குடியரசுத் தலைவர் செயலகம்
தூய்மை சுதந்திரப் பெருவிழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர், 2021-க்கான தூய்மை கணக்கெடுப்பு விருதுகளை வழங்கினார்
Posted On:
20 NOV 2021 2:14PM by PIB Chennai
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை சார்பில், புதுதில்லியில் இன்று (20.11.2021) நடைபெற்ற தூய்மை சுதந்திரப் பெருவிழாவில் பங்கேற்று உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த், 2021-க்கான தூய்மை கணக்கெடுப்பு விருதுகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நாட்டின் சுதந்திரப் பெருவிழாவை கொண்டாடும் வேளையில், தூய்மை கணக்கெடுப்பு விருதுகளை வழங்குவது இந்தாண்டு முக்கியத்துவம் பெறுவதாக கூறினார். “கடவுளுக்கு அடுத்தபடியாக தூய்மை” என்று தேசப்பிதா மகாத்மா காந்தி கூறி வந்ததை சுட்டிக்காட்டிய அவர், தூய்மை இந்தியா இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியதன் மூலம், காந்தியின் இந்த முன்னுரிமைப் பணிகளை மத்திய அரசு முன்னெடுத்துச் செல்வதாக கூறினார். நாட்டை முற்றிலும் தூய்மையான மற்றும் சுத்தமானதாக மாற்ற முயற்சி மேற்கொள்வதே நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொவிட் பெருந்தொற்று காலத்திலும் தூய்மைப் பணியாளர்களும், துப்புரவுத் தொழிலாளர்களும் அயராது பணியாற்றியதை சுட்டிக்காட்டிய குடியரசுத் தலைவர், பாதுகாப்பற்ற துப்புரவு முறைகளால் துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் கூறினார். கழிவுநீர் தொட்டிகள் மற்றும் செப்டிக் டேங்குகளை இயந்திரம் மூலம் சுத்தம் செய்வதை ஊக்குவிக்க, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையால் 246 நகரங்களில் மேற்கொள்ளப்படும் ‘துப்புரவு பணியாளர் பாதுகாப்பு சவால்’ என்ற திட்டத்தை அவர் பாராட்டினார். இந்தத் திட்டத்தை அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தினார். மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறையை முற்றிலுமாக ஒழிப்பது அரசின் கடமை மட்டுமின்றி, சமுதாயம் மற்றும் குடிமக்களுக்கும் இதில் பொறுப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
திடக்கழிவு மேலாண்மையை திறம்பட மேற்கொள்வதன் மூலமே நகரங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள முடியும் என்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். நாட்டில் உள்ள அனைத்து நகரங்களையும் 2026 ஆம் ஆண்டுக்குள் ‘கழிவு இல்லாத‘ நகரங்களாக மாற்றும் நோக்கில், ‘தூய்மை பாரதம் இயக்கம் – 2.0‘ பிரதமரால் அக்டோபர் 1, 2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டதையும் அவர் எடுத்துரைத்தார். நகரங்கள் குப்பையற்றதாக இருக்க வேண்டுமெனில், வீடுகள், வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை குப்பையில்லாமல் பராமரிப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இந்திய வாழ்க்கைப் பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக உள்ளதாகவும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். தற்போது உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து வருவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்கும் விதமாக, மறு பயன்பாடு மற்றும் மறுசுழற்சியில் கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். ‘கழிவுகளை சொத்தாக்குதல்’ என்ற கருத்தில் இருந்து பல்வேறு சிறந்த உதாரணங்கள் உருவாக்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்கள் இந்த துறையில் தீவிர ஈடுபாடு காட்டி வருவதாகவும் தெரிவித்தார். இத்துறையில் தொழில் முனைவோர் மற்றும் முதலீடுகளை மேலும் ஊக்குவிக்க உரிய திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டுமெனவும் குடியரசு தலைவர் கேட்டுக் கொண்டார்.
****
(Release ID: 1773466)
Visitor Counter : 409