குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

புதிதாக உருவாகும் உலக நிலைமைகளுக்கு ஏற்ப பல்கலைக்கழகங்கள் அவற்றின் பாடப்பிரிவுகளை ஆய்வு செய்யவும் இணைக்கவும் வேண்டும் – குடியரசு துணைத் தலைவர்

Posted On: 15 NOV 2021 3:58PM by PIB Chennai

புதிதாக உருவாகும் உலக நிலைமைகளுக்கு ஏற்ப பாடப்பிரிவுகளை ஆய்வு செய்யவும் இணைக்கவும் வேண்டும்  அல்லது தேசத்தின் தேவைகளுக்கு ஏற்ப புதிய பாடப்பிரிவுகளைத் தொடங்க வேண்டுமென்று பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களைக் குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.

பெங்களூருவில் இன்று பிஇஎஸ் (PES) பல்கலைக்கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், 4-வது தொழில் புரட்சி நமது கதவுகளைத் தட்டுகிறது என்றும், அதனைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள நமது பல்கலைக்கழகங்கள் புதிதாக உருவாகி வரும் 5ஜி தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, ரோபோ, உயிரி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் கூறினார். தனியார் நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு இந்தியா தற்சார்பு அடைவதையும் விண்வெளித் துறையில் தொழில்நுட்ப ரீதியில் முன்னேறுவதையும் நோக்கிப் பணியாற்ற வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.

பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளில் ட்ரோன் தொழில்நுட்பம் ஏராளமாகப் பயன் தருவதை கவனத்திற்குக் கொண்டுவந்த திரு.நாயுடு, உலகளாவிய ட்ரோன் மையமாக மாறும் ஆற்றலை இந்தியா கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார். இந்தத் துறையில் திறன் வாய்ந்த மனித சக்தியை உருவாக்குவதற்கு அழைப்பு விடுத்த அவர், ட்ரோன் தொழில்நுட்பம் குறித்த பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கு பிஇஎஸ் பல்கலைக்கழகம் தீவிரமாகப் பரிசீலித்து வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

சமகால கோட்பாடுகள் குறித்து உலகளாவிய தரத்தில் இந்தியக் கல்வியாளர்கள் புத்தகங்கள் எழுதுவதற்குப் பாராட்டு தெரிவித்த அவர், இது ஊரக இந்தியாவின், விவசாயிகளின், உரிமைகள் மறுக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளுக்குத் தீர்வாகவும், பாடங்களை நன்கு புரிந்து கொள்ளவும் உதவும் என்று அவர் கூறினார். இந்திய மொழிகளில் பாட நூல்களை எழுத வேண்டுமென்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கர்நாடக ஆளுனர் திரு.தாவர்சந்த் கெலாட், பிஇஎஸ் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் எம்.ஆர்.தொரேசாமி, துணை வேந்தர் டாக்டர் ஜே.சூரிய பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

*****


(Release ID: 1772018) Visitor Counter : 184