பிரதமர் அலுவலகம்
ஜன்ஜாதிய கவுரவ் தினத்தையொட்டி, பிரதமர் நவம்பர் 15-ம் தேதி மத்தியப் பிரதேசம் செல்கிறார்
ஜன்ஜாதிய கவுரவ் மகாசம்மேளனத்தில், ஜன்ஜாதிய சமுதாய நலனுக்காக பல்வேறு முக்கிய முன்முயற்சிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
மத்தியப்பிரதேசத்தில் ‘ ரேசன் ஆப்கே கிராம்’ திட்டத்தை பிரதமர் தொடங்குகிறார்
மத்தியப்பிதேசத்தில் சிகப்பணு சோகை சிகிச்சை திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்
நாடு முழுவதும் 50 ஏகலைவ்யா மாதிரி உண்டு, உறைவிடப் பள்ளிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
Posted On:
14 NOV 2021 4:14PM by PIB Chennai
அமர் ஷாகித் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த தினமான நவம்பர் 15-ம் தேதியை மத்திய அரசு ஜன்ஜாதிய கவுரவ் தினமாகக் கொண்டாடுகிறது. இதனையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி, போபாலின் ஜம்புரி மைதானத்தில் நடைபெறும் ஜன்ஜாதிய கவுரவ் தின மகாசம்மேளனத்தில் கலந்து கொள்வதற்காக மத்தியப் பிரதேசம் செல்கிறார். அங்கு பகல் ஒரு மணியளவில், ஜன்ஜாதிய சமுதாய நலனுக்கான பல்வேறு முன்முயற்சிகளை அவர் தொடங்கி வைக்கிறார்.
ஜன்ஜாதிய கவுரவ் தின மகாசம்மேளனத்தில், பிரதமர், மத்தியப்பிரதேசத்தில் ‘ரேசன் ஆப்கே கிராம்’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார். ஜன்ஜாதிய சமுதாய மக்கள், ரேசன் பொருட்களைப் பெறுவதற்காக நியாய விலைக் கடைகளுக்கு நீண்டதூரம் செல்வதைத் தவிர்க்கும் வகையில், ஒவ்வொரு மாதமும் அந்த மாதத்திற்கான ரேசன் பொருட்களை அவர்களது சொந்தக் கிராமத்திலேயே பெற்றுக்கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மகாசம்மேளனத்தின் போது, மத்தியப் பிரதேச சிகப்பணு சோகை சிகிச்சை திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில், பயனாளிகளுக்கு மரபணு ஆலோசனை அட்டைகளை பிரதமர் வழங்குவார். சிகப்பணு சோகை, தலசீமியா மற்றும் இதர சோகை நோய்களால் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவும், இந்த நோய்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நோய்களின் பாதிப்பு மத்தியப்பிரதேச ஜன்ஜாதிய சமுதாயத்தினர் இடையே அதிக அளவில் காணப்படுகிறது.
ஆந்திரா, சத்திஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, திரிபுரா, தாத்ரா& நாகர் ஹவேலி, டாமன் & டையூ உள்பட நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50 ஏகலைவ்ய மாதிரி உண்டு, உறைவிடப் பள்ளிகளுக்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டுவார்.
ஜன்ஜாதிய சுய உதவிக்குழுக்களால் உருவாக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சியையும் பிரதமர் பார்வையிடுவார். மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஜன்ஜாதிய சமுதாயத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளின் புகைப்பட கண்காட்சியையும் அவர் பார்வையிடுவார். புதிதாக நியமிக்கப்பட்ட, பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள பழங்குடியின பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் பிரதமர் வழங்குவார்.
இந்த நிகழ்ச்சியில், மத்தியப்பிரதேச ஆளுநர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் திரு வீரேந்திர குமார், திரு நரேந்திர சிங் தோமர், திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர்கள் திரு பிரகலாத் பட்டேல், திரு பக்கான் சிங் குலஸ்தே, டாக்டர் எல்.முருகன் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
இந்தப் பயணத்தின் போது, மறுசீரமைக்கப்பட்ட ராணி கமலபதி ரயில் நிலையத்தை திறந்து வைக்கும் பிரதமர், மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு ரயில்வே பணிகளையும் தொடங்கி வைப்பார்.
***
(Release ID: 1771720)
Visitor Counter : 248
Read this release in:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam