகள் மற்றும் முன்முயற்சிகளை உறுதி செய்வதற்கான நமது முயற்சிகளுடன் சுற்றுச்சூழல் நலன் மற்றும் விலங்குகளின் நலன் ஆகியவற்றையும் நாம் கவனிக்க வேண்டும். ஜூனோடிக் நோய் தோன்றுவதற்கு விலங்குகள் முக்கிய காரணமாக இருப்பதால், மாநில, பிராந்திய மற்றும் தேசிய அளவில் ஒட்டுமொத்த விலங்கு சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் திறனை வலுப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை,” என்று நிகழ்ச்சியின் தொடக்க அமர்வில் உரையாற்றிய திரு ருபாலா கூறினார்.
விழிப்புணர்வை உருவாக்குதல், ஆயுர்வேத நடைமுறைகளுடன் அனைவருக்கும் நல்வாழ்வைக் கடைப்பிடித்தல் மற்றும் ‘ஸ்வச்சதா-சே-பவித்ரதா’ என்ற நோக்கத்துடன் தூய்மையை உறுதிப்படுத்துதல் ஆகிய 3 முக்கிய பகுதிகளின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அமைச்சர், “அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். சுகாதார கட்டமைப்பை திறம்பட செயல்படுத்துவதற்கு முழு ஆதரவையும் உறுதியளிக்கிறேன்," என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1774242
****
(Release ID: 1774380)
Visitor Counter : 414