குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளைப் பாதுகாக்க செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் முக்கியம்: குடியரசு துணைத் தலைவர்

Posted On: 12 NOV 2021 7:02PM by PIB Chennai

நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளைப் பாதுகாப்பதில் ஊடகங்களின் முக்கியப் பங்கை எடுத்துரைத்த குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, செய்திகளையும் தகவல்களையும் நடுநிலையான முறையில் ஊடகங்கள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

'லாயர்' வார இதழின் 40-வது ஆண்டு விழாவையொட்டி நெல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்ட 'துங்க பண்டுகா' விழாவில் பங்கேற்ற அவர், பத்திரிகை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விழுமியங்கள் சீரழிந்து வருவது குறித்து கவலை தெரிவித்தார். உயர் தரத்தை நிலைநிறுத்தவும், அறம் சார்ந்த பத்திரிகை தொழிலை  ஊக்குவிக்கவும் ஊடகங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

சுதந்திரப் போராட்டத்தின் போது செய்தித்தாள்கள் ஆற்றிய முக்கியப் பங்கை நினைவுகூர்ந்த அவர், மகாத்மா காந்தி உட்பட பல தலைவர்கள் பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்கள் மூலம் சமூக இயக்கங்களை வலுப்படுத்தினர் என்றார். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்  ஊடகங்கள் இன்றும் முக்கியப் பங்காற்றுகின்றன என்று கூறிய அவர், தூய்மை இந்தியா பிரச்சாரத்தை ஒரு பொது இயக்கமாக  எவ்வாறு அவை மாற்றின என்பதை மேற்கோள் காட்டினார்.

உண்மை, ஒருமைப்பாடு மற்றும் துல்லியம் ஆகியவற்றை ஊடகங்கள் எப்போதும் நிலைநிறுத்த வேண்டும் என்று கூறிய திரு நாயுடு, அழுத்தங்களுக்கு அவைகள் அடிபணியக் கூடாது என்றார். விவசாயம், கிராமப்புற மேம்பாடு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான பிரச்சினைகளில் ஊடகங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். விவசாயம் சார்ந்த விஷயங்களுக்கு பிரத்யேக இடங்களையும், நிகழ்ச்சிகளையும் செய்தித்தாள்கள் மற்றும் மின்னணு ஊடகங்கள் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

கொவிட் பெருந்தொற்றின் போது அயராது உழைத்து, கொவிட் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியதன் மற்றும் தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்து மிகவும் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்திய பத்திரிகையாளர் சமூகத்தை, குடியரசு துணைத் தலைவர் பாராட்டினார். பெருந்தொற்றின் போது உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்திய அவர், அவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1771273

****



(Release ID: 1771311) Visitor Counter : 232