பிரதமர் அலுவலகம்
உ.பி. மகோபாவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
Posted On:
19 NOV 2021 6:16PM by PIB Chennai
பாரத் மாதா கி ஜே!
பாரத் மாதா கி ஜே!
உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் பட்டேல் அவர்களே, கர்மயோகி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களே, சகோதர, சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம்!
சகோதர, சகோதரிகளே, இன்று தொடங்கப்படும் இந்த திட்டங்கள், இப்பிராந்தியத்தின் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்ப்பதுடன், விவசாயிகளுக்கு பெரும் நிம்மதியையும், நிவாரணத்தையும் அளிக்கும். இன்று தொடங்கப்படும் திட்டங்களின் மொத்தச் செலவு ரூ.3250 கோடிக்கும் அதிகம். மகோபா, ஹமீர்பூர், பண்டா, லலித்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 65 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் இப்பகுதி விவசாயிகள் பலனடைவதுடன், குடிநீர் பிரச்சினையும் தீர்க்கப்படும்.
இன்று அடிமைத்தனத்திலிருந்து விழித்துக்கொள்ள தூண்டிய குரு நானக் தேவின் பிரகாஷ் புரப். அத்துடன், இந்தியாவின் தீரமிக்க மங்கை ராணி லட்சுமி பாயின் பிறந்தநாளுமாகும்.
மூடிய அறைக்குள் இருந்தவாறு காலம் தள்ளுவதை விடுத்து, களத்திற்கு வந்து, நாட்டின் மூலை, முடுக்கெல்லாம் சென்று பணியாற்றுவதை கடந்த 7 ஆண்டுகளாக மக்கள் கண்டு வருகின்றனர். நாட்டின் ஏழைத் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் புதல்விகளின் வாழ்க்கையில் பெரிய, அர்த்தமுள்ள மாற்றங்களை கொண்டுவந்துள்ளதை இந்தப்பூமி கண்டுள்ளது. மகோபாவில் இருந்து, முத்தலாக் என்னும் கசப்பான அனுபவத்திலிருந்து இஸ்லாமிய சகோதரிகளை விடுவிப்போம் என உறுதியளித்தோம். இப்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்குதான் உஜ்வாலா 2.0 திட்டம் தொடங்கப்பட்டது.
சகோதர, சகோதரிகளே, நீர்மேலாண்மையில் சிறந்து விளங்கிய இந்தப்பகுதி தண்ணீர் பிரச்சினையின் இருப்பிடமாக ஒரு காலத்தில் மாறியது. முந்தைய அரசுகளின் செயல்பாட்டாலும், ஊழல் நிர்வாகத்தாலும், படிப்படியாக சீர்கேடு அடைந்தது. அதனால், இப்பகுதியைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்ய மற்ற பகுதியினர் தயங்கினர். அந்த நிலை மாறி, உபரி நீரால் இப்பகுதி வளமடைந்துள்ளது.
சகோதர, சகோதரிகளே, புந்தேல்காண்டைக் கொள்ளையடித்ததன் மூலம் தங்கள் குடும்பங்களுக்கு முந்தைய அரசு நன்மை செய்து கொண்டது. உங்கள் குடும்பங்களின் தண்ணீர் பிரச்சினையைப் பற்றி அவர்கள் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. பல பத்தாண்டுகளாக, புந்தேல்காண்ட் மக்கள், தங்களைக் கொள்ளையடிக்கும் அரசுகளைத்தான் நீண்டகாலமாக கண்டு வந்தனர், முதல்முறையாக புந்தேல்காண்ட் மக்கள், இப்பகுதியின் வளர்ச்சிக்காக உழைக்கும் அரசைக் கண்டு வருகின்றனர். முந்தைய அரசுகள் உத்தரப் பிரதேசத்தை கொள்ளையடிப்பதில் களைப்படையவில்லை, உழைப்பதில் நாங்கள் களைப்படைய மாட்டோம்.இந்த மாநிலத்தின் மாஃபியா, புல்டோசரை எதிர்கொண்ட போது, பலர் கதறினர், ஆனால், இந்தக் கூக்குரல்களால் மாநிலத்தின் வளர்ச்சிப் பணி நிற்காது.
விவசாயிகளை எப்போதும் பிரச்சினைகளுக்குள் வைத்திருப்பதே சில அரசியல் கட்சிகளின் அடிப்படை. அவர்கள் பிரச்சினை அரசியலை செய்கின்றனர், நாங்கள் தேசிய தீர்வு கொள்கையைப் பின்பற்றுகிறோம். அனைவருடனும் கலந்தாலோசித்து, கென்-பெட்வா இணைப்புத் தீர்வும் எங்களது அரசால் காணப்பட்டது.
பரம்பரை ஆட்சிகள் விவசாயிகளை பற்றாக்குறையில் மட்டுமே வைத்திருந்தனர். விவசாயிகளின் பெயரில் அவர்கள் அறிவிப்புகளை வெளியிட்டு வந்தனர், ஆனால், ஒரு காசு கூட விவசாயிகளைச் சென்றடையவில்லை. ஆனால், பிஎம் கிசான் சம்மான் நிதியிலிருந்து நாங்கள் இதுவரை ரூ.1,62,000 கோடியை விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக மாற்றியுள்ளோம்.
புந்தேல்காண்டில் இருந்து புலம் பெயர்வதைத் தடுத்து, இந்தப் பிராந்தியத்தை வேலை வாய்ப்பில் தன்னிறைவுப் பெற்றதாக மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது . புந்தேல்காண்ட் விரைவுச்சாலை, உ.பி பாதுகாப்பு தொழில் வழித்தடம் ஆகியவை இதற்கு பெரிய எடுத்துக்காட்டாகும்.
சகோதர, சகோதரிகளே, கர்மயோகிகளின் இரட்டை எஞ்சின் அரசு, இந்தப் பத்தாண்டை, உத்தரப்பிரதேசத்தின் புந்தேல்காண்ட் பத்தாண்டாக மாற்ற பெருமுயற்சிகளை மேற்கொண்டுள்ளது. உங்களது ஆசியுடன் இந்த இரட்டை எஞ்சின் அரசு தொடரும். இந்த நம்பிக்கையுடன், உங்கள் அனுமதி பெற்று, நான் ஜான்சியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு செல்கிறேன். பெருமளவில் இங்கு வந்துள்ள அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
பாரத் மாதாகி ஜே!
பாரத் மாதாகி ஜே!
பாரத் மாதாகி ஜே!
நன்றி!
*****
(Release ID: 1773749)
Visitor Counter : 151
Read this release in:
English
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam