அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
‘டெக் நீவ் @75’-ஐ தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், வெற்றிகரமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களோடு உரையாடினார்
Posted On:
15 NOV 2021 1:36PM by PIB Chennai
விடுதலையின் அமிர்த மகோத்சவத்தின் ஒரு பகுதியாக ‘டெக் நீவ் @75’-ஐ இன்று தொடங்கி வைத்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், பழங்குடி பிரிவுகளால் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளிட்ட வெற்றிகரமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களோடு உரையாடினார்.
பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக 2022-ம் ஆண்டின் இறுதிக்குள் 30 அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு மையங்கள் நிறுவப்படும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்தார்.
சமமான பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதற்கு சமூகத்தை மேம்படுத்துவதில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு மையங்களின் தாக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில் ஒரு வருட கால கொண்டாட்டத்தை டெக் நீவ் நடத்தும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியா 46-வது இடத்தைப் பிடித்துள்ளது என்று கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், கண்டுபிடிப்புகள், அறிவியல் வெளியீடுகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவுகள் ஆகியவற்றில் முதலீடுகள் அதிகரித்து வருவதன் விளைவாக இது ஏற்பட்டுள்ளது என்றார்.
விஞ்ஞானம் உலகளாவியதாக இருந்தாலும், "உள்ளூர் மக்களுக்கான குரல்" என்ற உணர்வில் உள்நாட்டு தீர்வுகளை வழங்குவதற்கு தொழில்நுட்பம் உதவ வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
2014-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியா முன்னேறி வருவதாக கூறிய டாக்டர் சிங், 2015-ல் 81-வது இடத்தில் இருந்த இந்தியா, 2021-ல் 46-வது இடத்திற்கு முன்னேறியதை குறிப்பிட்டார்.
புதிய இந்தியாவுக்கான பிரதமரின் முழக்கமான “ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விக்யான், ஜெய் அனுசந்தன்” குறித்து பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதிலும் மலிவு விலையில் தொழில்நுட்பங்களை வளர்ப்பதிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை இது எதிரொலிக்கிறது என்றார்.
பயனாளிகள் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் காட்டும் நம்பிக்கை மற்றும் திறன்கள், தன்னம்பிக்கையான பாரதத்தை உருவாக்குவதற்கான கிராமப்புற இந்தியாவின் திறமையை நிரூபிக்கின்றன என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1771909
****
(Release ID: 1772075)
Visitor Counter : 243